Tuesday, 19 April 2016

மாலனும் - நாங்களும்

புத்தகங்களில், வார இதழ்களில், நாளிதழ்களில், நேர்காணல்களில் அறிந்திருந்த மாலன் அவர்களின் பேச்சை நேரில் கேட்கும் வாய்ப்பு சனிக்கிழமை (16-04-2016) கிடைத்தது. அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாலன் கலந்து கொள்ளச் சிங்கப்பூர் வந்திருந்தார். அவருக்குச் சிங்கப்பூர் வருகை முதன்முறை அல்ல, ஆனால் எனக்கோ அவரின் பேச்சை நேரில் கேட்கக் கிடைத்த முதல் வாய்ப்பு! அதனால் தவறவிடக்கூடாது என நினைத்துக் கொண்டேன். நிகழ்ச்சி நடந்த உமறுப்புலவர் அரங்கில் அரங்கமே அதிரும்படியாக காலி இருக்கைகள் சூழ பதினைந்து நூல்களின் வெளியீட்டு விழாவில் இதற்கு முன் கலந்து கொண்டிருந்தேன். இம்முறை அப்படியான துர்பாக்கியம் ஏதும் நிகழ்ந்து விடாமல் அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது, பலரும் இருக்கைகள் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தனர், நல்ல சுவரோர படித்துறையாகப் பார்த்து நான் உட்கார்ந்து கொண்டேன். மேடைப் பேச்சுக்கான எந்த அலங்காரமுமின்றி தனக்குத் தரப்பட்டிருந்த தலைப்பை ஒட்டிய பேச்சாக மட்டுமே அவரின் பேச்சு இருந்தது.

உலக இலக்கியத்தில் சிங்கப்பூர் இலக்கியத்தின் இடம் குறித்த தன் பேச்சில் சிங்கப்பூரின் இலக்கிய நகர்வை மலேசியா, இந்தியா இலக்கிய வளர்ச்சியோடு ஒப்பிட்டு ஒரு தேர்ந்த கட்டுரையாகக் கொடுத்தார். அறுபதுகளில் தொடங்கி தற்போதைய சிங்கப்பூர் இளம் படைப்பாளிகள் வரைக்குமாக அவர் முன் வைத்த செய்திகளுக்கான தேடல்கள் பிரமிக்கத் தக்கவைகளாக இருந்தன. அவருடைய உரையில் சாரங்கபாணி தொடங்கி நவீன சிங்கப்பூரின் இளம் படைப்பாளி ஹரணி வரை தன் பேச்சில் அடையாளப்படுத்தினார், அருமையான உரையை கேட்ட சனிக்கிழமைப் பொழுதின் விடுப்பட்ட சந்தோசத்தை மறுநாள் தந்தது.

தி சிராங்கூன் டைம்ஸ் இதழ் மாலனோடு ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. வருகிறீர்களா கோபி? என அதன் ஆசிரியரும், நண்பருமான ஷாநவாஸ் அவர்கள் ஒரு உள்பெட்டியைச் செய்தியை அனுப்பி வைத்திருந்தார். கரும்பு தின்னக் கூலியா? என அலைபேசியில் வருகையைப் பதிவு செய்திருந்தேன். விடுமுறை தினங்களில் ஞாயிறு எழும் முன்னர் எழும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் இந்த ஞாயிறு (17/04/2016) அன்று அப்படிச் செய்ய முடியவில்லை. அங்மோக்கியோ தக்காளி அறையில் (அறிந்து கொள்ளலில் எனக்கிருக்கும் சோம்பேறித்தனத்தை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துவதைப் போல நிகழ்விற்கு வந்திருந்த நண்பர் ராம்சந்தர் தக்காளி அறைக்கான பெயர்காரணம் குறித்த கேள்வியை என்னிடம் எழுப்பினார்) கலந்துரையாடல் ஏற்பாடாகி இருந்தது. சிங்கப்பூர் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த வழக்கமான நண்பர்களோடு எழுத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். பெண் படைப்பாளிகள் அதிகம் வந்திருந்தனர். "எழுத்தாளன் ஒளிவட்டம் எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை" எனத் தன் பேச்சின் இடையில் கோடி காட்டியதற்கேற்ப எந்த வித பந்தாவுமின்றி கலந்துரையாடலை இயல்பாக நிகழ்த்துவதற்கேற்ப அவரவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டு என்ன படிக்கிறீர்கள்? என்ன எழுதுகிறீர்கள்? எனச் சொல்லுங்கள் என்று மாலன் ஆரம்பித்துக் கொடுத்தார்.

ஒரு சுற்று வந்து முடிவதற்குள் சாப்பாட்டு நேரம் வந்து விட்டது. அறிமுகத்தோடு தங்களுக்கான கேள்விகளையும் முன் வைத்தனர்

விமர்சனங்கள் தரும் தாக்கங்கள், தொடர்ந்து எழுத தடையாக இருக்கும் விசயங்கள் -

சிங்கப்பூர் சூழல் சார்ந்து எழுதும் போது எழும் சிக்கல்கள், அதுவும் புலம் பெயர்ந்து வந்தவர்கள் அப்படி எழுதும் போது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்சனைகள்

இதழ்களில் படைப்புகள் மறுக்கப்படும் நிலை

மாணவர்கள் ஆசிரியர் உறவில் நிகழும் சிக்கல்கள், அதை அவர்களுக்குப் படைப்பின் வழியாகப் புரிய வைக்க தமிழில் எழுதுவதற்கான சாத்தியங்கள்

பதின்ம வயதினரை எதிர்கொள்வதில் இருக்கக்கூடிய வாழ்க்கைச் சிக்கல்கள் - உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் தன் பதில்களைச் சொன்னார். உலக இலக்கியங்கள், தமிழின் முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து மேற்கோள்களையும், சாத்தியங்களையும் சுட்டிக் காட்டினார்.

என் முறை வந்த போது என்னைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஏதுமற்ற நிலையில் இரண்டு கேள்விகளை முன் வைத்தேன்

நாவல் என்ற வடிவம்  மெல்லத் தேய்ந்து குறுநாவல் -  தொடர்கதைகுறுங்கதைசிறுகதைஒருபக்கக்கதை - பத்து செகண்ட் கதை என மாறி விட்ட நிலையில் இலக்கியத்தில் கதைக்கான இடம் இனி எப்படி இருக்கும்? அல்லது இல்லாமலே போகுமா? என்று கேட்டேன்.  

வெகுஜன அச்சு இதழ்களில் மட்டுமே கதைக்கான தேவை குறைந்து விட்டது. அதனாலயே சிறுகதைகளுக்கான தேவை குறைந்து விட்டது எனச் சொல்லி விட முடியாது. இணைய மற்றும் சிறு பத்திரிக்கைகளில் கதைக்கான தேவையும், இடமும் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்றார்

இந்திய பிரதமராக இருந்த .கே. குஜ்ரால் அவர்களிடம் இருந்து தனக்கு வந்த புத்தாண்டு வாழ்த்தை தன் சகோதரியிடம் காட்டிய போது அதை விடப் பெருமையாய் அப்பொழுது ஏவிஎம் நிறுவனம் தொலைக்காட்சித் தொடர் ஒன்றிற்காக நடத்திய போட்டியில் தனக்குக் கிடைத்த பரிசைச் சொல்லிக் கொண்டிருந்ததை மாலனின் பழைய நேர்காணல் ஒன்றிலிருந்து மேற்கோள்காட்டி பெண்கள் தொலைக்காட்சி நிகழ்வுகளின் மீது கொண்டிருக்கும் ஆர்வம் இன்னும் அப்படியே தான் இருக்கிறதா? பெண்களைப் போல தங்களின் பொழுது போக்கிற்கு ஆண்கள் வேறு விசயங்களை நாடிச் சென்று விட்ட நிலையில் வாசிப்புப் பழக்கம் என்பது குறைந்து போய் விட்டதாக நினைக்கிறீர்களா? என இன்னொரு கேள்வியைக் கேட்டேன்

வாசிக்க நேரமில்லை எனச் சொல்வதை தான் ஏற்கவில்லை. விருப்பமிருக்கும் பட்சத்தில் நேரம் என்பது தானாக அமைந்து விடும். அல்லது நேரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும், வாசிப்பின் மீதான விருப்பம் குறைந்திருக்கிறதே ஒழிய அதற்காக நேரமில்லை என்று சொல்வது சரியல்ல என்றார். வாசிப்பு என்பது அவரவர் விருப்பம் சார்ந்த விசயமாக மட்டுமே இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.


அசைவ, சைவ உணவோடு கலந்துரையாடல் திட்டமிட்ட நேரத்தையும் கடந்து போய்க் கொண்டிருந்தது, எல்லா ஞாயிறும் அத்தனை உவப்பாய் அமைந்து விடுவதில்லை. மாலனோடு கலந்துரையாடிய இந்த ஞாயிறு உவப்பாய் மட்டுமல்ல என் வாழ்வின் நினைவறைகளிலும் ஊடேறிக் கிடக்கிறது.

பெரும்பாலான புகைப்படங்களில் இரண்டு தோள்களுக்கிடையே மண்டை மட்டும் தெரிய நிற்கும் என்னைப் பார்க்கும் போது திருடுவதற்காக வந்தவன் பதுங்கி நிற்பதைப் போல இருக்கிறது என நண்பர் சொல்லியது இந்தக் கலந்துரையாடலின் முடிவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்ததும் நினைவில் வந்து போனது. உங்களின் ஞானக் கண்களுக்கு அப்படித் தெரிகிறேனா? தெரிகிறதா? எனப் பார்த்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும்!