Saturday, 17 December 2016

கல்யாண்ஜியின் ”வாசல் கதவும்”, சுபாவின் ”வீடும்”

வாசிப்பவனுக்குள் கனல் மூட்டும் விதமாய் எழுதப்பட்ட புரட்சிக் கவிதைகளுக்கான தேவை இப்பொழுது குறைந்து விட்டது. “புரட்சி என்பதெல்லாம் புளுங்கிச் சாதல்” என்றாகி விட்ட நிலையில் இயற்கையை இயைந்தும், சமூகத்தைச் சாடியும், காணும் ஒன்றைக் காணாத கோணத்தில் நோக்கியும் எழுதப்பட்ட கவிதைகள் வேர் பிடித்து எழ ஆரம்பித்தன.

மரபைக் கீறி புதிய தடத்தை வானம்பாடிக் கவிஞர்கள் ஆரம்பித்து வைத்த பின் கவிதைக்கு தெளிவுரை, விளக்கவுரை எல்லாம் அவசியமில்லாது போனது. வாசகனே கவிதையின் சாரத்தை நேரடியாகப் பருக ஆரம்பித்தான். புதுக்கவிதை நிகழ்த்திய இந்த மாற்றம் கவிதை உலகையே புரட்டிப் போட்டது. முண்டாசு கட்டியவனெல்லாம் பாரதி என்ற கதையாய் காகிதம் கிடைத்தவர்கள் எல்லாம் கவிதை எழுதப் பழகினார்கள். அப்படிப் பழகியவர்கள் எல்லாம் கவிஞர்களாய் மலர்ந்தார்களா என்பதற்கு பதில் இல்லை!

நம்மைப் போலவே காலத்திற்கேற்ப கவிதையும் தன்னை மெல்ல மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்டது. நவீனக்கவிதைகள், பின் நவீனத்துவக் கவிதைகள் என அவை அவதாரம் எடுத்த போது மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்புக்கு கிடைத்து வரும் பரிகாசங்களே கிடைத்தன. என்னத்தையா எழுதுறானுக? எழுதுறவனுக்கே அது விளங்குமான்னு தெரியல. அகராதி வச்சுக்கிட்டா கவிதையை வாசிக்க முடியும்? என இன்றளவும் அந்த எதிர்ப்பின் வடிவமும், வீச்சும் மாறமல் இருப்பது இன்னொரு சுவராசியம்.  

இந்தச் சிக்கல்களுக்குள் எல்லாம் தன்னை ஒப்புக் கொடுக்காமல் படிப்பவனை தனக்குள் இறுத்தி வைக்கும் கவிதைகள் எப்பொழுதும் தன்னைப் பதியம் போட்ட படியே இருக்கின்றன. ஆதரவு, எதிர்ப்பு அலைகள் ஏதுமின்றி அவைகள் அப்படியே ஏற்கப்படுகின்றன. இரசிக்கப்படுகின்றன. அதற்கான காரணங்களை எங்கும் தேடித் திரிய வேண்டியதில்லை. தனக்கு அணுக்கமான மொழியில் பேசும் எதையும் படிப்பவன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொள்கிறான். அதன் கதகதப்பில் தன்னை மெளனமாய் தீட்டி இரசிக்கிறான். கவிதையில் அது நிகழும் போது வாசிப்பவனால் அதை மீண்டும், மீண்டும் அசை போடவும், மனதிற்குள் காட்சி வடிவமாக்கவும் முடிகிறது. உதாரணமாக கல்யாண்ஜியின் இந்தக் கவிதையைப் பாருங்கள்.

பழைய சேலை கேட்டு ஒருத்தி 
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.
வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்
அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்.

இந்தக் கவிதைக்கு பெரிய விளக்மெல்லாம் தேவை இல்லை. ஒவ்வொரு வரியும் ஒரு காட்சி. நிகழும் உரையாடலும் எதார்த்தம். இந்த எதார்த்த உரையாடலில் இருந்து நான் உட்பட எவரும் தப்பி இருக்க மாட்டோம். கடைசி வரிக்கு முந்தைய வரி வரை வெறும் காட்சியாய் நகரும் கவிதை கடைசி வரியில் நம் காதைத் திருகி விடுகிறது. அதுவரையிலும் அசையாமல் இருந்த வாசல் கதவு அதன் பின் அங்கு நிகழ்ந்த உரையாடலின் போலித் தன்மைக்கான சாட்சியாக மாறி விடுகிறது. இக்கவிதை வழி தன்னை நகர்த்திக் கொண்டவனுக்குத் தன் வீட்டில், தான் போய் உதவி கேட்டு நிற்கும் வீட்டில் இருக்கும் வாசல் கதவின் மீதான பார்வையும் மாறி விடுகிறது. இன்னொரு கவிதை –

தங்கைக்கும் எனக்கும்
நம்ம வீடு.
அப்பாவின் நண்பர்களுக்கு 
கிருஷ்ணமூர்த்தியின் வீடு.
அம்மாவின் நண்பர்களுக்கு 
இந்துமதி வீடு.
விடுமுறைக்கு வரும்
வாண்டுகளுக்கு
அத்தை - மாமா வீடு.
வழி சொல்லும் கடைக்காரருக்கு
தெருமுனையில் இரண்டாவது வீடு.
இப்படியான நாளொன்றில்தான்
வந்து சேர்ந்தது அந்த
யாருக்கோவான கடிதம்.
தபால்காரர் கூற்றுப்படி
இதே "மூன்றின் கீழ் நாற்பது" வீட்டில் வசித்த
முந்தைய குடித்தனக்காரக்கானது அது.
புரிந்தவளாய் திரும்பியபோதுதான் தெரிந்தது
வீடு எங்கும் நிறைந்திருக்கும் 
வெவ்வேறு வீடுகள்.

ஆனந்த விகடனில் வந்த சுபா செந்தில்குமாரின் இந்தக் கவிதைக்கும் விளக்கவுரை எல்லாம் தேவையில்லை. கல்யாண்ஜி வாசல்கதவின் மீதான பார்வையை மாற்றியதைப் போல சுபா வீடுகளின் மீதான நம் பார்வைகளைத் தன் கவிதையின் ஊடாக மறு கட்டமைவு செய்ய வைக்கிறார். என் வீடு, உன் வீடு என்ற அடையாளம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. அது போல பல குறியீடுகளை ஒவ்வொரு வீடும் தனக்கான அடையாளமாகக் கொண்டிருக்கிறது. அந்த அடையாளக் குறியீட்டைப் பெற பெயரிடக் காத்திருக்கும் குழந்தையைப் போல ஒவ்வொரு வீடும் காத்திருக்கிறது! இந்தக் கவிதையை வாசித்து முடித்ததும் உங்கள் வீட்டை அது வாடகை வீடாக இருந்தாலும் பரவாயில்லை. ஏறிட்டுப் பாருங்கள். அது இதுவரைக்குமான தனக்கான அடையாளத்தையும், இனி பெறப்போகும் அடையாளத்திற்கான காத்திருப்பையும் உங்களுக்குச் சொல்லக்கூடும்.

கல்யாண்ஜியையும், சுபாவையும் வாசித்து விட்டு அவர்களால் எழுத முடிவது எனக்கும் முடியாதா என்ன? என நீங்களோ, நானோ நினைத்தால் தப்பில்லை. அதற்கான முன்னெடுப்புகளைச் செய்தும் பார்க்கலாம். ஆனால் அந்த நினைப்பு கைவராது போவதை அறிந்த கணம் அத்தகைய முயற்சிகளை கை விட்டு விடும் துணிவும் கொள்ள வேண்டும். அந்தத் துணிவு இருந்தால் போதும் கவிதை எழுதி இருக்கிறேன் எனச் சொல்லக் கேட்டு ஓடும் கூட்டத்தைக் குறைத்து விடலாம். அது கவிதை உலகிற்கு நன்மையைத் தருதோ இல்லையோ? நம் நண்பர்களின் எண்ணிக்கையைக் கூட்ட நிச்சயம் உதவும்.