Thursday, 11 July 2013

எழுந்து வருவோம் உன்னிலிருந்து

(உலகமே கண்டிக்கும் படி மனிதாபியமானமற்ற நிலையில் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றதை கண்டித்து எழுதிய கவிதை)

பாலச்சந்திரன்
உதிரம் கொடுத்து உயிர் துறந்து
உரிமைகள் காத்தவர்களின்
அரணில் பூத்த பூவே

தப்பிப்பதற்கான வாசல்களனைத்தும் தடைப்பட்டதால் 
சிங்கத்தின் குகைக்கு வந்தாயோ?

சிதறிக் கலைந்தவர்களிடமிருந்து
உன்னைச் சிங்கம் தூக்கி வந்தது
தன் கொட்டிலில் வைத்து சிதைத்து எறியவோ?

மனித மாமிசம் உண்ணும் 
சைவபட்சிகளிடம் சிக்கியும்
பயமறியா உன் கண்களால்
பாயும் புலிகளை தேடினாயோ?

பதுங்குஅரண் பலகையில்
மரணத்தின் விளிப்பிலும்
சிதறிக் களைந்தவர்கள்
சீறி வருவார்கள் என காத்திருந்தாயோ?

உன் தேடலும் காத்திருப்பும் பொய்த்துப் போக
எமன் தாக்கிய கதையில்
உன் கனவு கலைந்து போனதோ?

வெற்றுடம்பில் உன்னைத்  தூக்கி வந்தவர்கள்
வெறியர்களாகிப் போனார்களோ?

ஆலயத்திற்குள் வீட்டிற்குள்
புத்தனை வணங்கியவர்கள்
பித்தர்களாகிப் போனார்களோ?

அப்பன் அறுத்தது போல்
இவன் வளர்ந்து அழித்து விடுவான் என
பதறினார்களோ? பயந்தார்களோ?

அதனால் தான் 
பசிக்கு புசிக்கத் தந்தவர்கள்
பசியாறும் முன்பே பறித்தெறியத்  துணிந்தார்களோ?

மதிகெட்ட அரக்கர்களாய்
மருண்ட உன் பார்வையை
மிருகங்களாகி விழுங்கினார்களோ?

புறமுதுகு காட்டா புறநானூற்று தமிழன்
என அறிந்து மார்பில் சுட்டார்களோ?

அன்பின் இளவலே பாலசந்திரா
உன்னைத் துளைத்த ரவைகள்
பூமிக்குள் புதைந்திருக்கிறது

புதுப்புனலாய் எழுவதற்கு
நானும் விழுகிறேன் என
ஓர் விதையாய் விழுந்தாய்

உன் தலைசாய்த்து
பலர் தன்மானம் உயர்த்தினாய்
எங்கும் சூழ்கிறதடா எரிதழல்

உன் கடைசித் துளிக் குருதியை
உறிஞ்சிச் சென்ற காற்று
உலகெங்கும் தாண்டவமாடுகிறதடா

விசாரணை கேட்பவர்கள் கேட்கட்டும்
உன்னிலிருந்து எழுந்து வருவோம் நாங்கள்

சிங்கத்தின் மயிரை பிடுங்கி எறியவும்
புத்தனின் சவலைப் பிள்ளைகள் சங்கறுக்கவும்.

நன்றி : காற்றுவெளி