Monday, 14 September 2015

வாழ்வைச் செதுக்கும் எழுத்து

எழுத்தை தவமாய், வரமாய், வருவாயாய் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் என் எண்ணங்களை வெளியிடக் கிடைத்த தளமாய் நினைத்து அதில் இயங்க ஆரம்பித்தேன். கல்லூரிக் காலங்களில் கையில் கிடைத்த துண்டுச் சீட்டு துவங்கி நூலகத்தில் இருந்து எடுத்து வரும் நூல்கள் வரை வகைப்பாடுகளின்றி வாசிக்க, வாசிக்க அச்சமயத்தில் டைரியில் ”கவிதை” என்ற பெயரில் (காதல் கவிதைகள் அல்ல) எழுதி வைத்திருந்தவைகளைத் தொகுத்து நூலாக்கிப் பார்க்கும் ஆசை வந்தது. பதிப்பகங்கள், நூல் விற்பனை ஆகியவைகளைப் பற்றி மருந்துக்குக் கூட எதுவும் அறிந்திராத நிலையில் என் தந்தையிடம் பணம் வாங்கி முதல் கவிதை நூலை வெளியிட்டு அதை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கொடுத்து அதற்காகச் செலவிட்ட தொகையை எடுத்தேன், அதில் கிடைத்த நம்பிக்கையும், தொடர் வாசிப்பு தந்த இன்னொரு பரிணாமமும் பதிப்பகங்கள் வழி நூல் கொண்டு வரும் ஆவலைத் தூண்டியது. 1999 ல் வெளியான முதல் கவிதை நூலும் அதன் தொடர்ச்சியாக வெளியான நூல்களும் தமிழக நூலகங்களுக்குத் தேர்வாகின, அப்படித் தேர்வாகிச் சென்ற நூல்களில் ”துரத்தும் நிஜங்கள்” என்ற என் நாவலும் ஒன்று.


2001 ல் வெளிவந்த இந்த நாவல் தான் இப்போது வரை நான் எழுதி வெளிவந்த முதல் மற்றும் இறுதி நாவலாய் இருக்கிறது. அதன் பின் முகநூலில் பல வருடங்கள் கழித்து எதேச்சையாக எனக்கென்று கணக்கைத் துவங்கிய போது பல புதிய நண்பர்கள் பல்வேறு தளங்களில் இருந்தும் கிடைத்தார்கள். முண்ணனிப் பதிப்பகங்கள் மூலம் வெளியான என் நூல்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் களமாக முகநூலை நான் பயன்படுத்தத் தொடங்கி இருந்த சமயத்தில் 2014 ம் ஆண்டு ஒரு பின்னூட்டம் வழி ”நீங்கள் அந்த நாவல் எழுதியவரா?” என்ற கேள்வியோடு எனக்கு அறிமுகமானார் செ.சுவாதி.(அவரின் வலைப்பக்கம் http://swthiumkavithaium.blogspot.com/)

”துரத்தும் நிஜங்கள்” நாவலை நூலகத்தில் படித்ததாகவும், இத்தனை வருடங்களுக்குப் பின்னும் அந்த நாவல் தன் நினைவில் இருப்பதாகவும் சொல்லி ஆச்சர்யம் தந்தார். ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் நான் எழுதிய நாவல் பற்றி நான் அறியாத ஒருவர் நினைவூட்டிப் பேசிய சந்தோசம் எழுத்தின் பலத்தை எனக்கு அப்போது சுட்டியது.

பள்ளியின் தலைமையாசிரியர், கவிஞர், இருபத்தி நான்கு நூல்களை எழுதியிருக்கும் எழுத்தாளர், கலைஞர் தொலைக்காட்சியில் வாரந்தோறும் கவிதை வாசிப்பவர்,வலைப்பதிவர் என பன்முகத்திறன் கொண்ட தோழியாய் சுவாதி அவர்கள் என் நட்புப் பட்டியலில் இருந்தாலும் இதுவரை அவரை நேரில் சந்தித்ததில்லை. அலைபேசியில் பேசியதில்லை. முகநூலுக்குத் தான் வரும் சமயமெல்லாம் எழுத்து சார்ந்து நான் இடும் நிலைத்தகவலில் தன்னுடைய எதிர்வினைகளையோ, கருத்துகளையோ இட்டுச் செல்லுவார். சமீபத்தில் வாசிப்பும், எழுத்தும் சார்ந்து என்னில் அக்கறை கொண்டவரின் எதார்த்த பேச்சால் இருந்த மனநிலையை  நிலைத்தகவலாய் இட்டிருந்த போது பின்னூட்டமாய் அவர் சொன்ன தகவல் எழுத்தின் பலத்தை மட்டுமல்ல நட்பின் நம்பிக்கையையும் எனக்குச் சுட்டியது.

அவர் மீது பிரியமும், அன்பும் கொண்ட ஒரு தம்பதி தன் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னபோது ”கோபி சரபோஜி” என உங்கள் பெயரை வைத்தேன். உங்களைப் பற்றிய விபரங்களைக் காட்டி அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் சம்மதம் பெற்றேன் என அவர் எழுதி இருந்த பின்னூட்டத்தை வாசித்த போது அந்த நிலைக்கு நான் தகுதியானவனா? என என்னை நானே கேட்டுக் கொண்டேன். அந்த உயரத்திற்கு நான் தகுதியுடையவனா? என்று தெரியாத போதும் இப்போது இருக்கும் தன்மையிலிருந்து கீழானவாக ஒருபோதும் மாறி விடக்கூடாது என்பதே என் விருப்பமானது.

பொருளாதார ரீதியாக ஒரு பயனுமில்லையென வாசிப்பின் மீதும், எழுத்தின் மீதும் ஒருவித அயர்ச்சி வரும் போதெல்லாம் எங்கிருந்தோ நேரில் முகம் பார்க்காதவர்களிடமிருந்து, அலைபேசியில் அறிமுகமாகதவர்களிடமிருந்து வரும் நம்பிக்கைகளும்,, உந்துதல்களும் இன்னும் ஈரமாய் வாழ்வை வைத்திருக்க உதவுகிறது. பிழையற்ற வாழ்வை வாழும் மனநிலையைக் கொடுக்கிறது. எழுத்து அன்றாடச் செலவினங்களுக்கு எதுவும் தரவில்லை என்றாலும் வாழ்வியலுக்குத் தேவையான இப்படிப் பட்ட அன்பையும், பிரியங்களையும் திகட்டத் திகட்டத் தந்த படியே தான் இருக்கிறது.