Monday 21 September 2015

கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய சுற்றுப்புறக் காரணிகளால் பின்னப்பட்டிருக்கும் பிரபஞ்சமானது அக்காரணிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப நம் வாழ்வியல் முறையிலும் தாக்கங்களைப் பிரதிபலிக்கின்றது. அப்படியான மாற்றங்களைச் சுற்றுச்சூழலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம் அறியாமையாலும், அலட்சியத்தாலும், புரிதலின்மையாலும் உருவாக்கிய படியே இருக்கிறோம். தொழிற்சாலைக் கழிவு, கதிரியக்கக் கசிவு, வாகனங்களின் சப்தம், புகை, பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களின் பயன்பாடு, மலைகள், காடுகள் அழிப்பு, பூச்சிக்கொல்லி, இரசாயண மருந்து பயன்பாடு ஆகியவைகளின் வழி நாம் ஏற்படுத்தும் மாற்றங்களுக்குப் பதிலடியாக இயற்கையும் மிகக் கடுமையான எச்சரிக்கை சமிஞ்கைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் நாமோ அதை உணராமல் எச்சரிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகிறோமே ஒழிய அப்படியான நிகழ்வுகள் மீண்டும் நிகழாதவாறும், அதன் தீவிரம் அதிகரிக்காதவாறும் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

நமக்கான வேராக இருக்கக்கூடிய பூமியின் நாசித்துவாரங்களை மக்காத குப்பைகளாலும், இரசாயண பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் அடைத்து விடுகின்றோம். சுவாசத்தை இழந்து கிடக்கும் பூமியில் நாம் சுவாசிப்பது அத்தனை எளிதல்ல என்பதை மறந்து விட்டு நாகரீகம் என்ற பெயரில் நாள்தோறும் அதன் சுவாசத்தை இறுக்கிப் பிடிக்கின்றோம். ஒவ்வொரு இந்தியனும் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஐந்து கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாய் ஒரு புள்ளி விபரத் தகவல் சொல்கிறது. பயன்பாட்டிற்குப் பின் தூக்கி எறிப்படும் பிளாஸ்டிக் பொருட்களும், நெகிழிப் பைகளும் பூமியில் மக்காமல் பல நூறு ஆண்டுகள் அப்படியே தங்கி விடுகின்றன. நெகிழிப் பைகளின் வர்ணத்தால் ஈர்க்கப்பட்டு அதை உணவாக உட்கொள்ளும் விலங்குகளும், பறவைகளும் அதில் கலந்திருக்கும் நச்சுப் பொருட்களால் இறக்கின்றன. அவைகளைத் தின்று செரிக்கும் ஆடு, மாடு ஆகியவைகளின் பால், இறைச்சி வழி மனிதர்களுக்குள்ளும் அந்த நச்சுகள் நுழைந்து பலவித தீங்குகளை உருவாக்குகின்றன.

தாரளமயமாக்கல் மூலம் சுக வாழ்க்கை நிலைக்கு  பழக்கப் பட்ட பின் நகரமயமக்கல் என்ற வாழ்க்கைக்கு அடிமையாகி அதற்காகக் காடுகளை வெட்டி எறிகின்றோம். தன் சுகபோக வாழ்விற்காக காடுகளை அழித்து அங்கு வாழும் ஜீவராசிகளின் வாழ்வியலை, அவைகளின் வாழ்வாதாரங்களை அழித்து விடுகிறோம். அதனால் தான் தன் வாழ்விடங்களை இழந்த விலங்குகள் மனிதர்களைப் போலவே நகரங்களுக்குள் குடி புகுந்து தன் வாழ்விடங்களைத் தகர்த்தெறிந்து வரும் மனிதர்களை வேட்டையாடுகின்றன. இயற்கைச்சமநிலை சீர்குலைவுக்கு காடுகளின் அழிப்பே முதல் காரணமாய் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தேவைகளுக்காக அழிக்கப்படும் காடுகளை விடவும் பல மடங்கு பரப்பளவுள்ள காடுகள் காட்டுத்தீயால் வருடம் முழுக்க அழிக்கப்படுகின்றன. இந்தக் காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்வதற்கு மனிதத் தவறுகளே காரணமாக இருக்கின்றன. அணைக்கப்படாமல் போடப்படும் சிகரெட் துண்டுகள், வீசி எறியப்படும் மதுபானப் புட்டிகளின் கண்ணாடிச் சிதறல்களில் சூரிய ஒளி குவிவதால் உருவாகும் வெப்பம் இவைகளோடு சமூக விரோத நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டு வைக்கப்படும் தீ ஆகியவைகளால் காடுகளோடு வளிமண்டலமும் நாசமடைகிறது, காற்றுமண்டலத் தூய்மைக்கேட்டால் நுரையீரல், சுவாசக் கோளாறுகள் உருவாகின்றன.

பூமிக்கும், வானுக்கும் நீரிணைப்பைப் போல் இருக்கின்ற மரங்களையும், காடுகளையும் அழித்து விடுவதால் அவைகளுக்கிடையேயான தொடர்பு அறுந்து போய் பூமியின் வெப்பம் அதிகமாகி துருவப் பகுதிகளில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் உருக ஆரம்பிக்கின்றன. கடல் மட்டம் உயர, உயர அதன் சீற்றம் அதிகமாகி சுனாமியாய் மாறி ஊரைச் சுருட்டிப் போகிறது அதன் தொடர்ச்சியாக நிகழும் பருவநிலை மாற்றங்களால் மழை பொழிவு குறைந்து வறண்ட விளை நிலங்களைக் காணப் பொறுக்காமல் விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்.

சுற்றுசூழல் பாதுகாப்பிற்கென செய்ய வேண்டிய வசதிகளை முறையாகச் செய்யாத தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயணக்கழிவு நீரால் அத்தொழிற்சாலைகளுக்கு அருகில் இருக்கும் தாவரங்கள், விலங்குகளோடு மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். தோல் சார்ந்த நோய்களையும், சுவாச நோய்களையும், மலட்டுத் தன்மையையும் உருவாக்கும் இத்தகைய இரசாயணக் கழிவு நீர் கடலில் கலக்கும் போது கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவு மடிகின்றன. அவைகளை உணவாக உட்கொள்ளும் மனிதர்களுக்கு அந்நோய்கள் பரவுகின்றன.

2020 ம் ஆண்டில் நுரையீரல் தொடர்பான நோய்கள் உயிர் பறிக்கும் நோயாக மாறும் அபாயம் இருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை தான் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. தவிர, வீடுகளில் பயன்படுத்தும் நவீன கண்டுபிடிப்புகளான மின் சாதனப் பொருட்கள், குளிர்சாதனக் கருவிகள் ஆகியவைகளிலிருந்து வெளியேறும் வாயுக்களால் பூமி வெப்பமடைவதோடு காற்றுமண்டலமும் மாசுபடுகிறது. பசுமைக்குடில் வாயு என்றழைக்கப்படும் மனிதர்களுக்குத் தீங்கு செய்யும்  கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஓசோன், நீர் வாயுக்கள் தொழிற்சாலைகளை விட வீடுகளிலிருந்தே அதிகமாக வெளியேற்றப்படுகின்றன.

அதிவேகமாக மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் ஒவ்வொரு மாற்றமும் இலவச இணைப்பாய் தன் பங்கிற்குச் சுற்றுச்சூழல் சீர்குலைவுகளையும் தருகின்றன.. அந்தச் சீர்குலைவுகளைச் சரிசெய்து கொண்டே புதிய மாற்றங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொள்ளும் போது தான் வாழ்க்கை நவீனமாகிறது. நாடு நல்ல நாடாகிறது. இதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர்

கேடு அறியாக் கெட்ட இடத்தும் வளம்குன்றா

நாடு என்ப நாட்டின் தலை என்ற குறளில் கேடு வராமலும், அப்படியே வந்தால் அதைச் சரிசெய்து வளங்கள் குன்றாமலும் காத்துக் கொள்ளும் நாடே சிறந்த நாடு என்கிறார். சுற்றுசூழல் மாசுபாடுகளால் வளம் குன்றி கிடக்கும் பூமியை நல்ல பூமியாக சரிசெய்து கொள்வதற்கு -  

  • நகர விஸ்தரிப்பு பணிகளுக்காக அரசாங்கம் மரங்களை வெட்டி வீழ்த்துவதற்குப் பதிலாக மேலை நாடுகளில் செய்வதைப் போல மரங்களை வேரோடு பிடுங்கி வேறு தகுந்த இடங்களில் நடலாம். வெட்டப்படும் மரங்களுக்கு நிகராக புதிய மரக்கன்றுகளை வழங்கி சமூக நல நிறுவனங்கள் மூலம் அதைப் பராமரித்து வர ஏற்பாடு செய்யலாம். சாலைகளின் ஓரத்தில் மரக்கன்றுகளை வளர்ப்பதோடுவீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்என்ற கோசத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து வீடுகளில் மரங்கள் வளர்க்க ஊக்குவிக்கலாம்.
  • மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் ஆகியவைகளுக்கான தனித்தனி தொட்டிகளை வீதிகளில் வைப்பதோடு அவைகளின் மறு சுழற்சியைக் கட்டாயமாக்கலாம். செயற்கை உரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நெகிழிப் பைகள் போன்றவைகளின் அதிகப் பயன்பாட்டை கூடுதல் வரிவிதிப்பு, குறைந்த பட்ச தண்டனை, அபராதங்கள், வாடிக்கையாளர்களிடம் அதற்கென தனிக் கட்டணம் வசூலிப்பது ஆகியவைகளின் மூலம் தடுக்கலாம். பேப்பர் பைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முகமாகப் பேப்பர் பைகள் தயாரிப்பை குடிசைத் தொழிலாக அறிவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். இதனால் பயன்படுத்தப்பட்ட காகிதங்கள் மறுசுழற்சி பெறும்.
  • வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பிரத்யேக தொழில்நுட்பங்கள் மூலம் மறுசுழற்சி செய்து தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தலாம். தங்கள் தொழிற்சாலைக் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கும், மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தி அதற்கானச் செயல்முறைகளை முறையாகப் பின்பற்றும் நிறுவனங்களுக்கும் சில சலுகைகள் வழங்கி உற்சாகப்படுத்தலாம். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கடுமையாக்குவதன் மூலம் வீணாகும் மழைநீரைச் சேகரித்து நிலத்தடி நீரை அதிகரிக்கலாம்.
  • வாகனங்களில் மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகளை பொருத்துதல், ஒலி அளவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய சட்டங்களைக் கடுமையாக்குவதுடன்  மெட்ரோ இரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வாகனப் புகையினால் ஏற்படும் மாசுகளையும், தீமைகளையும் கட்டுப்படுத்தலாம்.
  • பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழலைப் பாடமாக்குவதன் மூலம் இளைய சமுதாயத்திடம் சுற்றுசூழல் விழிப்புணர்வை உருவாக்கலாம். அரசாங்க விவசாயப் பண்ணைகளின் மூலம் குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்குவதோடு, அரசு விழாக்களில் இலவச மரக்கன்றுகளைத் தரலாம்,

இப்படி சட்டம் மற்றும் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சியில் அரசாங்கத்தோடு சமூக நல அமைப்புகளும் பங்கு கொள்ளலாம். தனிநபராய் நாமும் நம்முடைய பங்களிப்பை -

  • அதிக வெப்பம் தரக்கூடிய குண்டு பல்ப்பிற்கு பதிலாக புளோரசெண்ட் விளக்குகளைப் பயன்படுத்துதல், தேவைக்கதிகமாக மின் சாதனப் பொருட்கள், சமையல் வாயு, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்தல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், பயன்படுத்திய நீரை அருகில் இருக்கும் மரம், செடிகளுக்குப் பயன்படுத்துதல், கழிவுநீரைப் பொதுக் கழிவுநீர் பாதைகளில், அருகில் இருக்கும் நீர்நிலைகளில் சேர்க்காமலிருத்தல், மக்காத குப்பைகளைத் தனியே சேகரித்து வைத்தல், புகையிலைப் பயன்பாடுகளைக் குறைத்தல், கட்டிடக் கழிவுகளை மறு பயனீட்டுக்கு உள்ளாக்குதல், பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப்பைகள் பயன்பாட்டைக் குறைத்தல், வீட்டு விசேசங்களின் போது மரக்கன்றுகள் தருதல் ஆகியவைகளின் மூலம் செய்யலாம்.

பிள்ளையவும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதைப் போல சுற்றுச்சூழலை மாசடையச் செய்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் நாமே செய்து விட்டு அதன் அபாயங்கள் பற்றி அலறிக் கொண்டிருப்பதால் ஒருபயனும் இல்லை.  ”பெரும் பயணத்திற்கான ஆரம்பம் எடுத்து வைக்கும் முதல் அடியில் இருந்து தான் துவங்குகிறதுஎன்பதற்கேற்ப சுற்றுச்சூழலைக் காக்கும் பெரும் பயணத்தில் முதல் அடியை அரசாங்கத்தோடு சேர்ந்து நாம் ஒவ்வொரு வரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி எடுத்து வைக்கும் போது தான் இயற்கையை எதிர்கொண்டு வாழும் இன்றைய நிலை மறைந்து இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை நமக்கு வாய்க்கும்.


படம்: இணையம்

வலைப்பதிவர் திருவிழா- 2015 புதுக்கோட்டை, தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டியின்  பிரிவு (4) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. “கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?” எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்மு. கோபி சரபோஜி