Showing posts with label கேள்விக்குறி. Show all posts
Showing posts with label கேள்விக்குறி. Show all posts

Saturday, 29 May 2021

கேள்விக்குறி – உணர வைத்தல்

நீண்ட மருத்துவ விடுப்பு தந்து கொண்டிருக்கும் ஓய்வின் சலிப்பும், வெளியில் செல்ல முடியாத தீநுண்மி கால முடக்கமும் ஒருவித வெறுமையை அப்ப வைத்திருந்தன.  இவைகள் அலை அலையாய் மனம் முழுக்க கேள்விகளை எழுப்பிய படியே இருந்தது. அந்தக் கேள்விகளின் மறுமுனை கோபமாய், ஆதங்கமாய், வெறுப்பாய், எரிச்சலாய் குடும்ப உறுப்பினர்கள் மீது விழுந்து கொண்டே இருந்தது. ஏனோ அவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கடந்து போன போது என்னுள் அது அளவில்லா குற்றவுணர்வைத் தந்தது.  கேள்விகளின் ஒரு முனையை மட்டும் பிடித்திருந்த நான் அதன் மறுமுனையைவும் என்னை நோக்கி திருப்பிக் கொண்டேன். அப்பொழுது, ”நாம ஏன் இப்படி இருக்கிறோம்?” என்ற கேள்வி மனதில் எழுந்தது. அந்த கணம் நினைவில் வந்தது ”கேள்விக்குறி” புத்தகம்.

வாசித்து சில வருடங்கள் ஆன நிலையில் புத்தக அடுக்குகளில் தேடி எடுத்து மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். ”ஏன் இப்படி இருக்கீங்க?” என்ற கேள்வியில் தொடங்கி தொகுப்பில் இருக்கும் 16 கேள்விகள் வழியாகவும் என்னை நானே ஊடுருவி பார்த்துக் கொண்டேன். இக்கேள்விகளில் சிலவற்றை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எதிர் கொண்டிருப்போம். வேறு சிலவற்றை மற்றவர்களிடம் கேட்டிருப்போம். எதிர் கொள்வதற்கும், கேட்பதற்கும்  பொதுவாய் பார்க்கும் போது பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியும். உற்று நோக்கினால் இரண்டும்  ஒன்றே என்பதை உணர முடியும். முனைகள் மட்டுமே வேறாக இருக்கும்!