Sunday, 8 September 2019

மெளனம்

முத்தையாவுக்கும், சுதாகருக்கும் ஒரே உணவகத்தில் வேலை. அவர்கள் தங்கியிருக்கும் அறை உணவகத்தின் மேலேயே இருந்தது. ஐம்பத்திரண்டு வயது முத்தையா அந்த உணவகத்தில் சமையலறை உதவியாளராய் வந்து இன்று காசாளராய் உயர்ந்திருப்பவர். இரவில் ஒரு குவார்ட்டர் இல்லாமல் அவரால் கண் அயர முடியாது. இப்போது ஆயிரங்களில் சம்பளம் வாங்கினாலும் குவார்ட்டர் என்ற அளவை அவர் மாற்றவில்லை. இது தவிர வாரத்தின் மூன்று நாட்களும் தலா பத்து வெள்ளிக்கு நான்கு நம்பர் பரிசுச் சீட்டு* எடுத்து விடுவார். சிங்கப்பூரைச் சூழும் புகை மூட்டம் போல அவ்வப்போது அதில் விழும் அதிர்ஷ்டப் பரிசும் ஐநூறு வெள்ளியைத் தாண்டியதே இல்லை. அதேபோல சம்பளத் தேதியின் மறுநாள் சூதாட்டக் கூடத்திற்குச் சென்று விடுவார். அங்கு சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் அவரின் பணப்பை பிரசவத்திற்குப் பிந்தைய பிள்ளைத்தாச்சியாய் மாறிவிடும். ஆனாலும் அது பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. மகளுக்குத் திருமணம் செய்து விட்டதால் சேமிப்பு பற்றி அதிக அக்கறையின்றி ஊரில் இருக்கும் குடும்பத்திற்கு அவ்வப்போது சில நூறு வெள்ளிகளை ஏஜண்ட்* மூலம் அனுப்பி வைப்பார். சில மாதங்களில் அதுவும் கிடையாது. இத்தனை இருந்தும் வேலை விசயத்தில் முத்தையாவை அசைத்துப் பார்க்க முடியாது. தவிர்க்க முடியாத நிலையிலும் கூட வேலைக்கு வருவதைத் தவிர்க்கமாட்டார். வேலையின் மீது இருந்த அந்த மோகம் கடை முதலாளியிடம் அவரை எப்பொழுதும் செல்வாக்கு மிக்க ஊழியாராக வைத்திருந்தது.

Thursday, 5 September 2019

நாமளும் தான் பள்ளிக்கூடம் போனோம். நமக்கும் தான் வாத்தியார் இருந்தாரு....

 
தன் வகுப்பு ஆசிரிய - ஆசிரியைகள் சார்ந்த எதுவொன்றுக்கும் தங்களின் அன்பை அவர்களுக்குத் தெரிவிக்க சுயமாய் தயார் செய்த கிரிட்டிங் கார்டு, சிவப்பு மை பேனா என ஏதாவது தருவதை மகளும், மகனும் வழக்கமாய் வைத்திருந்தார்கள்.

கடந்த வருடத்தில் இருந்து அவைகளோடு சேர்த்து புததகமும் தரலாம் என அவர்களிடம் ஆலோசனை சொன்னேன். ஆரம்பத்தில் புத்தகமுமா? என இழுத்தார்கள். ஆனால், மறுக்கவில்லை. அந்த யோசனை நல்ல பலனைத் தந்தது. தங்களின் பிறந்த நாள உள்ளிட்ட எல்லா பள்ளி நிகழ்வுகளுக்கும் தர புத்தகங்களைக் கேட்க ஆரம்பித்தார்கள். 

ஆசிரியர் தினத்திற்கு "தன்னம்பிக்கை" வரிசையிலான புத்தகங்கள் தரலாம் என எங்களுக்குள் முடிவானது. இன்று ஆசிரியர்களுக்கு வழங்கும் நோக்கில் நேற்றிரவு அலுவல் நேரத்தில் அழைத்து ஐந்து புத்தகம், மூன்று பேனா வாங்கித் தாருங்கள். கார்டு நாங்களே செய்து விடுகிறோம் என்றார்கள். சரி என சொல்லியிருந்தேன்.

Tuesday, 3 September 2019

"பல்ப்” ஐடியா!

 

ஃபிளாஷ் கார்டு (FLASH CARD) செய்ய புத்தகம், கார்டூன், கடிகாரம் என பல யோசனைகளை மகள் சொன்னாள். புதிய புத்தகம் ஒன்றிற்கான தரவுகளைத் திரட்டும் வேலையில் மனம் லயித்திருந்ததால் அதைச் செய்து பார்க்கும் மனநிலை எனக்கு இருக்கவில்லை. அவளும் அவள் பங்கிற்கு தொடர்ந்து செயலாக்கத்திற்கான யோசனைகளை என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தாள். 

ஈடுபாடற்ற மனநிலையே மிஞ்சியது. 

எதுவும் சரியாய் அமையவில்லை என்பதை உணர்ந்தவள் யோசித்த ஐடியாவெல்லாம் "பல்பா"? என்று கேட்டாள்.  

அந்தக் கேள்வியே ஐடியாவானது.