Wednesday 3 July 2013

கதைகள் கேட்டு வளர்ந்தவள்


சிறைப்பறவையான பின்பும்
வனத்தில் தவமிருந்த சீதை

பந்தயக்கட்டத்தில்
சூது பொருளாய் நின்ற பாஞ்சாலி

கொங்கையைக் கிள்ளி
நகரையே தீக்குள் வைத்த கண்ணகி

தலையில் தாங்கி
எமனிடம் எகிறிய சாவித்திரி

கணவனுக்காய் வாழ்ந்தவள்களின்
கதைகள் கேட்டே வளர்ந்தவள்
சுயமாய் செய்வதற்கு
ஏதுமற்ற சூன்யத்தில்
மனைவி என்ற முகமூடி தரித்து
துருத்தி நிற்கும் தசைகளை
கணவனுக்கு தின்னக் கொடுத்து விட்டு

புணர்தல் நிமித்தமாய்
புணர்ந்து அடங்கியவனின்
பொழுதுக்கு சாட்சியாய்
விழித்தெழுகிறாள் நித்தமும்.

நன்றி : கீற்று