Saturday, 24 February 2018

சீதை ஸ்பரிசத்தால் தீயே குளிர்ந்தது!சேது அணை கட்டிய இடம் என்பதால் ஆரம்பத்தில் சேதுக்கரைஎன்று அழைக்கப்பட்ட இவ்வூர் இராவண வதத்திற்குப் பின் இராமரால் உருவாக்கப்பட்ட ஈசுவரன் குடிகொண்ட ஊர் என்ற பொருளில் இராமேஸ்வரம்என்றழைக்கப்பட்டது. திசைக்கொன்றாய் நான்கு திசைகளில் காளி கோவிலும், காவல் தெய்வங்களாக பத்து கோவில்களும், எல்லை தெய்வமாக ஒரு கோவிலும் அமைந்து இத்தீவை பாதுகாத்து வருகின்றன. இத்தீவு வடக்கே காசிக்கு இணையான பெருமை உடையது. இன்னும் சொல்லப்போனால் காசியாத்திரை தொடங்குவது மட்டுமல்ல முடிவதும் கூட இராமேஸ்வரதீவில் தான்!

இராமேஸ்வரம் கடலில் மணல் எடுத்து காசிக்குப் போய் அங்குள்ள கங்கையில் கரைத்து விட்டு கங்கையிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து இராமேஸ்வரத்தில் எழுந்தருளி இருக்கும் இராமநாதருக்கும், காசி விசுவநாதருக்கும் அபிஷேகம் செய்து சாதுக்களுக்கு அன்னதானம் வழங்குவதில் காசியாத்திரை முற்றுப்பெறுகிறது. இந்த மரபு தவறி நேரடியாக காசிக்கு மட்டும் போய் வந்தால் அதனால் பலன் இல்லை என்பதாலயே காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதுஎன நம் முன்னோர்கள் பழமொழியாகக் கூறினர்.பாடல் பெற்ற புண்ணிய தலங்களுள் இத்தலம் சிறப்பு வாய்ந்ததாகும்.

தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்
பூவியலும் முடிபொன்று வித்த பழிபோய் அற
ஏவியலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
                      மேவிய சிந்தையி நார்கள்மேல் வினை விடுமே  

என திருஞானசம்பந்தர் இத்தல சிறப்பை பாடுகிறார். திருநாவுக்கரசரும், அருட்கவி அருணகிரியும், தாயுமானவரும், வள்ளலாரும் இத்தலச் சிறப்பைப் பாடி உள்ளனர்.

இராமேஸ்வரம் வந்து கோபுரங்களைக் கண்டதும் சிவ சிவஎனச் சொல்லிக் கொண்டு நேராக கோவிலுக்குள் சென்று விடக்கூடாது. சேது தீர்த்தத்தில் நீராடி வந்த பின் கோவிலுக்கு எதிரே வெளியில் அமைந்துள்ள அக்னி தீர்த்தத்தில் நீராட வேண்டும். சீதையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்க அவளை தீக்குள் இறங்க இராமர் சொன்னதும் அவள் தன் கற்பை நிரூபிப்பதற்காக தீக்குள் இறங்கினாள். அப்பொழுது அவளின் கற்புக்கனலை தாங்க முடியாமல் அக்னி ஓடிவந்து கடலில் குளித்து குளிர்ந்த இடமே அக்னி தீர்த்தம்என்றும் – 

சீதைக்காக அக்னி பகவான் கடலிலிருந்து எழுந்த இடமே அக்னி தீர்த்தம் என்றும் – 

திருப்புல்லணையில் (திருப்புல்லாணி) அமர்ந்து வருணமந்திரம் ஜபித்தும் வராததால் கோபம் கொண்ட இராமர் அவன் மீது ஏவிவிட்ட இராம பாணத்தின் அக்னியானது கடலில் முதலில் தோன்றிய இடமே அக்னி தீர்த்தம் என்றும் – 

கந்தமாதன பர்வதத்திற்கு அக்னி மூலையில் இத்தீர்த்தம் அமைந்துள்ளதால் அக்னி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றதாக இத்தீர்த்தத்திற்கான பெயர் காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த தீர்த்தத்திற்கு வெப்பத்தின் தன்மையை குறிக்கக் கூடிய அக்னிஎன்ற பெயர் வர ஒரு காரண கதை இருக்கிறது. சீதையின் மீது ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்க அவளை தீக்குள் இறங்க இராமர் சொன்னதும் அவள் தன் கற்பை நிரூபிப்பதற்காக தீக்குள் (அக்னி) இறங்கினாள். மகாலட்சுமியின் அவதாரமான சீதையின் ஸ்பரிசம் கிடைத்த சந்தோசத்தில் அக்னியின் மனம் குளிர்ந்தது. அக்னியின் குணமான வெப்பம் தணிந்து குளிராக மாறியது. தர்மபத்தினியான இவளை என்னால் எரிக்க முடியாது எனச் சொல்லி மனித வடிவெடுத்து தன் கைகளில் தூக்கி வந்து இராமரிடம் ஒப்படைத்தான். ராமேஸ்வரம் கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்வால் கடலுக்கும் அக்னியின் பெயர் அமைந்து விட்டது.  

தனுஷ்கோடி சேதுதீர்த்தத்தை கடல் சூழ்ந்து விட்டதால் இந்த அக்னி தீர்த்தத்தையே சேதுதீர்த்தமாகவும் பாவித்து மக்கள் நீராடி வருகின்றனர். இத்தீர்த்தத்தின் கடல் நீர் வெதுவெதுப்பாகவே இருக்கும். கடல் பொங்கும் காலத்தில், மனைவி கற்பமாக இருக்கும் காலத்தில், பிள்ளைவரம் வேண்டி ஆறு, குளங்களில் நீராடுபவர்கள் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் கடலில் குளிக்கக்கூடாது என்ற தீர்த்த நியதிகள் அக்னி தீர்த்தத்தில் நீராடுவதற்கு கிடையாது.

அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு நிமிர்ந்தால் இராமநாதசாமி ஆலயக் கோபுரம் கண்ணில் படும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதை உணர்த்தும் தரும் அது! 12 ம் நூற்றாண்டில் இலங்கை மன்னர் பராக்கிரகபாகு மணல் மேட்டிலிருந்த இராமலிங்கத்தின் மூலஸ்தானத்தை மாற்றி சிறு கோவிலாக சுண்ணாம்பு கல்லில் கட்டினார்.

கி.பி. 15 ம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர் உடையான் சேதுபதி நாகூரைச் சேர்ந்த ஒரு வியாபாரியுடன் சேர்ந்து பதினாறு ஏக்கர் பரப்பளவில் கோயில் மதில்சுவரையும், மேற்கு கோபுரத்தையும் கட்டினார். கி.பி.16 ம் நூற்றாண்டில் அரசர் திருமலை சேதுபதி இரண்டாம் பிரகாரத்தையும், அதே காலகட்டத்தில் உடையான் சேதுபதி நந்திக்கு மண்டபத்தையும் கட்டினார். கி.பி. 17 ம் நூற்றாண்டில் தளவாய் சேதுபதியால் கிழக்கு இராஜகோபுரம் கட்டப்பட்டு இடையில் கைவிடப்பட்டது.

கி.பி. 18 ம் நூற்றாண்டில் முத்துராமலிங்க சேதுபதியால் உலகப்புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது. 

கி.பி. 17 ம் நூற்றாண்டில் (1649) தொடங்கி கைவிடப்பட்ட கிழக்கு இராஜ கோபுரத்தை 19 ம் நூற்றாண்டில் (1897 – 1904) தேவகோட்டை ஜமீன்தார் A.L.A.R. செட்டியார் குடும்பத்தினர் ஒன்பது நிலைகளை உடைய 128 அடி உயர கருங்கல் கோபுரமாக கட்டி முடித்தனர்.

கி.பி. 1907 – 1925 ல் தேவகோட்டை ஜமீன்தார் மூலஸ்தானத்தை கருங்கல் கட்டிடமாக்கினார். 1961 – 1985 ல் திருப்பணி குழுவால் இரணடாம் பிரகாரம் முழுமை பெற செய்யப்பட்டது. 1969 – 1994 ல் சேதுமண்டபம் தமிழக அரசு மற்றும் சிருங்கேரி பீடாதிபதி, காஞ்சி காமகோடி ஆகியோரால் கட்டப்பட்டது.

கோவிலின் நான்கு கோபுரங்களில் மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முடிக்கப்பட்ட பின்பும் வடக்கு, தெற்கு கோபுரங்கள் சுமார் 650 ஆண்டுகளுக்கும் மேலாக மொட்டை கோபுரங்களாகவே காட்சியளிக்கின்றன. இதற்கு ஆகம விதிகளை மீறியதால் ஏற்பட்ட தடைகளே காரணம் என கூறுகின்றனர்.

மன்னர்களாலும், ஜமீன்தார்களாலும், அரசாங்கம் மற்றும் மடாதிபதிகளாலும் பல்வேறு கால கட்டங்களில் படிப்படியாக வளர்ந்து நிற்கும் கோவிலை கண்டு வியந்து உள்ளே நுழைந்தால் பரவசம் தாம்…..அதுவும் ஆனந்த பரவசம்

நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்

No comments:

Post a Comment