Friday 2 October 2015

முன் கையை நீட்டுங்கள்!

தினம் ஒரு தினம் என்பது மாறி தினம் ஒரு கொண்டாட்ட தினமாய் மாறி விட்டது. மேம்போக்காகப் பார்த்தால் இது சந்தோசமான மாற்றமாகத் தெரியலாம். கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் இந்த மாற்றம் நம் அறியாமையின், பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடு என்பதை உணர முடியும். தினங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பல விசயங்களில் முதல் சில இடங்களுக்குள் சுற்றுச்சூழலும் இருக்கிறது. நம்முடைய வாசமும், சுவாசமுமாய் இருக்க உதவும் பூமியை, அதன் அமைப்பை சர்வசாதாரணமாக நாம் இன்று சிதைத்து எறிந்து கொண்டிருக்கிறோம், தொடர்கதையாய் நீண்டு கொண்டிருக்கும் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதற்காகவே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் வருடம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வப்போது உலக நாடுகள் ஒன்று கூடி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அறிவித்து வருகின்றன.

இயற்கை கொடுத்திருக்கும் மிகப்பெரிய கொடையான இந்த பூமியை தெரிந்தும், தெரியாமலும் செயற்கையாய் சிதைத்து இயற்கைச் சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் நம் வாழ்வியலிலும், மற்ற உயிரினங்களின் வாழ்வியல் முறைகளிலும் மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கியபடியே இருக்கிறோம்.

சுற்றுச்சுழல் சீர்கேடு அடைவதற்கான அனைத்து அம்சங்களிலும் அச்சாணியாக இருக்கும் நாம் செய்யக்கூடிய செயல்களினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தாக்கங்களை அறிந்து கொள்வதும், அதன் வழி அவைகளைச் சரி செய்து கொள்வதும் அவசியம். அந்த அவசியம் மட்டுமே அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் சுற்றுப்புறத்தின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும். பெரிய அளவில் சுற்றுச்சூழலை பாதிக்கும் அம்சங்களைப் பற்றியும், அதைக் குறைப்பதில் நம்மாலான பங்களிப்பு முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்வது சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஓரளவிற்காது நமக்குள் ஊடேற்றும்.

மரம் வளர்ப்பு : "நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்" என்பதற்கேற்ப நெல்லுக்குப் பாய்ந்த நீர் புல்லுக்குப் பாய்ந்தால் பரவாயில்லை. ஆனால் நெல்லுக்குப் பாய வேண்டிய நீர் புல்லுக்கு மட்டுமே பாய்ந்தால் அதனால் என்ன பயன்? இன்றைய நிலையும் இப்படியாகத் தான் இருக்கிறது. அழித்தும், அழிக்கப்பட்டும் ஆங்காங்கே சுருங்கிக் கிடக்கும் ஏரிகளில், குளங்களில் தேங்கி நிற்கும் நீரைக் கருவேல மரங்கள் உறிஞ்சி எடுத்து விடுகின்றன. எரிக்க உதவும் கரிக்கு மட்டுமே உதவக்கூடிய மரங்களை அழித்தொழிக்காமல் நம் வாழ்க்கையை சுகமாக்கித் தரும் வேம்பு, அரசு போன்ற சுவாசிக்கும் மரங்களை வெட்டி எரிந்து கொண்டிருக்கிறோம். களைகளை விட்டு விட்டு கதிர்களை பறித்துக் கொண்டிருக்கிறோம்!

வேரும், கிளையும், இலையுமாய் நிற்கும் ஒரு மரங்களை முறித்து விளைநிலங்களை சமதளமாக்கி ஒரு தலைமுறைக்கே துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறோம். கடலின் நீரை மேகம் குடித்து தயாராய் நிற்கிறது. அதைக் குளிர்வித்தால் தானாகவே மழை இறங்கும். ஆனால் அதைக் குளிர்விக்க வைக்கும் மரங்களை நாம் வெட்டி எறிந்து விட்டு முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். வயல்களின் வரப்புகளில், கண்மாய் கரைகளில்  மரங்களையும், அதைப் பாதுகாக்க அதன் மடியில் ஒரு தெய்வ உருவத்தையும் முன்னோர்கள் வைத்த சூட்சுமத்தை இனியேனும் உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

நகர மயமாக்கல்சாலை விரிவாக்கம் என அரசாங்கத்தின் எல்லா உள்கட்டமைப்பு சார்ந்த பணிகளிலும் மரங்கள் மட்டுமே முதலில் பலியாகின்றனஅப்படி அழிக்கப்படும் மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவதற்கும், பராமரிப்பதற்கும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. மரங்களை வளர்க்கும் திட்டங்களை கிராமப் பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், சமூக நல அமைப்புகள், அறக்கட்டளைகள் ஆகியவைகளின் வழி அரசாங்கம் முன்னெடுக்கலாம். இதில் சிறப்பாக பங்கு கொண்டவைகளைக் கண்டறிந்து வருடந் தோறும் அரசாங்கத்தின் சிறப்பு விருது தரலாம், அமைப்புகள் கூடுதல் உற்சாகத்தோடு செயல்படுவதற்கும், புதிய அமைப்புகள் பங்கு  கொள்ள வருவதற்கும் இத்தகைய விருது அறிவிப்புகள் உதவும். நீரிணைப்பு வசதிகளைச் செய்து கொடுத்து சாலைப் பணியாளர்கள் மூலம் சாலைகளின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரச் செய்யலாம்..

நெகிழிப்பைகள்நாகரீகத்தின் வெளிப்பாடாய் மனிதன் புறக்கணித்த பொருட்களுக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்த பல பொருட்களில் பிளாஸ்டிக் பொருட்களும், நெகிழிப் பைகளும் சுற்றுச்சூழலை சூறையாடுவதில் முக்கிய இடம் வகிக்க ஆரம்பித்தன. கால ஓட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் அன்றாடப் பயன்பாடுகள் குறைந்து விட்ட நிலையில் நெகிழிப்பைகளின் பயன்பாடோ எல்லா வகைகளிலும் முக்கிய இடம் பிடிக்க ஆரம்பித்தது. மக்கிப் போவதற்கே பல நூறு ஆண்டுகள் தேவைப்படும் நெகிழிப்பைகள் அன்றாடப் பயன்பாட்டிற்குப் பின் தூக்கி எறியப்படுகின்றன, நிலமெல்லாம் உறைந்து மக்கிப் போகாமல் கிடக்கும் அவைகளால் நிலத்தின் சுவாசம் பாதிக்கப்படுவதோடு அதை உண்ணும் பறவைகள், கால் நடைகளின் குடல்களில் செரிக்காத நிலையில் அப்படியே தங்கி அவைகளின் உயிரைப் பறித்து விடுகின்றனஇத்தகைய கேடு தரும் நெகிழிப்பைகளை அரசாங்கம் மட்டுமே சட்டம் இயற்றித் தடுக்க வேண்டும் என குரல் எழுப்புவதை விட நாம் ஒவ்வொரு வரும் அதைப் பயன்படுத்தாமல் புறக்கணிப்போம் என்ற உறுதியை எடுப்பதன் மூலம் அவைகளை இப்பூமியிலிருந்து முற்றிலும் ஒழித்து விட முடியும். நெகிழிப்பைகளுக்கு மாற்றாகத் துணிப்பைகள், காகிதப்பைகள், மறு பயனீட்டுப் பொருட்களின் மூலம் தயாரிக்கப்படும் பைகள் ஆகியவைகளைப் பயன்படுத்தலாம். பயன்பாடுகள் குறையும் போது உற்பத்தியும் தானாகவே குறைய ஆரம்பித்து விடும். நாளாக நாளாக பிளாஸ்டிக் பொருட்களைப் போல நெகிழிப்பைகளின் பயன்பாடும் பெருமளவு குறைந்து விடும்.

தொழிற்சாலைக் கழிவுகள்உலகம் முழுக்க தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரிய மில வாயு உள்ளிட்ட பல்வேறு நச்சு வாயுக்களால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இவை தவிர தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், இரசாயணம் கலந்த நீர், திடக் கழிவுகள் ஆகியவைகளை அருகில் இருக்கும் நீர் நிலைகளில் சட்டத்திற்குப் புறம்பாக  விடும் போது அந்த நீர் நிலை முற்றிலும் மாசடைகிறது, அப்படிச் சேரும் கழிவுகள் நீர் நிலைகளின் அடியிலேயே தங்கி அந்த மண்ணை உயிரற்றவைகளாக்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் விபரீத விளைவுகளால் அந்நீர் நிலைகளைச் சுற்றி வாழும் தாவரங்கள், விலங்குகள், நுண் உயிரினங்களோடு நாமும் உடல் சார்ந்த நோய்களால் பாதிப்புக்கு உள்ளாகின்றோம். அதேபோல தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, அதிக வெப்பம், ஒலி ஆகியவைகள் வளி மண்டலத்தைச் சூழ்வதால் புவி வெப்பமாதல் நிகழ்கிறது. ஓசோனின் ஓட்டை அளவு இந்தியாவின் கடனைப் போல விரிந்து கொண்டே செல்கிறது. இதைத் தடுக்க தொழிற்சாலைகள் முறையான சுத்திகரிப்பு வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், தொழிற்சாலை வளாகங்களிலும், அதைச் சிற்றி உள்ள இடங்களிலும் அதிக அளவு மரங்களை வளர்ப்பதன் மூலமும், ஓரளவுக்குத் தடுக்கலாம்.

மின் சாதனப் பொருட்கள்குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டும் சாதனங்களிலிருந்து வெளிவரும் வாயுக்கள், குண்டு பல்புகள் தரக்கூடிய அதிக மற்றும் சூடான வெளிச்சம் ஆகியவைகள் சுறுச்சூழலையும், வளிமண்டலத்தையும் பெரிய அளவில் பாதிக்கின்றன. இத்தகைய மின் சாதனப் பொருட்களின் பயன்பாடுகளை வெகுவாகக் குறைப்பதன் மூலம் இவைகளின் மூலமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்த்து விட முடியும். நாகரீகத்தின் பெயரில் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் இன்று அந்தஸ்து சார்ந்தவைகளின் அடையாளமாகி விட்டதை உணர்ந்து அவசியமற்ற மின் சாதனப் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலமும், அவசியமில்லாத நேரங்களில் அதன் இயக்கங்களை நிறுத்தி வைப்பதன் மூலமும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு செய்யாத மின் சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் தனிநபர் பங்களிப்புகளை வழங்கலாம்.

இவைகள் தவிர, உணவுப் பொருடகளை வீண் செய்யாமலிருத்தல்வீடு சுத்தமாய் இருந்தால் போதும் என்ற நினைப்போடு வீட்டில் சேரும் குப்பைகளை தெருவில் குவிக்காமலிருத்தல், விழாக்காலங்களில் இரப்பர் டயர்களை தீயிட்டுக் கொழுத்துவதைத் தவிர்த்தல், புண்ணிய தலங்களில் நீராடிய பின் ஆடைகளை நீரிலேயே தூக்கி எறியாமல் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் இடுதல், மழை நீர் சேகரிப்பு முறையை வீட்டில், அலுவலகங்களில் கட்டாயமாக அமைத்தல், வீட்டில் சேரும் கழிவுநீரை அருகில் இருக்கும் நீர் நிலைகளில் சேர்க்காமலிருத்தல், காட்டுத் தீ போன்ற சம்பவங்கள் நிகழக் காரணமாக இருக்கும் அணைக்கப்படாத சிகரெட் துண்டுகள், மதுப்புட்டிகளின் சிதறல்களை கண்டபடி விட்டுப் போகாமலிருத்தல். வீட்டில் சேகரமாகும் உணவுக் கழிவுகளில் மறு சுழற்சிக்கு உரியவைகளை இனம் கண்டறிந்து பயன்படுத்துதல், ஆகியவைகளின் மூலம் நாம் நம்மாலான பங்களிப்புகளை வழங்கி சுற்றுச்சூழலை மாசுபாடுதலை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். ”முன் கை நீண்டால் முழங்கை நீளும்என்ற முது மொழிக்கேற்ப உங்களின் முன் கையை முதல் பங்களிப்பாய் நீட்டுங்கள். அதன்பின் உங்களின் முன் கையை நோக்கிப் பல முழங்கைகள் தாமாகவே வரத் தொடங்கி விடும், ஒரு கரம் பல கரங்களாய் இணைய, இணைய சுற்றுச்சூழல் மாசடைதலைத் தடுக்கும் முயற்சியும் சாத்தியமடையும்!

படம் : இணையம்

வலைப்பதிவர் திருவிழா- 2015 புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டியின்  பிரிவு (4) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. ”முன் கையை நீட்டுங்கள்என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை  எனது  சொந்தப்படைப்பே  எனச் சான்றளிக்கிறேன்இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன். – மு. கோபி சரபோஜி