Saturday, 4 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 31

 அத்தியாயம்- 31 

(மந்திரமலர்)

சில அத்தியாயங்களுக்கு முன் மழையில் நனைந்து மயக்க நிலையில் கிடந்த கோவிந்தசாமியின் கதி என்னவாயிற்று? என்பதற்கான விடை மந்திரமலரில் மலர்ந்திருக்கிறது.

கோவிந்தசாமியின் கனவில் வரும் சாகரிகா அவன் கனவிலும் நினைத்திராத படி இருக்கிறாள். கனவிலும் கூட அவளின் அன்பிற்காக ஏங்குபவனாகவே கோவிந்தசாமி இருக்கிறான். கனவில் வந்து கலைந்து செல்லும் சாகரிகாவுக்காக கண்ணீர் சிந்தும் கோவிந்தசாமிக்கு ஆறுதல் தருகிறாள் மருத்துவமனை செவிலி.  அதோடு அவள் தரும் யோசனை கோவிந்தசாமியையும் நீலநகர வனத்திற்கு வர தூண்டுகிறது. தூண்டல் துலங்கியதா? என்பது இனி தான் தெரிய வரும்.

நீலநகரத்தில் நீர் நிலைகளில் தலைகீழாக நின்றாலும் தாமரை பூக்காது, என்னை ஒரு தேசியவாதியாகவே உணர்கிறேன், கருப்பும், சிவப்பும் சகிக்க முடியாத நிறம் என கதாபாத்திரங்கள் ஊடாக ஓடும் இழைகள் இலை மறைக் காயாக பா.ரா.வின் நிலைப்பாட்டை சொல்லி விடுகிறது. இன்றைய எதார்த்தத்தமாகவும் இருக்கிறது!

Thursday, 2 December 2021

உங்கள்ட்ட கூட இந்த பத்திரிக்கை இல்லைல?

முன்பொருமுறை என் திருமண நாளுக்கான வாழ்த்தை இதே பத்திரிக்கையை இணைத்து மணிமேகலைப் பிரசுரத்தின் அதிபர் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள் அனுப்பி இருந்தார். புத்தகங்களை சீர் செய்யும் முனைப்பில் அதை தவற விட்டேன். புத்தகங்களின் பக்கங்களுக்குள், பரண் ஏற்றிய பெட்டிகளில் அது அமிழ்ந்திருக்கும் என்பதால் தேடலை விட்டு வைத்திருந்தேன். நண்பர்களை இப்படியாக இழந்து வருபவனாகவே எப்பொழுதும் நான் இருந்து வருகிறேன். ஆனால், என் நண்பர்கள் அப்படி அல்ல.

என் திருமணநாள் சார்ந்த நிகழ்வை முகநூலில் பதிந்திருந்தேன். நண்பர்களால் வாழ்த்துப்பெட்டி நிரம்பி இருந்தது. அதில் என் நண்பன் தேவா 17 ஆண்டுகளுக்கு முன் என் திருமணத்திற்காக அவருக்கு நான் அனுப்பி இருந்த என் திருமண அழைப்பிதழை இணைத்து தன் வாழ்த்தை பகிர்ந்திருந்தார். வியப்பாய் இருந்தது. நண்பர்கள் என்னை எப்பொழுதும் நினைவோடையில் வைத்திருக்கிறார்கள் என மகளிடம் காட்டியதும் ஆச்சர்யத்தோடு பார்த்தவள் தனக்கே உரிய நக்கல் தொனியில் ”உங்கள்ட்ட கூட இந்த பத்திரிக்கை இல்லைல?” என்றாள்.

உன் உலகம் உறவுகளை விட நண்பர்களால், அவர்களின் நினைவுகளாலயே சூழ்ந்தும், நகர்ந்தும் வருகிறது என்பதை என் திருமண நாள் பதிவிற்கு வந்த இந்த வாழ்த்து மீண்டும் எனக்குச் சொன்னது.

 

Wednesday, 1 December 2021

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் – செல்வந்தனாவதற்கான செயல் தூண்டல்!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறிய நேரத்தில், நிறைய சம்பாதியுங்கள். அதில் ஒரு பகுதியை உங்களுக்காக மட்டும் சேமியுங்கள். இளமை பிராயம் முழுக்க அதை மறந்தும் விடுங்கள் என்று எங்கள் பேராசிரியர் அறிவுரை சொன்னார். அந்த வயதில் அறிவுரை எல்லாம் அக்கப்போராக இருந்ததால் கடைபிடிப்பது பாகற்காயாகிப் போனது. காலம் சும்மா விடுமா? பாலபாடத்தை அது நடத்த ஆரம்பித்த போது அந்த அறிவுரையின் வீரியம் எனக்கு மட்டுமல்ல இன்று நான் சந்திக்கும் என் கல்லூரி கால நண்பர்களுக்கும் உரைக்க ஆரம்பித்தது. இது உலகம் முழுக்க இருக்கும் இளைய தலைமுறைக்கும் பொருந்தும் போலும்! அதனாலயே சேமிப்பு குறித்து எழுதப்படும் ஆங்கில நூல்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகின்றன. அதன் மொழிபெயர்ப்புகள் நம் தாய்மொழியிலும் வாசிக்க கிடைக்கின்றன. அப்படி சமீபத்தில் வாசித்த நூல் ஜார்ஜ் எஸ். க்ளேசன் எழுதிய பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் (THE RICHEST MAN IN BABYLON).