படைப்பாக்கத்தின் வடிவமைவுகள் காலந்தோறும் மாறிக் கொண்டே இருக்கின்றன. கதை சொல்லும் முறையும், அதற்கென கையாளப்படும் மொழி லாவகமும் பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தவைகளிலிருந்து முற்றிலும் வேறாகி விட்டது. கதை சொல்லலுக்குள் ஒளிந்திருக்கும் வாசகனுக்கான வெற்றிடத்தை முழுமையாக அவனுக்கு ஒப்புக் கொடுக்கும் அதேநேரம் தனது புனைவின் மையத்தை நோக்கி மிகச் சரியாக அவனை நகர்த்தி வர வைப்பது நவீன கதையாடல் பாணியில் படைப்பாளிக்கு இருக்கும் பெரிய வசதி அல்லது கிடைத்திருக்கும் சுதந்திரம் எனலாம். தனக்கான வெற்றிடத்தை தன்னளவில் நிரப்பிக் கொண்டு வாசிக்கின்ற புனைவுக்கு இணை நேர் கோடாகவே பயணித்து வரும் வாசகன் அதன் மையத்தை மிகச் சரியாகவோ அல்லது நெருக்கத்திலோ வந்தடையும் போது ஏற்படும் மனநிலையில் ஆசுவாசம் கொள்கிறான். ஒரு நிறைவு அவனை சூல் கொண்டு விடுகிறது. அது ஒன்றே அவன் செல்லும் இடமெல்லாம் அந்த படைப்பை சுமந்து செல்ல வைக்கிறது. எங்கும் பகிரத் தூண்டுகிறது. சலிப்பின்றி மீள்வாசிப்பு செய்ய வைக்கிறது. அப்படி நான் சமீபத்தில் மீள் வாசிப்பு செய்த தொகுப்பு “அறம்”. வம்சி வெளியீடு செய்திருக்கிறது.
ஜெயமோகனின் படைப்புலகத்தைப் பொறுத்தவரை அவரின் புனைவுகளின் மையத்தை ஒரே வாசிப்பில் மிகச் சரியாக கண்டடைபவர்கள் குறைவு என்றே நினைக்கிறேன். அவருடைய இணையப் பக்கத்தில் வாசகர்களால் எழுதப்படும் புனைவுகள் சார்ந்த கடிதங்களே அதற்கு சாட்சி எனலாம். புனைவில் ஒரு வாசகனின் பார்வை வழியாகத் தான் விட்ட இடத்தை அல்லது தொட்ட இடத்தை இன்னொரு வாசகன் பகிர்ந்து கொள்ளும் போது அது புதிதாய் வாசிக்க நுழைபவர்களுக்கு புரிதலுக்கான ஆரம்பத்தை தருகிறது. இப்படியான ஒரு நிலையில், உண்மை நிகழ்வுகளை நேரடி கதை சொல்லல் பாணியில் ஜெயமோகன் எழுதி இருக்கிறார்.