
திண்ணன் என்ற வேடவ குலத்தைச் சேர்ந்த இளைஞன் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்ற இடத்தில் மலையின் மீது இருந்த சிவலிங்கத்தைப் பார்த்து உள்ளம் உருகிப் போனான். யாருமில்லாத இந்தக் காட்டில் உறைந்திருக்கும் இறைவனை யார் பாதுகாப்பது? உணவு தருவது? என்று நினைத்தவன் தானே அவ்விரு காரியங்களையும் செய்ய முடிவெடுத்தான்.
இறைவனை அபிஷேகம் செய்வதற்கு வேண்டிய நீரை வாயிலும், அழகிய மலர்களைத் தலையிலும், தன் நண்பர்களோடு சமைத்த பன்றி இறைச்சியைக் கையிலும் ஏந்தி வந்து இறைவனுக்குப் படைத்தான். இரவெல்லாம் கண் விழித்து காவல் இருந்தவன் காலையில் நீராடச் சென்றான். தினந்தோறும் பூஜை செய்ய வரும் சிவகோசரியார் இறைவனுக்கு இறைச்சி படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அபச்சாரம்….அபச்சாரம் எனக் கூறிக் கொண்டே எல்லாவற்றையும் சுத்தம் செய்து அபிஷேகம் செய்து விட்டு இல்லம் திரும்பினார் மறுநாளும் அப்படி இருப்பதைக் கண்டு இதைச் செய்தவர் யார்? எனக் காட்டும் படி இறைவனிடம் முறையிட்டார்.