Tuesday 10 February 2015

காலப் பெருவெளி

சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் வெளியிட்ட முப்பது கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய காலப் பெருவெளி தொகுப்பில் இடம் பெற்றுள்ள என் இரண்டு கவிதைகள்

 

புழுதி பறக்கப் புழங்கிய வீதிகளில்

கான்கிரீட் கலவைகள்

வண்ணப் பெயர் பலகைகளுடன்

திருத்தமாய் தெருக்கள்

கால்நடையாய் போனவர்களின்

கைகளில் இருசக்கர வாகனங்கள்

ஓடுகளாகவும், மாடிகளாகவும்

உருமாறியிருந்த கூரைகள்

தொலைக்காட்சி அலைவரிசைகளில்

தொலைந்து போன முற்றங்கள்

தும்பிகள் பிடிப்பதையும் காளாண் பறிப்பதையும்

மறந்துவிட்ட குழந்தைகள் - என

அயலகம் சென்றிருந்த வருடங்களில்

வடிவம் மாறியிருந்த ஊரில்

மாறாமலே இருந்தது

கோடாரித் தைலமும்

பச்சைக் கலர் இடைவாரும் இருந்தா கொடேன்

என்ற கோரிக்கைகள் மட்டும்!

  •  

தூரத்து வானமாய்

எட்டாமலே போனது

நமக்குள் ஊடேறி கவிழ்ந்திருந்த நினைவுகள்.

கரைசேர வந்த அலையை

அள்ளிச்செல்லும் கடலாய்

நினைவுகளை வாரிக் கொண்டு திரும்பினோம்.

எடுத்துச் செல்லும் வரை தெரியவில்லை

நான் உனக்கானதையும்

நீ எனக்கானதையும் எடுத்துப் போகிறோமென்று.

திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கையில்

விதையாய் விழுந்திருந்த நினைவுகள்

உச்சரிப்பின் உவப்பில் துளிர்த்துக் கொண்டேயிருக்கிறது

என் பெயர் தாங்கிய உன் மகனாய்

உன் பெயர் தாங்கிய என் மகளாய்

அவரவர் வீட்டில்!



நன்றிதங்கமீன் வாசகர் வட்டம்