Sunday, 4 October 2015

எழுதித் தீருங்கள்! வாசித்துச் செரிக்கிறோம்!!

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவுக்கு இன்னும் சில தினங்கள் (11-10-2015) மட்டுமே இருக்கிறது. வலைப்பதிவர் கையேட்டிற்கு விபரங்கள் அளிப்பதற்கான தேதி முடிவடைந்து விட்டது, போட்டிகளுக்குத் தரமான, ஆக்கப்பூர்வமான படைப்புகளை அனுப்புவதற்கான இறுதி நாளும் நேற்று நள்ளிரவோடு காலாவதியாகி விட்டது. விழாவுக்கு நிதி வழங்குபவர்கள் கடைசி தினம் வரை வழங்கலாம். வாய்ப்பிருப்பவர்கள் வாரி வழங்குங்கள். கீழ் உள்ள வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திவிட்டு மின்னஞ்சலில் விபரம் அனுப்பி விடுங்கள்

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320


ஈரோட்டில் தொடங்கி சென்னை, மதுரை வழியாகப் புதுகையில் மையமிட்டிருக்கும் இந்த வருட வலைப்பதிவர் திருவிழா நிறைய சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது

வலைப்பக்கம் :


வலைப்பதிவர் திருவிழாவிற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் வலைப்பக்கத்தில் உலகம் முழுக்க இருந்து எழுதப்படும் வலைப்பதிவர் திருவிழா சார்ந்த கட்டுரைகளையும், போட்டிகளுக்கான படைப்புகளையும் நாள் தோறும் தேடி அழகாக வரிசைப்படுத்தி, வாசிக்க வசதியாய் அன்றைய தினமே பதிவேற்றியும் விடுகிறார்கள். வாசிக்க விரும்புகிறவர்கள் இங்கே சென்று பார்க்கலாம்நமக்கெல்லாம் வாரம் ஒரு தடவை வலைப்பக்கங்களுக்குள் நுழைந்து வருவதற்கே தாவு தீர்ந்து விடுகிறது.

வலைப்பதிவர் கையேடு : 

வலைப்பதிவர் திருவிழாவிற்கு வருபவர்களுக்கு இலவசமாகத் தருவதற்கெனத் தயாராகும். இக் கையேட்டில் வலைப்பதிவர்கள் அனைவரையும் முடிந்தவரை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் கூடுதல் கால அவகாசங்கள் கொடுத்தும், காத்திருந்தும், தாங்களே தொடர்பு கொண்டும் பெரும் பிரயாத்தனங்களோடு நவீனமாய் தயார் செய்து வருகிறார்கள். இலவசம் என்பதற்காக பிட் நோட்டிஸ் லெவலில் இல்லாமல் வலைப்பதிவர்களின் தொடர்பு நூலைத் தரமாகவும், வலைப்பதிவுத் தொழில் நுட்பக் கட்டுரைகளுடனும் உருவாக்கிக் கொண்டிருப்பதை அதற்கெனப் பொறுப்பேற்றுள்ள விழாக்குழு நண்பர்களின் பதிவுகளில் இருந்து அறிய முடிகிறது. இப்பவே நானும் அனுப்புறேன்னு யாரும் துள்ளி எழுந்து துயரப்பட வேண்டாம். அதுக்கான தேதியெல்லாம் காலாவதியாகி சில நாட்களாயிற்று

விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமே கையில் கையேடு தரப்படும். அயல் தேசம், அக்கரை தேசம், அந்நிய தேசம், ஆகாசம் என்று குடியேறியவர்களுக்கு, பொழப்பைத் தேடிப் போனவர்களுக்கு எல்லாம் அனுப்ப முடியாது. செத்தாடு காப்பணம் செமகூலி முக்காப் பணம்ங்கிற மாதிரியான செலவுச் சமாச்சாரத்துகெல்லாம் வாயைத் திறக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க! அதெல்லாம் முடியாது எனக்கும் வேணும் அப்படின்னு அடம்பிடிச்சா நூற்றைம்பது ரூபாயும், இந்திய முகவரியும் கொடுத்தால் அனுப்பி வைப்பாங்களாம். அஞ்சல் செலவை தள்ளுபடி செய்துடுவாங்கன்னு நினைக்கிறேன்.

அகல் விளக்காய் ஐவகைப் போட்டிகள் :  

ஒரு விழாவை நடத்தி தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டோமா, போட்ட சாப்பாட்டை ஒரு கை பார்த்தோமா; என வெறுமனே கூடிக் கழைவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. வலைப்பதிவர்களாகிய நாங்கள் திண்ணைப் பேச்சு வீணர்கள் அல்ல. அகல் விளக்காய் மாறி அதன் வழி ஆயிரமாயிரம் விளக்குகளை ஏற்றி இந்தச் சமூகத்திற்கு எங்களால் இயன்ற அளவு பங்களிப்புச் செய்ய முனைபவர்கள் என்பதைச் சொல்லும் விதமாக தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து முக்கியமான ஐந்து பிரச்சனைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஐவகைப் போட்டிகள்! அதில் வெல்பவர்களுக்கு ஆயிரங்களில் பரிசுத்தொகைகள்! என அறிவிக்கப்பட்டதோடு வந்த படைப்புகள் பொதுவிலும் வைக்கப்பட்டுள்ளன. நானும் வாசிக்க விரும்புகிறேன்னு சொல்றவங்க இங்கே போய் வாசிக்கலாம். அட சொக்கா.......எனக்குத் தெரியாமல் போயிடுச்சேன்னு யாரும் கதறினால் ஒரு புண்ணியமும் இல்லை. இந்த வாசலை நேற்று நள்ளிரவே சாத்தி சீல் வைத்து விட்டார்கள்!

சிறப்பு சேர்க்கும் விருந்தினர்கள் :


திருவிழா என்றால் மூலவரும் வர வேண்டும் என்பது மரபுஅந்த மரபை மீறாத வகையில் இந்தத் திருவிழாவில் மூலவர்களாக மூத்த வலைப்பதிவர்களோடு எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன், விக்கிப்பீடியாவின் இந்தியத் திட்ட இயக்குனர் திரு.இரவிசங்கர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு.சொ.சுப்பையா, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குனர் முனைவர் திரு.மா.தமிழ்ப்பரிதி, விழா நடைபெறும் புதுக்கோட்டையில் பணியில் இருந்த காலத்தில் அங்கு கணினித் தமிழ்ச்சங்கப் பணிகளைத் தோற்றுவித்ததோடு பயிற்சிப் பட்டறைகளையும் நடத்திய கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் திரு. நா.அருள்முருகன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தர இருக்கிறார்கள். இன்னொரு சிறப்பு விருந்தினரின் வருகையும் எதிர்பார்க்கப்படுகிறதாம், அவர் வருகை தந்தால் நமக்கெல்லாம் சந்தோசம். பலருக்கு ஆச்சர்யம். வலைப்பதிவர்களுக்கு இன்னுமொரு அங்கீகாரமாய் அது அமையும். இது எனக்கு மட்டுமே சொல்லப்பட்ட இரகசியம். இப்படி என்னைய மாதிரியே எத்தனை பேர் நினைச்சுக்கிட்டு இருக்காங்களோ!

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா வலைப்பக்கங்களிலும், முகநூலிலும் அடைந்து கிடக்காமல் ”பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்தது. சிறுத்தையே வெளியில் வா” என்ற பாரதிதாசனின் வரியாய் மாறி புதுக்கோட்டைக்குப் போயிட்டு வந்துடுங்ககவிதை அரங்கமும், புத்தக வெளியீடுகளும், புத்தகக் கண்காட்சியும் ஒரு சேர இருக்காம். செவிக்குத் தமிழ் தீனியையும், வாசிப்பிற்கு புதையல்களாய் புத்தகங்களையும் அள்ளி வரக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விட்டுறாதீங்க.

இந்த விளக்கமெல்லாம் நல்லாத் தான் இருக்கு. நீ என்ன செஞ்சிருக்கேன்னு ஒரு கேள்வி கிளம்பிடக் கூடாதுங்கிறதுக்காகவே எனக்கென்று தனியாக வலைப்பக்கம் தொடங்கி எழுத ஆரம்பித்த பின் வந்திருக்கும் இந்த வலைப்பதிவர் திருவிழாவுல சில விசயங்களில் பங்கெடுத்திருக்கிறேன்.
  • வலைப்பதிவர்கள் யோசனை சொல்லலாம்னு சொன்னதுமே அதுக்கென்ன சொல்லிட்டாப் போச்சுன்னு சில யோசனைகளைச் சொன்னேன். நல்ல யோசனையாச் சொன்னியான்னு கேட்கிறவங்க இங்கே போய் பார்த்துக்கலாம்.
  • இரண்டு கட்டுரைப் போட்டிகளில் பங்கு கொண்டு இரண்டும், ஒன்றுமாய் மூன்று கட்டுரைகள் கொடுத்தாச்சு. கட்டுரை தேறுமா?ன்னு சந்தேகக் கண்ணோடு பார்க்கிறவங்க சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கட்டுரையை இங்கேயும், இங்கேயும்பெண்கள் முன்னேற்றம் குறித்தக் கட்டுரையை இங்கேயும் சென்று வாசித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
  • நம்ம சுதந்திரம் தான் என்றாலும் அதை நாமே எடுத்துக் கொள்வதை விட ஆங்கிலேயனே கொடுப்பது தான் முறை என ஆகஸ்ட் பதினைந்திற்காகக் காத்திருந்தவர்களின் வழித் தோன்றல் என்ற முறையில் என்னுடைய இன்னொரு பங்களிப்பை அமைப்பாளர்கள் விழா முடிந்தவுடன் அறிவிப்பார்கள். அதுவரை காத்திருங்கள்.
விழாவுக்குச் சென்று திரும்பியவர்கள் கொண்டாட்ட மகிழ்ச்சியை எழுதி, எழுதித் தீருங்கள். வராத நாங்கள் வாசித்து, வாசித்துச் செரிக்கிறோம்