Saturday, 2 February 2013

குறிப்பேட்டின் குறிப்புகள்

அதிர்வுதரும் கணம் அசாத்தியமாய்
தலையை உள்ளிழுக்கும் ஆமையாய்
உன் விருப்பத்தை
தன்னில் வலுவானதை தடம் மாறாது
இருப்பிடம் சேர்க்கும் எறும்பாய்
உன் சூதனத்தை
கடைசிப் புணர்வை பகலிடம் பகிர்ந்து
இரவை பிரசவிக்கும் அந்த நிமிடமாய்
உன் கோபத்தை
சாவுச்செய்தியோடு வாசல் தட்டி
தலை கவிழ்ந்து நிற்கும் வெட்டியானாய்
உன் மறுப்பை
நசிந்து கிடந்தேனும் பூரான்காலாய் விரவி
செடியை உயர்த்தி நிறுத்தும் வேர்களென
உன் ஆசையை
அடக்க முடியா வேட்கைக்குப் பின்
வீசியெறியப்பட்ட சதைத்துண்டாய்
உன் சந்தோசத்தை
பதிந்து வைத்திருக்கும் அதே குறிப்பேடு
தன் கடைசிப் பக்கத்தில்
குறித்து வைத்திருக்கிறது

நீயும்,நானும்
நிரந்தரமாய் விலகிச் செல்வதற்காய்
சந்திக்க வேண்டிய தினத்தையும்.

நன்றி : அதீதம்