Saturday, 29 May 2021

கேள்விக்குறி – உணர வைத்தல்

நீண்ட மருத்துவ விடுப்பு தந்து கொண்டிருக்கும் ஓய்வின் சலிப்பும், வெளியில் செல்ல முடியாத தீநுண்மி கால முடக்கமும் ஒருவித வெறுமையை அப்ப வைத்திருந்தன.  இவைகள் அலை அலையாய் மனம் முழுக்க கேள்விகளை எழுப்பிய படியே இருந்தது. அந்தக் கேள்விகளின் மறுமுனை கோபமாய், ஆதங்கமாய், வெறுப்பாய், எரிச்சலாய் குடும்ப உறுப்பினர்கள் மீது விழுந்து கொண்டே இருந்தது. ஏனோ அவர்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கடந்து போன போது என்னுள் அது அளவில்லா குற்றவுணர்வைத் தந்தது.  கேள்விகளின் ஒரு முனையை மட்டும் பிடித்திருந்த நான் அதன் மறுமுனையைவும் என்னை நோக்கி திருப்பிக் கொண்டேன். அப்பொழுது, நாம ஏன் இப்படி இருக்கிறோம்? என்ற கேள்வி மனதில் எழுந்தது. அந்த கணம் நினைவில் வந்தது கேள்விக்குறிபுத்தகம்.

வாசித்து சில வருடங்கள் ஆன நிலையில் புத்தக அடுக்குகளில் தேடி எடுத்து மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். ஏன் இப்படி இருக்கீங்க? என்ற கேள்வியில் தொடங்கி தொகுப்பில் இருக்கும் 16 கேள்விகள் வழியாகவும் என்னை நானே ஊடுருவி பார்த்துக் கொண்டேன். இக்கேள்விகளில் சிலவற்றை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எதிர் கொண்டிருப்போம். வேறு சிலவற்றை மற்றவர்களிடம் கேட்டிருப்போம். எதிர் கொள்வதற்கும், கேட்பதற்கும்  பொதுவாய் பார்க்கும் போது பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியும். உற்று நோக்கினால் இரண்டும்  ஒன்றே என்பதை உணர முடியும். முனைகள் மட்டுமே வேறாக இருக்கும்!

இத்தொகுப்பில் இருக்கும் கேள்விகளுக்குத் தன்னிடம் பதில் இல்லை என்பதை எஸ். ரா.  ஒப்புக் கொள்ளும் அதே சமயம் அந்தக் கேள்விகளின் பொருட்டு சக மனித வாழ்வியலின் உள் உணர்வுகள் வழியாக எழுப்பும் கேள்விகள், பார்வைக் கோணங்கள் மூலம் நம்மை நமக்குள்ளாகவே விவாதிக்க வைக்கின்றார். நாம் எழுப்பும் அல்லது நம்மை நோக்கி நீட்டப்படும் பல கேள்விகள் புரிதலின்மை, அணுகலின்மை, அக்கறையின்மை, உதாசீனம், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு, புறக்கணிப்பு ஆகியவைகளாலயே வீரியம் பெற்று நிற்கின்றன. அவைகளைக் கண்டும் காணாதவர்களாய் மறுதலித்துக் கடந்து போவதாலயே கேள்விகள் முடிவற்று இன்னும் நீண்டு நம்மோடு வந்து கொண்டிருக்கிறதோ? என எஸ். ரா. கொள்ளும் சந்தேகம் தொகுப்பை வாசித்து முடிக்கையில் நம் மனதிலும் தோன்றுகிறது.

ஒவ்வொரு கட்டுரையையும் சக மனித வாழ்வியலின் காட்சிகள் வழி நகர்த்திப் போகும் எஸ்.ரா. ஒரு கதையோடு நிறைவு செய்கிறார். அதன் இறுதியில் அவரின் குரலாய் ஒலிக்கும் சிறிய வரிகளில் ஒளிந்திருக்கும் உண்மை நம் மன இருட்டில் வெளிச்சம் பாய்ச்சிச் செல்கிறது. அகவயமாகக் கொண்டிருக்கும் கீற்றை தரிசிக்கத் தந்து போகிறது.

எல்லோரும் அறிந்த, கவனித்த, கடந்து சென்ற ஒன்றை தன்னுடைய பார்வையில் எழுதிக்காட்டும் விதம், காட்சிகளின் விவரிப்பு ஆகியவைகளின் வழியாகத் தன்னுடைய படைப்பின் ஊற்றுக் கண்களுக்குள் வாசிக்கின்றவனை இறக்கிச் செல்லும் எஸ்.ரா.வின் தனித்த அடையாளம் இத்தொகுப்பிலும் உண்டு. எறும்புகள் கையில் அப்பிக் கொள்வது போன்று நம் மனதில் அப்பிக்கொள்ளும் அப்படியான காட்சிகளை தனக்குள் சுருக்கிக் கொண்ட வரிகள் கட்டுரைகள் முழுக்க நிறைந்திருக்கின்றன.

நம் வாழ்நாளில் உணர்ந்தும் உணராதவர்களைப் போல கடந்து வந்து விட்ட, கடந்து போய்க் கொண்டிருக்கிற கேள்விகளில் நம்மை நிறுத்தி கேள்விக்குறி உணர வைத்து விடுகிறது. உணரும் போது அக்கேள்விகள் நம்மில் இருந்து பழுத்த இலையாய் கனிந்து இறங்கும்.

No comments:

Post a Comment