Sunday, 9 December 2012

ஆத்மசோதனை

இலக்கணம் படித்து
இலக்கியம் படைக்க வா
என்றபோது 
இடித்துரைத்தோம்.

மரபுகளை கற்று
மரபை மீறு
என்றபோது 
மறுப்பு செய்தோம்.

புதுக்கவிதை செய்து
புது உலகம் படைக்க
புறப்பட்டவர்கள்
நாங்கள் – என்றோம்.

இறுக்கங்களை
இலகுவாக்கி
மறுப்புகளை
மரபாக்கியவர்களோடு சேர்ந்தோம்.
  
நம் கூட்டணியின்
கூட்டல்களில்
குயில்களின் கூவல்களை
கேட்க வைத்தோம்.

கால ஓட்டத்தில்…………

பாதை காட்டியவர்கள்
பயிராய் வளர
பாதசாரியாய் வந்த நாமோ
பதர்களாகி போனோம்.

அளவில்லா கற்பனையில்
அர்த்தமில்லா அனுமானத்தில்
அவரவர் இஷ்டத்திற்கு
எழுதிக் குவித்தோம்.  

காதலின் அவதானங்களை
கவிதைகளாக்கி
கவிதைக்கே
கல்லறை கட்டினோம்.

பாதிப்புகளின் 
பதிவுகளை
பெண்களின் பின்னழகில்
புதைத்து வைத்தோம்.

சமூக கொடுமைகளை
சாடுவதாய்
அற்ப விசயங்களுக்கு
ஆடி களைத்தோம்.

பெண்மையை
மேன்மைபடுத்துவதாய் சொல்லி
மெல்ல,மெல்ல
படுக்கை பொருளாக்கினோம்.

பெண்களின் அங்கங்களை
குறியீடுகளாக்குவதாய் சொல்லி
அடி முதல் நுனி வரை
நிர்வாணமாக்கினோம்.

கவிதையின்
கனபரிணாமங்களை கலைத்து
கவிதைக்கே
கையறுநிலை பாடினோம்.
  
நம்பிக்கையோடு வந்த வாசகனுக்கு
அக்கினி குஞ்சுகளுக்கு பதில்
அக்குள் சிரங்குகளை
அள்ளி கொடுத்தோம் – இப்படியாக…………..
  
நினைத்தது ஒன்றாய்
நடந்தது ஒன்றாய்
புதுக்கவிதையை
கோமாவாக்கியது போதும்.

இனி ஒரு
அறுவை சிகிச்சை செய்தேனும்
புதுக்கவிதைக்கு
பூரணம் செய்வோம்.

நமக்கு நாமே
ஆத்ம பரிசோதனைக்கு
தயாராவோம் – வாருங்கள்.

நாமெல்லாம்
சிலை செதுக்கும் சிற்பிகளா?இல்லை
அம்மி கொத்தும் கூட்டமா?என்று!

நன்றி : திண்ணை