ஆலய வாயில் கடந்ததும் கருவறைக்குச் செல்வதற்கு முன் ஆலயங்களுக்குள் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். எல்லா தண்ணீரையும் “தீர்த்தம்” என்று சொல்வதில்லை. கோவிலின் கருவறையில் உள்ள இறைவனுக்கு படைத்து பூஜிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே “தீர்த்தம்” என்போம். அத்தகைய போற்றுதலுக்குரிய தீர்த்தங்கள் இராமேஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் நிறைய இருந்திருக்கிறது. இருக்கிறது. அதனாலயே சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது இத்தலத்தின் சிறப்பாக போற்றப்படுகிறது.
பூர்வ, புண்னிய பாவங்களை போக்கிக் கொள்ளவும், இறந்தவர்களுக்கு பிதுர் காரியங்கள் செய்யவும் மட்டும் இந்த தீர்த்தங்களுக்கு வந்து மக்கள் நீராடுவதில்லை. மக்கட்பேறு கிடைக்க வேண்டியும் இங்கு வந்து தீர்த்தமாடுகின்றனர். நீண்டகாலமாக குழந்தை இல்லாமலிருந்த இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெற்றோர் வங்கத்தில் இருந்து நடந்து வந்து இங்கு தீர்த்தமாடிய பின்பு தான் குழந்தை பிறந்ததாம்! இன்றும் இராமேஸ்வரத்தில் தீர்த்தமாடினால் குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
தீர்த்தங்களின் எண்ணிக்கை குறித்து நூல்களில் ஒவ்வொரு விதமாக
கூறப்பட்டிருக்கிறது.
மொத்தம் உள்ள 64 தீர்த்தங்களில் 51 மட்டுமே அறியப்பட்டுள்ளது. எஞ்சி
உள்ள 13 தீர்த்தங்கள் அறியப்படாமலே உள்ளது.
51 தீர்த்தங்களில்
- மகாலட்சுமி தீர்த்தம்
- சாவித்திரி தீர்த்தம்
- காயத்ரி தீர்த்தம்
- சரஸ்வதி தீர்த்தம்
- சக்கர தீர்த்தம்
- சேதுமாதவ தீர்த்தம்
- நள தீர்த்தம்
- நீல தீர்த்தம்
- கவய தீர்த்தம்
- கவாட்ச தீர்த்தம்
- கந்த மாதன தீர்த்தம்
- பிரம்ம ஹத்தி தீர்த்தம்
- சூர்ய புஷ்கரினி தீர்த்தம்
- சந்திர தீர்த்தம்
- சாத்தியாமிர்த தீர்த்தம்
- சிவ தீர்த்தம்
- சர்வ தீர்த்தம்
- சங்க தீர்த்தம்
- கயா தீர்த்தம்
- கங்கா தீர்த்தம்
- யமுனா தீர்த்தம்
- கோடி தீர்த்தம்
ஆகிய 22 தீர்த்தங்கள் இராமநாதசாமி கோவிலுக்குள்ளேயே இருக்கின்றன. மற்ற தீர்த்தங்களான…
- நவபாசண தீர்த்தம்
- சக்கர தீர்த்தம் (தேவிபட்டிணம்)
- வேதாள தீர்த்தம்
- பாபவிநாச தீர்த்தம்
- கபி தீர்த்தம்
- பைரவ தீர்த்தம்
- சீதா தீர்த்தம்
- வில் ஊன்றி தீர்த்தம்
- மங்கள தீர்த்தம்
- இரணவிமோசன தீர்த்தம்
- அமுதவல்லி தீர்த்தம்
- இலட்சுமண தீர்த்தம்
- இராம தீர்த்தம்
- தனுஷ்கோடி தீர்த்தம்
- சடாமகுட தீர்த்தம்
- சுக்ரீவ தீர்த்தம்
- தரும தீர்த்தம்
- பீம தீர்த்தம்
- அர்ச்சுன தீர்த்தம்
- நகுல தீர்த்தம்
- சகாதேவ தீர்த்தம்
- திரெளபதி தீர்த்தம்
- பிரம்ம தீர்த்தம்
- பரசுராம தீர்த்தம்
- அனுமகுண்ட தீர்த்தம்
- அகத்திய தீர்த்தம்
- அக்னி தீர்த்தம்
- நாக தீர்த்தம்
- சக்கர தீர்த்தம் (திருப்புல்லாணி)
ஆகிய 29 தீர்த்தங்கள் இராமேஸ்வரத்தைச் சுற்றி உள்ள இடங்களிலும், கோவிலுக்கு வெளியேயும் அமைந்துள்ளன.
தீர்த்தங்களில் குளிப்பதற்கு ஜாதி, மத தடைகள் ஏதுமில்லை என்ற போதும் அதற்கென சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். பெண்கள் மாத விலக்கு நாட்களிலும், ஆண், பெண் உடலுறவுக்குப் பின் தனியாக சுத்தம் செய்து கொள்வதற்கு முன்னும் புனிதத் தீர்த்தங்களில் நீராடக் கூடாது. அதேபோல, மனைவி கர்ப்பம் உள்ள காலத்தில் கணவனும், பிண்டம் வைக்காதவர்களும் தீர்த்தங்களில் குளிக்கக்கூடாது என புராணங்கள் கூறுகின்றன.
பயணமும், யாத்திரையும் எப்படி வெவ்வேறானதோ அவ்வாறே வெவ்வேறானது வீட்டின் குளியறையில், கிணற்றடியில், குளத்தங்கரையில் குளிப்பதும் புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பதும்! இரண்டும் ஒன்றல்ல. வீட்டில் குளிக்கும் போது அழுக்குத் தேய்த்து, சோப்புப் போட்டுக் குளிக்கலாம். ஆனால், புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் போது அப்படி செய்யக் கூடாது. உடல் அழுக்கை நீக்குவதற்குத் இவைகள் அவசியம். உள்ளத்து அழுக்கை நீக்க இவைகள் தேவையில்லை. குளிக்கிறோம் என்ற உணர்வின்றி உள்ளத்து (மன) அழுக்குகளைக் கழுவுகிறோம் என்ற உணர்வே மேலோங்கி இருக்க வேண்டும். அதனால் தான் ஆண், பெண் பேதமின்றி தீர்த்தங்களில் எல்லோரும் ஓரிடத்தில் மூழ்கி எழுகின்றனர்.
எல்லா தீர்த்தங்களுமே தனித்தனி சிறப்பும், மகத்துவமும் உடையதாயினும் சில தீர்த்தங்களின் சிறப்பு குறித்து புராணங்கள், இலக்கியங்கள், தல வரலாறுகளில் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் தாகம் எடுத்து சீதை தண்ணீர் கேட்டதும் இராமர் அம்பை எடுத்து கடலில் எய்தார். அந்த இடத்தில் நல்ல தண்ணீர் ஊற்று ஒன்று தோன்றியது. கடலின் நடுவில் கிணறு வடிவில் உள்ள அந்த ஊற்று “வில் ஊன்றி தீர்த்தம்”
உயர்குலத்தைச் சேர்ந்த பிரம்மனுக்கும், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவனுக்கும் ஒரே மாதிரியான முக்தி கொடுத்தது ”பாபவிநாச தீர்த்தம்”
மனோஜவ பாண்டியனுக்கு அரச மங்களமும், குடும்ப மங்களமும் இறுதியில் முக்தியும் கொடுத்தது “மங்கள தீர்த்தம்”
இந்திரனுக்கு பிரம்மஹத்தி நீக்கியதோடு சீதை அக்னியில் குளித்த நினைவுக்கு உரியதுமாய் விளங்குவது “சீதா தீர்த்தம்”
மகாபாரத போரில் துரோணரை கண்ணன் கூறியபடி “அசுவத்தாமா ஹத குந்தர” எனச் சொல்லி தந்திரமாக வீழ்த்திய தருமர் அந்த பாவம் தீர நீராடியது ”இராம தீர்த்தம்”
போரினால் சடாமகுடத்தில் (தலைகிரீடம்) பட்ட இரத்தக்கறையை இராம, இலட்சுமணர் கழுவிக்கொள்ள இறையருளால் தோன்றியது “சடாமகுட தீர்த்தம்”
கம்சனைக் கொன்ற பாவம் தீர கண்ணன் நீராடியது “கோடி தீர்த்தம்”
இப்படி பெருமையும், மகத்துவங்களும் நிறைந்த 51 தீர்த்தங்கள் அறியப்பட்டிருந்தாலும் அவைகளில் சில கடல் கொந்தளிப்புகளாலும், மணல் மேவியும் மூடப்பட்டு விட்டன. இன்று 24 தீர்த்தங்களில் மட்டும் நீராடப்பட்டு வருகின்றன. இதில் 22 தீர்த்தங்கள் கோவிலுக்குள்ளேயும், அக்னி, தனுஷ்கோடி ஆகிய இரு தீர்த்தங்கள் கோவிலுக்கு வெளியேயும் இருக்கின்றன. கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கள் கிணறுகளாகவே அமைந்துள்ளன. கோயிலின் முன் இருக்கும் ஆலய வழிபாட்டிற்கான சீட்டுகள் விற்கும் இடத்தில் பணம் கட்டினால் அதற்கென உரியவர் நம்மோடு வந்து ஆலயத்திற்குள் இருக்கும் தீர்த்த நீரை நம்மீது இறைத்து கொட்டுவார். தீர்த்தங்களில் நீராடிய பின் பிரகாரங்களைக் கடந்து இராமநாதரை தரிசிக்கச் செல்ல வேண்டும்.
நன்றி : ஆன்மிகம் மாதமிருமுறை இதழ்
No comments:
Post a Comment