Thursday, 27 February 2020

இரட்டைத் தலைகளுடன் வாழ விதிக்கப்பட்டவன்!

சுபா செந்தில்குமாரின்கடலெனும் வசீகர மீன்தொட்டிசமீபத்தில் வாங்கிய, வாசித்துக் கொண்டிருக்கின்ற கவிதை நூல்களில் ஒன்று. தலைப்பு மட்டுமல்ல இதில் இருக்கும் கவிதைகளும் வசீகரமானவை. வாழ்வியலின் கூறுகளை அதன் அகத்திலும், புறத்திலுமாய் நின்று நம்மோடு கலந்துரையாடுபவைகள். அச்சு, இணைய இதழ்களிலும், முகநூல் பக்கத்திலும் இவரின் கவிதைகளை அவ்வப்போது வாசித்திருந்த போதும் தொகுப்பில் வாசிக்கும் போது அது வாழ்வின் அத்தனை இழைகளிலும் பின்னலிட்டு செல்லும் உணர்வைத் தருகின்றன.

அனுபவித்த / கேள்விபட்ட / கண்டுனர்ந்த நிகழ்வை தனக்கான மொழி நடையில் முழு சித்திரமாக்கித் தரும் சுபாவின் கவிதைகள் நமக்கான அருகாமையை இன்னும் சுருங்க வைக்கின்றன. தொகுப்பில் இருக்கும் அப்படியான பல கவிதைகளுள் ஒன்றுபொருள்வயிற் பிரிதல்எனும் கவிதை.

பொருள் ஈட்டுவதற்காகப் புலம் பெயர்தல் தமிழ் மரபு. “திரைகடல் ஓடியும் திரவியம் தேடுஎன்ற பாட்டனின் வாக்கைத் தனதாக்கிக் கொண்டவனின் வாழ்வியலை இக்கவிதை பேசுகிறது. இப்படியான வாழ்க்கைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவனை / இரட்டைத் தலைகளுடன் வாழ விதிக்கப்பட்டவன்என்ற சொல்லாடலுக்குள் கவிஞர் நிறுத்துகிறார். “விதிக்கப்பட்டவன்என்ற ஒற்றைச் சொல் அவனின் வாழ்வியல் சபத்தைச் சொல்லி விடுகிறது.

சொற்களின் சரீரத்தில் இருந்தும், அதன் சாரத்தில் இருந்தும்  கவிதைக்குள் வாசகனைக் கொண்டு செலுத்துவது ஒருவகை. குறியீடுகள், படிமங்கள், தொன்மங்கள் வழியே கொண்டு செலுத்துவது இன்னொரு வகை. இந்தக் கவிதைக்கு இரண்டாவது வகையை கவிஞர் கையாண்டிருக்கிறார். இளமைக்கால நினைவுகளின் துளிர்ப்பிற்குஉலரா நீண்ட கூந்தலையும்”, கால நகர்விற்குவெள்ளி ஒளியிழைகளை (நரை) யும்”, பிரிதலின் துயரம் நீண்டிருக்கபாதி கட்டிமுடிக்கப்பட்ட வீட்டையும்”, இழப்பின் துயர் சொல்லஉதிர்ந்த வழுக்கைத் தலையையும், மற்றவர்களுக்கான சந்தோசங்களைவிளக்குகளாகவும்குறீயீடுகளாக்கி கவிதைக்குள் அழைத்து வருபவர் பொருள்வயிற் பிரிதலின் துயரை / பாதிகளால் நிரம்புகிறது / கருப்பு வெள்ளை வாழ்க்கை/ என முடிக்கிறார். இத்துயர் சுமப்பவர்களின் வாழ்வியல் பிம்பமாய் இருக்க இந்த முடிபு ஒன்று போதாதா? கவிதையின் கடைசி வரிகளைக் கடந்து நிமிர்கையில் நம்மில், நம் குடும்பத்தில், நம் உறவினர்களில் இப்படியான துயரத்தின் விதியை வாழ்ந்து நிற்பவர்களின் முகங்கள் நினைவடுக்குகளில் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை.

நவீனத்தின் சாயல் தரித்து நிற்கும் இன்றைய கவிதை வெளிக்கு கடைந்தெடுத்த வார்த்தைகள், திடுக்கிடவைக்கும் திருப்பங்கள் எல்லாம் அத்தனை அவசியமற்றுப் போய்விட்டன. வாசிக்கின்ற கவிதையோ, கதையோ, நாவலோ வாசிப்பவனின் வாழ்வியல் கூறுகளுக்குள் நின்று நேர் பேசினாலே போதும் அதை வாசகன் கொண்டாடித் திரிவான். அதன் நீட்சியை தன் வாழ்க்கையோடும், சூழலோடும் பொருத்திப்பார்த்துக் கொண்டே இருப்பான், அதனால் தான் இதை நிகழ்த்திக் காட்டுகின்ற படைப்புகள் மண்ணில் உழன்று கொண்டே இருக்கின்றன. இந்தக் கவிதையும் புலம் பெயர்தலின் பொருட்டு தன் கை பிடித்தவளைத் துறந்து  கைப்பையைச் சுமந்து செல்லும் கடைசிப் பயண மனிதன் வரைக்கும் உழன்ற படியே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வாசித்து முடிக்கும் கணத்தில் தன் குரலாய் எழும் கேள்விகளுக்கு விடைகளைத் தேடி திருப்தி கொள்ளும் வரை அந்த கேள்வியை உயிர்பித்த வரிகளிலோ, வார்த்தைகளிலோ வாசகன் தங்கிவிடுகின்றான். அதன் பொருட்டு கண்டடையும் விசயங்கள் அந்தப் படைப்பின் உள்ளடக்கத்தை அவனுள் எப்பொழுதும் அசைபோட வைத்த படியே இருக்கின்றன. இந்தக் கவிதையும் அப்படியான ஒன்றை நிகழ்த்திக் கொள்வதை / தலைவியைப் பிரிந்திருப்பவன் / பிங்க் நிற தேங்காய்பூ டவலால் / தலை துவட்டுகிறான் / என்ற முதல் பத்தியை வாசித்து முடிக்கையில் நம்மாலும் உணர முடியும்தலைவியை ஏன் பிரிந்திருக்கிறான்? அப்படிப் பிரிந்திருப்பவன் ஏன் தேங்காய் பூ டவலில் தலை துவட்டுகிறான்? அந்த டவலை பிங்க் நிறத்தில் அவன் தேர்வு செய்ய என்ன காரணம்? என்று அனிச்சையாய் எழுந்து நிற்கும் கேள்விகள் இந்தக் கவிதையின் உள்ளடக்கத்தை கூடுதல் சித்திரமாக்கி நம்மை அசைபோட வைத்த படியே இருக்கின்றன.

விரவிக்கிடக்கும் சொற்கள் எல்லாம் வெறும் சொல் அல்ல. அது ஒரு விசை, கையாள்பவனைப் பொருத்து காற்றின் மொழியாகவும், காத்திரமாகவும் மாறுகிறது. காத்திரமாகும் சொல்லானது நம்மை அதற்குள் ஈர்த்து இறுத்தி வைத்துக் கொள்கிறது. சுபா செந்தில்குமார் தன் கவிதைக்காக சேகரித்த செற்கள் அவருக்கான மொழிநடையில்  நம்மை பிரவாகமடையச் செய்கின்றன கடலெனும் வசீகர மீன் தொட்டிக்குள்!!

 
வெளியீடுயாவரும் பப்ளிஷர்ஸ்

No comments:

Post a Comment