இரண்டு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது மலைகள் இதழின் ஆசிரியரும், நண்பருமான சிபிச்செல்வன் ”கிண்டில்” பற்றிக் கேட்ட போது அப்படின்னா என்ன? எனக் கேட்டேன். புத்தகங்களை எப்படி படிக்கிறீங்க? என அடுத்த கேள்வியை வீசினார். சம்பந்தமில்லாத கேள்வியா கேட்கிறாரே என நினைத்துக் கொண்டு நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசிக்கிறேன் என்றேன். அந்த பதிலில் என் நவீனத்தின் ஞானத்தை அவர் கண்டுபிடித்திருப்பார் என்றே நினைக்கிறேன். “கிண்டில்” பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் சொன்னார். சிங்கப்பூரில் இருந்து கொண்டு இத்தனை ஞானசூன்யமா இருந்திருக்கோமேடா! என நினைத்துக் கொண்டு இணையத்தில் அறிந்து கொள்ள முனைந்ததில் மின்னூலின் அவசியம் குறித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளையும் வாசிக்க நேர்ந்தது. அதன் பிறகு மின்னூல் சார்ந்து இருந்து வந்த பிரமிப்பு விலக ஆரம்பித்தது.
அந்த நேரத்தில் நிறுவனத்தின் ஆட்குறைப்பு பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்ததால் கிடைத்த நேரத்தில் மின்னூலை உருவாக்கிப் பார்க்கும் முயற்சியில் இறங்கினேன். அச்சில் வந்திருந்த என் நூல்களில் ஒன்றை மின்னூலாக்கும் விருப்பத்தை நண்பர்களிடம் சொன்னேன். எங்களுக்கு இந்தத் துயரம் வேறா? என அவர்கள் காட்டிய அக்கறையில் அஸ்தமனமாகிப் போனது மின்னூல் கனவு!
கனவு அஸ்தமனமானாலும் ஆசை தீரவில்லை. திடுமென ஒரு ஞாயிறுப் பொழுதைக் காவு கொடுத்து நூலாக்கம் பெறாத அச்சு, இணைய இதழில் வந்த கவிதைகளைத் தொகுத்தேன். ”என் முதல் மின்னூல் முயற்சி” என முகநூலில் அறிவிப்பும் கொடுத்தாயிற்று. அதன் பிறகே அதில் அறிந்திருக்க வேண்டிய தொழில் நுட்பத்தில் எத்தனை சைபரோடு இருக்கிறேன் என்பது புரிந்தது. இது வேலைக்கு ஆகாது என தூக்கிப் பரணில் போட்டு விட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். புத்தகத்தை வாங்குறானோ? இல்லையோ? புத்தகம் எப்ப வருது? எப்ப வருது?ன்னு கேட்டு நச்செடுக்கிறதுக்குன்னு நாளு நண்பர்கள் இருப்பதெல்லாம் வரமா? துயரமா? எனச் சொல்லத் தெரியவில்லை. அந்த வரமும், துயரமும் என் மின்னூலாக்கக் கனவை கதகதப்பாகவே வைத்திருந்தது என்றே சொல்லலாம்.
FREE TAMIL EBOOKS தளம் வழி மின்னூலாக்கும் முயற்சிகளை ஆரம்பித்தேன். எல்லாமே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். படைப்பை மட்டும் நீ அனுப்பு. என நண்பன் சொன்னதை நம்பி அவர்களுக்கு அனுப்பினேன். ”எத்தனை நாளைக்குத் தான் நாங்களே மீன் பிடித்துத் தருவோம் என நினைத்துக் கொண்டிருப்பீங்க? உங்களுக்கு நாங்க மீன் பிடிக்கவே கத்துத் தாரோம்” எனச் சொல்லி அவர்கள் தந்த ஊக்கம் என் மின்னூல் கனவை மினுமினுக்கச் செய்தது. கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என நான் கேட்ட பல அடிப்படையான(BASIC), அபத்தமான கேள்விகளுக்குக் கூட அமெரிக்காவில் இருந்தும், இலண்டனில் இருந்தும், சென்னையில் இருந்தும், காரைக்குடியில் இருந்தும் அக்குழுவில் இருந்த நண்பர்கள் அயர்ச்சியின்றி தந்த பதில்கள் என்னாலும் ஒரு மின்னூலுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது. அது போதாதா என்ன?
அடுத்த கட்டமாய், ”இணையத்தில் எடுத்தேன். நல்லாயிருக்கா?” என அட்டைக்கான படத்தை நண்பனிடம் காட்டிக் கேட்டேன். ”நெட்டுல இருக்குன்னு ஆட்டயப் போட முடியாது. அனுமதி வாங்கலைன்னா ஆப்பு தான்” என்றான். விக்கிபீடியாவுல ஒரு படத்தை அப்படி எடுத்துப் போட்டுட்டு பட்ட துயரம் கைவசமிருந்ததால் நண்பனின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் தைரியம் வரவில்லை. நன்கு அறிமுகமான நண்பர் ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தை அவர் அனுமதியோடு வாங்கி அனுப்பினேன். இரண்டாம் நாளே FREE TAMIL EBOOKS குழுவில் இருந்த நண்பர் அதை அட்டைப்படமாக்கி ஒப்புதலுக்கு அனுப்பினார்.
நண்பர்களிடம் என் முதல் மின்னூல் குறித்து கம்பீரமாய் சொன்ன போது மின்னூலிலும் கவிதையைப் போட்டுட்டியா? என கண்ணீர் வராமல் கலங்கியவர்கள் தான் அதிகம். இன்னைக்கு வரை அந்தக் கலக்கம் அப்படியே இருக்கிறதோ? என நினைக்கும் அளவுக்கே அதன் வாசிப்பாளர் வருகையும் இருக்கிறது! அதற்காகவெல்லாம் காரியமாற்றாமல் இருக்க இயலுமா என்ன? ஆனாலும், வாசித்த சில நண்பர்களின் கருத்துகளும், வந்த எதிர்வினைகளும் கவனித்து கலந்துரையாடவும் அதில் விசயங்கள் இருக்கிறது என்றே இருந்தது.
நம்மூர் சாமியார்களுக்கு அடுத்து பேராசை கொண்டவன் எழுத்தாளன்! ஒரு புத்தகம் போட்டா போதும் என நினைத்து ஆரம்பிப்பவன் அப்படியே அடுத்தடுத்து என குரங்காய் தொங்கிக் கொண்டிருப்பது வழக்கம். அந்த வழக்கத்துக்கு நானும் விதிவிலக்கல்ல என்பதால் இரண்டாம் மின்னூல் தயாரிப்பைத் தொடங்கினேன். இம்முறை அக்கால கட்டத்தில் நண்பர்கள் வழி வாசிக்கக் கிடைத்த நூல்களுக்கு எழுதிய விமர்சனத்தை மட்டும் தேர்ந்தெடுத்து தொகுப்பாக்கினேன்.
.விகடனில் மூன்று நூல்கள் மூன்றாவது பதிப்புகள் வரை வந்திருந்த போதும் அதில் ஒன்று கூட விகடனின் மின்னூல் பட்டியலில் இல்லையே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அது இன்னும் ஈரமாகவே இருக்க, கடந்த வருட புத்தகத் திருவிழாவில் கிழக்கு பதிப்பகத்தின் விற்பனையில் முதல் இருபது இடங்களுக்குள் வந்த காமராஜர் வாழ்வும்; அரசியலும் நூல் கிழக்கு பதிப்பகத்தின் மின்னூலாக்க பட்டியலுக்குள் வந்ததோடு அமேசான்.காம் வழி விற்பனைக்கும் வந்தது மகிழ்வைத் தந்தது. முகநூல் பக்கம் கெத்து காட்டவும் அது உதவியது.
அச்சு நூலுக்கென ஒரு மவுசு இருந்தாலும் அதை வாங்கும் பலரும் அலங்காரப் பொருளாக பாவிக்கிறார்களோ என நினைக்க வேண்டி இருப்பதை மறுப்பதற்கில்லை! இப்படியான சூழலில் வாசிப்பை எளிதாக்கும் மாற்று வழியாக மின்னூல் வடிவம் மட்டுமே இருக்கிறது. மாற்றங்கள் எத்தனை அவசியமோ அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதும் அவசியம் என்றே நினைக்கிறேன்.
வருங்காலம் இனி மின்னூல் தான் தோழரே...
ReplyDeleteநேற்று புதுக்கோட்டையில் நடந்த முகாம் பற்றிய பதிவு... இணைப்பு கீழே... சொடுக்குக...
மின்னூல் முகாமில் நூறு நூல்கள் வழங்கப்பட்டன!
திரு.முத்துநிலவன் அய்யாவின் தளத்தில் கருத்துரையை இப்போது தான் கண்டேன்...
ReplyDeleteநன்றி..."புஸ்தகா"வில் இணைந்து விடவும்...
நன்றி நண்பரே. மேலே சொன்ன உங்களது இரண்டு நூல்களையும் எங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மின்நூலகத்திற்கு தரவிறக்கம் செய்து கொண்டேன். நேரம் கிடைக்கும் போது படிப்பேன்.
ReplyDelete