(”வினவு” இணையதளத்தில் என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை)
இப்பொழுது தான் ப்ரீ கேஜி, எல் கேஜி, யு கேஜி என்று வரிசை இருக்கிறது. அப்பொழுது அப்படி இல்லை. “காதைத் தொடு…..கை எட்டுச்சா பள்ளியில் சேர்ந்து கொள்.” அவ்வளவு தான்.
முதன் முதலில் வீட்டை விட்டு பள்ளி என்ற புதிய இடத்திற்கு வரும் குழந்தைக்கு பயம் என்பது இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தை தொடர்ந்து வர விரும்பும் என்ற முக்கியத்துவத்தை அறிந்திருந்தவர் என் முதல் வகுப்பு ஆசிரியை செளந்தரவள்ளி அவர்கள். இத்தனை வயதிற்கு பின்னும் அந்த வயதின் சில நினைவுகளையும்,
சந்தோசங்களையும் சொல்ல முடிகிறதென்றால் அதற்கு காரணம் அவர்கள் தான். ’பேசாதே’ என்று ஒரு போதும் அவர்கள் வகுப்பறையில் சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஒரு கதையை சொல்லி விட்டு அதை மறுநாள் எங்களை அவர் பக்கத்தில் நிறுத்தி கையால் அணைத்துக் கொண்டு சொல்லச் சொல்வார். ஒரு டீச்சர் என்ற பயமே இல்லாமல் அவர் அருகில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்வோம், சில நாள் எங்களையே சொல்லச் சொல்வார். வகுப்பறைக்குள் ஒரு வட்டம் போட்டு ஐந்தைந்து பேராக பிரித்து உட்கார வைத்து விளையாடச் சொல்வார். மதிப்பெண்கள் தருவார். சின்ன பொம்மைகள் பரிசாக கிடைக்கும். வகுப்பறையே விளையாடும் இடமாக தான் எங்களுக்கு இருந்தது. நண்பர்களோடு விளையாடுவதற்காகவே பள்ளிக்கு வருவோம். விளையாடும் போது கீழே விழுந்து விட்டால் அவரே கிணற்றடிக்கு அழைத்து சென்று கழுவி விட்டு அன்று முழுவதும் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். அப்படி ஒரு நாள் விளையாடும் போது நான் கீழே விழுந்து சில்லு மூக்கை உடைத்துக் கொண்ட போது என் சட்டையை கழற்றி, அவரே அலசி பாடவேளை முழுவதும் கால் சட்டையோடு வகுப்பறையில் இருக்க அனுமதித்தவர். (அப்போது நான் போட்டிருந்த சட்டையின் நிறமும், டிஸைனும் கூட இன்றும் என் நினைவில் இருக்கிறது).