
தினம் ஒரு தினம் என்பது மாறி தினம் ஒரு கொண்டாட்ட தினமாய் மாறி விட்டது. மேம்போக்காகப் பார்த்தால் இது சந்தோசமான மாற்றமாகத் தெரியலாம். கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் இந்த மாற்றம் நம் அறியாமையின், பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடு என்பதை உணர முடியும். தினங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பல விசயங்களில் முதல் சில இடங்களுக்குள் சுற்றுச்சூழலும் இருக்கிறது. நம்முடைய வாசமும், சுவாசமுமாய் இருக்க உதவும் பூமியை, அதன் அமைப்பை சர்வசாதாரணமாக நாம் இன்று சிதைத்து எறிந்து கொண்டிருக்கிறோம், தொடர்கதையாய் நீண்டு கொண்டிருக்கும் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதற்காகவே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் வருடம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வப்போது உலக நாடுகள் ஒன்று கூடி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அறிவித்து வருகின்றன.
இயற்கை கொடுத்திருக்கும் மிகப்பெரிய கொடையான இந்த பூமியை தெரிந்தும், தெரியாமலும் செயற்கையாய் சிதைத்து இயற்கைச் சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் நம் வாழ்வியலிலும், மற்ற உயிரினங்களின் வாழ்வியல் முறைகளிலும் மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கியபடியே இருக்கிறோம்.