Sunday, 6 September 2015

வலைப்பதிவர்கள் திருவிழா - 2015

வரலாற்றுப் பதிவுகளுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்த புதுக்கோட்டை புதிய வரலாறுகளைப் படைப்பதற்கும் தன்னை ஒப்புக் கொடுத்த படியே இருக்கிறது. கல்விமுறையில் சீர்திருத்தங்கள், ஆட்சி முறையில் நேர்மை என சமூகத்தின் இரு கண்களாக இருக்கும் விசயங்களில் மாற்றங்களை நிகழ்த்தியவர்களும், நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களும் இந்த மண்ணிலிருந்து கிளர்ந்தவர்கள். இத்தகைய பெருமை மிகு புதுக்கோட்டையில் நான்காவது வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 11.10.2015 ல் நடைபெற இருக்கிறது.  இந்த வலைப்பதிவர்கள் திருவிழா இன்னொரு அடையாளத்திறப்பாக, புதிய பரிணாமம் பெற வேண்டும் என சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இரா.எட்வின் உள்ளிட்ட பலரும் தங்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். இப்படி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இவ்வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழாவை முடிந்த மட்டும் சிறப்பாய், வெறுமனே கூடிப் பேசிக் கலையும்  நிகழ்வாக இல்லாமல் பயனுள்ள வகையில் இருக்கும் படியாய் நடத்த கவிஞர். முத்து நிலவன் தலைமையில் பெரிய ஏற்பாட்டுக் குழு செயல்பட்டு வருகிறது. விழாக்குழுவின் சிறப்பான திட்டமிடல்கள் முந்தைய வலைப்பதிவர்கள் திருவிழாவில் அடையாளம் காணப்பட்ட குறைகள் இம்முறை வந்து விடக்கூடாது  என்பதில் அதிக அக்கறை கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதற்கென தனி வலைப்பக்கம், தனி மின்னஞ்சல் என ஆரம்பித்து அதன் வழி தொடர் யோசனைகளும் கோரப்படுக்கின்றன. எவ்வளவு யோசனைகள் வந்திருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் இப்போது தன் துவாரங்களை அடைத்துக் கொண்டிருப்பவர்கள் நிகழ்வு முடியவும் தன்னில் திறக்கும் அத்தனை துவாரங்கள் வழியாகவும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றாமல் இருந்தால் நல்லது. இருப்பார்களா? என்பது இஷ்ட தெய்வத்திற்கே வெளிச்சம்!
என் யோசனைகளும், அதற்கு விழாக்குழு தந்த மறுமொழிகளும் -

நான் மூத்த வலைப்பதிவர் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை என விழா நாளிலோ அதற்குப் பின்னரோ வரும் ஓலைக்கீற்று விமர்சனங்களைத் தவிர்க்க வலைப்பதிவர் அறிமுகத்தை அகர வரிசைப்படி செய்யலாம்.
  • அனைத்து வலைப்பதிவரும் காலை 9 மணிக்கு விழாத் தொடங்கும் போதே வந்திருக்க வேண்டும். சாதாரணமாக 9 மணிக்குப் பாதி அரங்கு நிறைந்தாலே பெரிய விடயம். மாவட்ட வாரியாக அழைப்பதிலும் இதனாலயே சிக்கல் எழுகிறது. எனவே, வயது வித்தியாசமின்றி காலை 9 மணிக்குள் வரும் பதிவர் பதிவு செய்யும் வரிசையிலேயே 5,5 பேராக மேடைக்கு அழைத்து சுய அறிமுகத்தைத் தொடங்கும் வழக்கத்தை மாற்ற வேண்டியதில்லை.

வலைப்பதிவர்களுக்கு தரும் தமிழ் – வலைப்பதிவர் கையேட்டில் வலைப்பதிவர் சார்ந்த விபரங்கள், விளம்பரங்கள் மட்டுமில்லாமல் வலைப்பதிவர்களுக்கு உதவக்கூடிய தொழில் நுட்பம் சார்ந்த விசயங்களையும், வலைப்பக்கங்களை மேம்படுத்தக் கூடிய டிப்ஸ்களையும் இடை இடையே சேர்க்கலாம். இப்படிச் செய்தால் வலைப்பதிவர் கையேடு டெலிபோன் டைரக்டரி தன்மையில் இல்லாமல் இருக்கும்.
  • மிகச்சிறந்த கருத்து. ஏற்கனவே நம் கையேடு தயாரிப்பின் போதே இந்த யோசனையும் சொல்லப்பட்டுள்ளது. திரு. திண்டுக்கல் தனபாலன், திரு. மதுரை பிரகாஷ் ஆகிய நம் வலை நுட்ப வல்லுநர்களிடம் கேட்டு வலைநுட்பக் குறிப்புகள் (டிப்ஸ்), மற்றும் மிகச் சில கட்டுரைகளைச் சேர்த்து வெளியிடலாம் என்பது நல்லதே.

எந்தத் தலைப்பு சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால். பயன்படுத்தக் கூடிய வகையில் சேதாரமில்லாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு விழாவிற்கு வரும் வலைப்பதிவர்கள் குறைந்தது ஒரு புத்தகம் அதிக பட்சம் அவரவர் விருப்பம் போல அவர்கள் எழுதிய நூல்களையோ அல்லது மற்றவர்களின் நூல்களையோ விழாக்குழுவிடம் இலவசமாகத் தரக் கோரலாம். இப்படிச் சேகரித்த நூல்களை தாய் தமிழ்பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கலாம்.
  • இதை மகிழ்ச்சியோடு செய்யலாம். நூல் வெளியிட்டு கையில் பிரதிகள் வைத்திருக்கும் பதிவர்கள் மனமுவந்து தரும் நூல்கள், குறும்படப் பிரதிகளைச் சேகரித்த்து நல்லதொரு அரசுப் பள்ளிக்குத் தரும் யோசனை மிக இனியது. செய்யலாம்

வலைப்பதிவர்கள் கூட்டாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பள்ளிகளுக்கு வழங்கும் நூல்களை வரிசைப்படுத்தி வைப்பதற்கான நூலக அடுக்குகளை வாங்கித் தரக் கேட்கலாம். இதற்கென உதவிக்கரம் நீட்டிய வலைப்பதிவர்களை விழா மேடையில் கெளரவிக்கலாம்.
  • இதுவும் இனிய யோசனையே. முன்வந்து தருவோர் கெளரவிக்கப்படுவதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. நேரம் கவனம்.

வலைப்பதிவு சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரைகளையும், செய்திகளையும் தாங்கி வரும் வகையில் வலைப்பதிவர்களுக்கென ஒரு அச்சு இதழைக் கொண்டு வரும் யோசனையை முன் வைக்கலாம். அதற்கான நிதியை உள்நாட்டு வலைப்பதிவர்களை சந்தாதாரார் ஆக்குவதன் மூலமும், அயல்நாடுகளில் இருக்கும் வலைப்பதிவர்களை நிர்ணயிக்கப்பட்ட தொகையின் மூலம் புரவலர்களாகப் பங்கு கொள்ளச் செய்வதன் மூலமும் திரட்ட முடியும்.  
  • இது தற்போது சாத்தியமா என்று தெரியவில்லை. நம் பதிவர்களிடம் ஆர்வமிருக்கும் அளவுக்குச் செயல்திட்டம் இருப்பதாக நாம் நினைத்துக் கொள்வது ஏமாற்றத்தில் கொண்டு போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செய்ய வேண்டியது தான். ஆனால்…?

அரசியல் சாராமல் கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பொது விசயங்களில் பங்கு கொள்ளும் வகையில் வலைப்பதிவர்களை ஒரு குழுவாக ஒருங்கிணைப்பதற்கான முயற்சிக்கு வடிவம் தரலாம்.
  • இதுவும் நம் கனவுத்திட்டம் தான். அடுத்த நூற்றாண்டில் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது. என்ன கோபி? விட்டா கட்சியே ஆரம்பிக்கலாம்னு சொல்லுவீங்க போல. நம்ம பதிவர்களில் சிலர் படுத்தும் பாடுகளில் நொந்து போய் எழுதுவதை விட்டவர்களிடம் நீங்கள் பாடம் கேட்கணும். அதீத நம்பிக்கை ஆற்றாமையைத் தந்து விடும் ஆபத்து உள்ளது. உள்ள நிலைமைக்கேற்ப அடுத்த கட்டம் பற்றி யோசிப்பதே நல்லது. ஜம்ப் பண்ண நினைப்பது வலையுலகில் நல்லதல்ல என்பதே நம் கருத்து.

  உங்களுக்கும் யோசனைகள் இருக்குமானால் விழாக்குழுவிற்கு அனுப்புங்கள்.