Monday 4 August 2014

பாலபாடம் கற்றுத் தந்தவர்

பல நூல்களின் ஆசிரியராய் மட்டுமல்ல, பல்கலைக்கழக பாடங்களை தன் படைப்புகளால் நிரப்பியவராய், தான் பிறந்த ஊரின் பள்ளிக்கூட நிர்வாகியாய், மருத்துவராய், பத்திரிக்கை ஆசிரியராய், நாடு விட்டு நாடு போய் பேசும் பேச்சாளராய் பன்முக தன்மையில் என் மண்ணின் ஆளுமையாய் இருந்தவரிடம் நான் முதன்முதலில் எழுதிய நாவலுக்கு அணிந்துரை வாங்க விரும்பினேன். வீட்டிற்கு சென்றால் நம்மை எல்லாம் சந்திப்பாரா? பேச நேரம் ஒதுக்குவாரா? என்ற சந்தேகம் என்னை சுழற்றியடிக்க அவருடைய வீட்டிற்கு செல்லாமல் கிளினிக்கிற்கு சென்று காத்திருந்தேன். அவருடைய உதவியாளர் மூலம் தகவல் தெரிந்து தன் அறைக்குள் அழைத்தவர் நாளை வீட்டிற்கு வாருங்கள். பேசுவோம் என்றார்.

மறுநாள் அங்கு சென்ற பின்பு நான் சந்தேகம் கொண்டது எவ்வளவு தவறு என்று தெரிந்தது! எந்த பந்தாவும் இல்லாமல் தன் வீட்டு நடுக்கூடத்தில் அவருக்கிணையாக அமர வைத்து பேசியதோடு அவருடைய நூல்களில் சிலவற்றை எனக்கு இலவசமாக படிக்க தந்தவரிடம் நான் ஆர்வக்கோளாறில் தமிழக நூலகங்களுக்கு உங்கள் நூல்களை எப்படி அனுப்புகிறீர்கள்? எனக் கேட்டேன்

சிறிதும் முகம் சுழிக்காமல் நூலக ஆர்டர் பெறுவதில் தொடங்கி அதை எப்படி நூலகங்களுக்கு அனுப்புவது என்பது வரை சொல்லி தந்தவர் அதன்பின்னரே இது நிறைய சிரமங்கள் கொண்டது. அதனால் அதை பதிப்பாளர்கள் செய்யும் படி வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை தந்தார். விளக்கம் எல்லாம் சொல்லாமலே இந்த பதிலை அவர் சொல்லி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அங்கு அவரிடம் முதல்பாடம். படித்தேன். அதற்கடுத்து அவர் தந்த அறிவுரை எதார்த்தத்தை எனக்கு உணர்த்தியது. ஒரு படைப்பாளி என்பதை விடவும் முக்கியம் வாழ்வாதாரம். என்ன தான் பெரிய எழுத்தாளன் என்றாலும் அவன் சைக்கிளில் போய் இறங்கினால் அவனை பெரிதாக கவனிக்க மாட்டார்கள். இங்கு எழுத்தோடு வாழ்வியல் வசதிகளும் அவசியம். அதனால் எழுத்தை நம்பி மட்டும் இயங்காமல் எழுத்தை உங்களின் இன்னொரு பக்கமாக மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி சில உதாரணங்களையும் சொன்னார். இது தான் எதார்த்தம். இதை மட்டும் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த அறிவுரை எனக்குள் ஒரு தெளிவை தந்தது. ஆரம்பகாலத்திலேயே என்னை செதுக்கி விட்ட  என் மண்ணின் படைப்பாளியான இவர் என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு திமிர் உண்டு