Wednesday, 28 February 2018

மன அழுக்குகளை நீக்கும் தீர்த்த நீராடல்!

ஆலய வாயில் கடந்ததும் கருவறைக்குச் செல்வதற்கு முன் ஆலயங்களுக்குள் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். எல்லா தண்ணீரையும்தீர்த்தம்என்று சொல்வதில்லை. கோவிலின் கருவறையில் உள்ள இறைவனுக்கு படைத்து பூஜிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமேதீர்த்தம்என்போம். அத்தகைய போற்றுதலுக்குரிய தீர்த்தங்கள் இராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிறைய இருந்திருக்கிறது. இருக்கிறது. அதனாலயே சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது இத்தலத்தின் சிறப்பாக போற்றப்படுகிறது.

பூர்வ, புண்னிய பாவங்களை போக்கிக் கொள்ளவும், இறந்தவர்களுக்கு பிதுர் காரியங்கள் செய்யவும் மட்டும் இந்த தீர்த்தங்களுக்கு வந்து மக்கள் நீராடுவதில்லை. மக்கட்பேறு கிடைக்க வேண்டியும் இங்கு வந்து தீர்த்தமாடுகின்றனர். நீண்டகாலமாக குழந்தை இல்லாமலிருந்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர் வங்கத்தில் இருந்து நடந்து வந்து இங்கு தீர்த்தமாடிய பின்பு தான் குழந்தை பிறந்ததாம்! இன்றும் இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடினால் குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Saturday, 24 February 2018

சீதை ஸ்பரிசத்தால் தீயே குளிர்ந்தது!

சேது அணை கட்டிய இடம் என்பதால் ஆரம்பத்தில் சேதுக்கரைஎன்று அழைக்கப்பட்ட இவ்வூர் இராவண வதத்திற்குப் பின் இராமரால் உருவாக்கப்பட்ட ஈசுவரன் குடிகொண்ட ஊர் என்ற பொருளில் இராமேஸ்வரம்என்றழைக்கப்பட்டது.  
 
திசைக்கொன்றாய் நான்கு திசைகளில் காளி கோவிலும், காவல் தெய்வங்களாக பத்து கோவில்களும், எல்லை தெய்வமாக ஒரு கோவிலும் அமைந்து இத்தீவை பாதுகாத்து வருகின்றன. இத்தீவு வடக்கே காசிக்கு இணையான பெருமை உடையது. இன்னும் சொல்லப்போனால் காசியாத்திரை தொடங்குவது மட்டுமல்ல முடிவதும் கூட இராமேஸ்வரதீவில் தான்!

இராமேஸ்வரம் கடலில் மணல் எடுத்து காசிக்குப் போய் அங்குள்ள கங்கையில் கரைத்து விட்டு கங்கையிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து இராமேஸ்வரத்தில் எழுந்தருளி இருக்கும் இராமநாதருக்கும், காசி விசுவநாதருக்கும் அபிஷேகம் செய்து சாதுக்களுக்கு அன்னதானம் வழங்குவதில் காசியாத்திரை முற்றுப்பெறுகிறது. இந்த மரபு தவறி நேரடியாக காசிக்கு மட்டும் போய் வந்தால் அதனால் பலன் இல்லை என்பதாலயேகாசிக்குப் போனாலும் கருமம் தொலையாதுஎன நம் முன்னோர்கள் பழமொழியாகக் கூறினர்.பாடல் பெற்ற புண்ணிய தலங்களுள் இத்தலம் சிறப்பு வாய்ந்ததாகும்.

Tuesday, 20 February 2018

தனுஷ்கோடி நாயகனைத் தலைவணங்கிப் பணிவோம்!

 

பாம்பனுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள தனுஷ்கோடிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். வாங்காள விரிகுடா கடலாகிய மகோநதியும், இந்துமகா சமுத்திரமாகிய இரத்தினாகரமும் கூடும் இடமே (சாகரசங்கமம்) “தனுஷ்கோடிஎன்றழைக்கப்படுகிறது.

கங்கை கரையில் உயிர்விடுவது

நர்மதை கரையில் நோன்பிருப்பது

குருசேத்திரத்தில் அன்பளிப்பு செய்வது இம்மூன்றும் புண்ணிய செயலாகும். இம்மூன்றையும் ஒருங்கே செய்து பேறு பெறக்கூடிய இடம் தனுஷ்கோடிஎன இத்தலச் சிறப்பை தலமகாத்மியம் கூறுகிறது.

Monday, 5 February 2018

சங்கடத்தை கடந்த கணம்

"பள்ளிக்கூடம் பாதிநாள் போகல.......ஆக்டிவா இருப்பதற்காக சேர்ந்த கராத்தே வகுப்புக்கும் போகல.....காய்ச்சலும், காயமுமாய் நகர்ந்த இவ்வருடத்து நினைவா ஒன்னுமில்லையேடா" என மகனிடம் சொல்லிக் கொண்டிருநதேன்.

பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் இருந்தான்.

அந்த அமைதி அவனை சங்கடப்படுத்தி விட்டோமோ என்ற உணர்வை தந்த படியே இருந்தது.

குடியரசு தினத்தன்று பள்ளியில் இருந்து திரும்பியவன் ஷீல்டை கொடுத்தான். இந்த வருசத்துக்கு இரண்டு கிடைக்க வாய்ப்பிருக்கு. இப்ப இது மட்டும் தான் டாடி..........இன்னொன்றுக்கு ரிசல்ட் டிக்ளேர் செய்யல. செய்யவும் சொல்றேன் என்றான்.