Wednesday 30 August 2017

வார்த்தைகளும், வடுக்களும்...

பணச் சிக்கனம், பொருள் சிக்கனம் தெரியும். வார்த்தைச் சிக்கனம் தெரியுமா? குடும்ப பிரச்சனைகளுக்கு இடையேயான விரிசல்கள் பெரிதாகாமல் இருக்க வேண்டுமானால் உங்களிடம் எப்பொழுதும் வார்த்தைச் சிக்கனம் என்ற வயாகரா இருந்து கொண்டேயிருக்க வேண்டும்

எந்த மனைவியாது, “தொண, தொணன்னு பேசி நச்சரிக்காதீங்க”, “பேசிப் பேசியே கழுத்தை அறுக்காதீங்கஎன கணவனைச் சொன்னதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல வீடுகளில் மனைவி கணவனின் காதோடு காது வைத்துகல்லுளிமங்கா”, “வாழைப்பழ சோம்பேறி”, “அழுத்தக்காரா”, “ஊமைக்கொட்டான்எனச் செல்லமாக உசுப்பேற்றி, உசுப்பேற்றியே பேச வைக்கின்றனர். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. கணவனுக்கும், மனைவிக்கும் சேர்த்து பேச வேண்டும் எனச் சொன்னால் கூட அசராமல் பேசுவார்கள். ஒரு ஜோக். ஒரு பையன், “என்ன தலைப்பு கொடுத்தாலும் அதைப்பற்றி ஒரு மணிநேரம் எங்க அம்மாவால் பேச முடியும் என்றான் பெருமையாக. உடனே அவனின் நண்பன், “இது என்ன பிரமாதம். எந்த தலைப்பும் இல்லாமலே ஒருநாள் முழுக்க கூட என் அம்மாவால் பேசமுடியும். உனக்கு சந்தேகம்னா எங்க அப்பாவைக் கேட்டுப் பாரேன்என்றான். பேசுவதற்காகவே பிறந்தவர்கள் பெண்கள். அது அவர்களின் குணம்

வார்த்தைகளை கட்டுப்படுத்தத் தெரியாமல் அள்ளி வீசும்போது அது குடும்பத்தின் கட்டமைப்பை ஆட்டிப் பார்த்து விடுகிறது. “ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்என்றும், “நா காக்க வேண்டும்என்றும் முன்னோர்கள் அறிவுறுத்திச் சொன்னதெல்லாம் படிப்பினை. முன்னோர்களையே மதிக்கப் பழகாத நாம் அவர்களின் அறிவுரைகளையா மதிக்கப் போகின்றோம்? அதன் விளைவு இன்று குடும்ப உறவுகளிலும், கணவன், மனைவி உறவிலும் விரிசல்கள் பாலம், பாலமாக விழ ஆரம்பித்து விட்டன.

வெறும் வார்த்தைகள் என நாம் நினைத்துச் சொல்பவைகள் பின்னர் உண்மையாகிப் போவதற்கு நிறைய சாத்தியங்கள் இருப்பதாக மனவியலறிஞர்கள் கூறுகின்றனர். இது உண்மை என்பதற்கு ஒரு நிகழ்வு. இராமாயானத்தில் சீதை தன் கற்பை நிரூபிக்க தீ குளிப்பாள். இதற்குக் கம்பரும், வால்மிகியும் சொன்ன காரணத்தை விடுங்கள். நம்ம சுகி. சிவம் அவர்கள் ஒரு அருமையான காரணம் சொல்லியிருக்கிறார். சீதை இராம, இலட்சுமணரோடு காட்டில் தங்கியிருந்த போது அங்கே வந்து நின்ற மாயமானைப் பிடித்து தரச் சொல்லி இராமரிடம் கேட்கின்றாள். இலட்சுமணனை குடிலுக்கு காவலாய் நிறுத்தி விட்டு மானை இராமன் விரட்டிச் செல்கிறான். அவர் அம்புக்கு அடிபட்ட மான், “ஹே….இலட்சுமனா, ஹே……சீதாஎன கத்தி விட்டுச் சாய அண்ணனுக்கு ஆபத்து உடனே சென்று காப்பற்று என இலட்சுமணனை சீதை போகச் சொல்கிறாள். அண்ணனுக்காவது ஆபத்து வருவதாவது எனச் சொல்லி குடிலின் காவலுக்கு இருந்த இலட்சுமணன் போக மறுக்கின்றான். உடனே சீதை, “நீ உடனே செல்லாவிட்டால் இங்கேயே நான் தீ குளித்து விடுவேன்என்று சொல்கின்றாள். இதைக் கேட்டதும் தன் அண்ணன் இராமனைத் தேடி இலட்சுமணன் செல்ல இராவணன் சீதையை இலங்கைக்கு சிறையெடுத்துச் சென்றான். அதன்பின் ஆண்டுகள் பல கடந்தும் சீதை சொன்ன சொல் ஓரிடத்தில் உண்மையானது. அன்று கணவனுக்காக தீ குளிப்பேன் எனச் சொன்னதாலயே அதே கணவனுக்காக தீ குளிக்க வேண்டி வந்தது என்கிறார். சொல்லின் வலிமைக்குச் சொல் வேந்தர் சொன்ன காரணம் பொருத்தம் தானே! இன்று பெற்ற பிள்ளைகளை சனியனே, மூதேவி, தரித்திரம், தெண்டம், உதவாக்கரை என பெற்றோர்கள் சர்வ சாதாரணமாக தினம், தினம் திட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் இதையெல்லாம் யோசித்துத் திருந்தினால் அவர்களுக்கு எப்படியோ அவர்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

வார்த்தைகளின் மூலம் ஏற்படுகின்ற வடு காலம் காலமாக மனதிற்குள்ளேயே இறுகி வஞ்சம் தீர்ப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டேயிருக்கிறது. அதனாலயே தீயினால் சுட்ட புண்ணை விட நாவினால் சுட்ட புண்ணை ஒருபடி மேலே வைத்து வள்ளுவத் தாத்தா எச்சரித்துப் போனார். தன் மீது வீசப்பட்ட வார்த்தைகளுக்கு வஞ்சம் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை குடும்பத்திற்குள் ஆண்களை விட பெண்களே அதிகம் தேடுகின்றனர். வாய்ப்புகள் தேடும் வேலைவாய்ப்பு அலுவலகமாக வீட்டை மாற்றிக் கொண்டு அதற்காகவே காத்திருக்கின்றனர். மாமியார், மருமகள் பிரச்சனை இதற்கு நல்ல உதாரணம்.

பல மாமியார்கள் தாங்கள் மருமகளாக வந்த போது தன் மாமியாரால் தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும், தன்னுடைய மாமியார், நாத்தனாரிடம் கேட்ட விரும்பத்தாகாத வார்த்தைகளுக்கும் வஞ்சம் தீர்க்க தனக்கு மருமகளாக வந்த பெண்ணைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். இது தான் பெரும்பாலான வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்சனைகளுக்கு அடிநாதம். ஆணிவேர். மாமியார் தன் மீது காட்டும் கோபத்தை, கொட்டும் வார்த்தைகளைப் போல இன்னும் ஒரு மடங்கு சேர்த்து மாமியார் மீது அப்படியே திருப்பி அடிப்பதில் சில மருமகள்கள் கில்லாடி. இப்படிப்பட்ட மாமியாரும், மருமகளும் இருக்கும் வீட்டில்கில்லிவிளையாட்டு அவர்களுக்கிடையே மட்டும் நடைபெறும். இப்படிக் கில்லாடியாக மாமியாரிடம் இருக்க முடியாத மருமகளோ அவருடைய மகன் அதாவது தன் கணவன் மீது மனைவி என்கின்ற ஆளுமையைப் பயன்படுத்தி அதன் மூலம் மாமியாரை வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறாள். இந்த மாதிரியான குணம் கொண்ட மருமகள்களே இன்று அதிகம். அநேகம். அதனால் தான் மாமியார், மருமகள் பிரச்சனையில் பல வீடுகளில் கணவன் தலை பந்தாடப்படுகிறது!

மாமியார்மருமகள், கணவன் - மனைவி உறவில் உராய்வுகள் இல்லாமலிருக்க வேண்டுமனால் பிரச்சனைகள் வரும் போது சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் மெளனமாக இருந்து விட வேண்டும். பேச்சு என்கின்ற பலத்தை பலவீனப்படித்தக் கூடிய ஆயுதம்மெளனம்”. அதேபோல மனிதர்களைப் பலவீனப்படுத்தக்கூடிய அயுதம் காதல் (LOVE). காதலுக்கும், மெளனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒன்றின் வழி மற்றொன்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடியது. “ஒரு சொல் சில மெளனங்கள் பேசாமல் பேசிக் கொண்டால் காதல் என்ற வரியை அனுபவித்தவனின் மொழியாகவே எடுத்துக் கொள்ளாலாம். காதலின் கண, கணப்பைக் கணவன், மனைவிக்கிடையே நேசமாய், மாமியார், மருமகளுக்கிடையே பாசமாய் தரக்கூடிய வலிமை மெளனத்திற்கு உண்டு

சிலநேரம் மனைவியின் மெளனம் அவள் மீது கணவனுக்குக் காதலாகவும், சிலநேரம் கணவனின் மெளனம் அவன் மீது மனைவிக்குக் காதலாகவும் மாறுவதால் தான் ஒரே ஆணோடு பெண்ணாலும், ஒரே பெண்ணோடு ஆணாலும் குடும்பம் நடத்த முடிகிறது. இந்த ஈர்ப்பின் ஈரம் குறையாதவரை குடும்பத்திலும் சந்தோசத்திற்குக் குறைவிருக்காது.

நன்றி : பாவையர் மலர்

1 comment:

  1. நல்ல கட்டுரை...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete