Showing posts with label பாக். ஒரு புதிரின் சரிதம். Show all posts
Showing posts with label பாக். ஒரு புதிரின் சரிதம். Show all posts

Wednesday, 15 December 2021

பாக். ஒரு புதிரின் சரிதம் - பால்ய உறவுகளின் நரக அவஸ்தை!

நாளிதழ்கள் வாசிக்கப் பழகிய காலந்தொட்டு அவைகளைத் திறக்கும் போதெல்லாம் சில வரிகளிலாவது பாகிஸ்தான் பற்றிய செய்தி இல்லாமல் இருக்காது. காலஓட்டத்தில் அந்த இடத்தை ஆப்கானிஸ்தான் பிடித்திருக்கிறது. நம் ஆதி பூமியின் அங்கமான இவ்விரு தேசங்களும், அங்கு தலைமையகம் அமைத்து இயங்கும் இன, தீவிரவாத குழுக்களும் எப்பொழுதுமே உலகிற்கு ஒரு புதிர் தான்! இந்த விசயத்தில் அறிதலுக்கும், புரிதலுக்கும் மூத்தவன் பாகிஸ்தான் என்பதால் அந்த தேசம் பற்றியும், அதன் அடிப்படை அரசியல் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல் இருந்தது. நாடுகள் பற்றி எழுதப்பட்ட நூல்களின் வரிசையில் அதற்கு வழி இல்லாத நிலையில் அவைகளுக்கான தீனியாக நாளிதழ் செய்திகள் மட்டுமே அப்போதைய சூழலில் எனக்கு இருந்து வந்தது. அச்சமயத்தில் பாகிஸ்தான் பற்றிய வழமையான நூல் வகையில் இல்லாது முற்றிலும் அந்நாட்டு அரசியல் பற்றி மட்டுமே பேசும் இந்நூலை கிழக்கில் இருந்து வாங்கினேன்.

விரும்பி வாங்கி வாசித்த நூலை இரவல் வாங்கிய நண்பர் ஒருவழிப்பாதையாக்க மாட்டார் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். அப்படியே மாற்றினாலும் குடி முழுகிப் போய்விடாது என்றாலும் அப்போது இருந்த இந்நூலின் முகப்பு அட்டைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (இப்போதைய பதிப்பில் முகப்பு அட்டை வேறு). சமீபத்திய பருவமழைக் காய்ச்சல் மீண்டும் படுக்கையறைக்கு என்னை ஒப்புக் கொடுக்க தயாரானபோது துணைக்கு நூல்களை வைத்துக் கொள்ள ஏதுவாக நூலகம் சென்றேன். எதிர்பாராதவிதமாக ஆன்மிகம் வரிசையில் இந்நூல் உட்கார்ந்திருந்தது. துணையிருப்புக்கு கொண்டு வந்து மறுவாசிப்பு செய்தேன்.  பாகிஸ்தான் போன்ற நாடுகள் என்றால் தேச அரசியல் சரித்திரம் என்பது எப்பொழுதும் சுவையாகத் தான் இருக்கும் என்பதை மீண்டும் உணர்ந்தேன்.