அதிகாரபலம், ஆணவபலம்
படைபலம் – கொண்டு
வீரர்களை புதைத்து விட்டோம் என
புழங்காகிதம் அடைகிறாய்.
முள்வேலிக்குள் வைத்துவிட்டோம்
முன்னிருந்த வேகம் போய்விடும்
நம் சிங்கமயிர் தப்பிவிடும் என
சிந்தை குளிர்கிறாய்.
எல்லை கடந்தவர்கள் எழமாட்டார்கள்
அகதிகளானவர்கள் ஆர்ப்பரித்து
வரமாட்டார்கள் என நினைக்கிறாய்.
இதுவன்றி
வேறு என்ன செய்யமுடியும் உன்னால்?
பதுங்கி ,பதுங்கி தான் புலி
பாய்ச்சலுக்கு தயாராகும்.
குமுறி, குமுறி தான் மலை
எரிமலையாய் பிளக்கும்.
காலச்சக்கரம் மெல்ல சுழன்று
ஓர் புள்ளிக்கு வரும் தினமொன்றில்
தண்ணீரால் பிரிந்த நாங்கள்
உள்ளோடும் செந்நீரால் இணைவோம்.
இழந்தவைகளை நினைத்து
இருப்பை விட்டுவிடாமல்
இன்னொரு மீட்டெடுப்பில்
இருப்பை உறுதி செய்ய வருவோம்.
தோண்டி வைத்து கொள்ளுங்கள்
புதிய குழியை………
எங்களின் புதிய பாய்ச்சலில்
உங்களை நீங்களே புதைத்துகொள்ள!
உங்களுக்கு வேண்டுமானால்
மரணம் முடிவாகலாம்
எங்களுக்கு அதுதான்
வாழ்வு!.......
வாழ்க்கை!
நன்றி : லங்காஸ்ரீ