Saturday, 4 June 2016

புலம்பல்களை புறந்தள்ளுங்கள்

எனக்கு மட்டும் அந்த ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்நேரம் என்னவெல்லாம் செய்திருப்பேன் தெரியுமா? யாருக்கெல்லாமோ வாய்ப்பு கிடைக்குது. எனக்கு ஒன்னும் அமையவே மாட்டேங்குது……..என புலம்பிக் கொண்டே வருடங்களை நாட்களால் கழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்க்கையும் புலம்பல்களாகத் தான் இருக்கும். சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி வர வேண்டுமானால் முதலில் இந்த வெற்று புலம்பல்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.

வெற்றி பெறுவதற்கும், உங்களை மற்றவர்கள் முன் அடையாளப்படுத்திக் கொள்வதற்குமான சூழலும், வாய்ப்புகளும் தானாக அமையாது. சிலருக்கு அப்படியான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான வாய்ப்புகளும் அதற்கான சூழலும் சம்பந்தப்பட்டவர்களால் அமைத்துக் கொள்ளப்படுகின்றன என்பதே உண்மை. இந்த உண்மையை, எதார்த்தத்தை உணராமல் உட்கார்ந்திருப்பீர்களேயானால் காலம் உங்களின் கனவுகளை பகல் கனவாக்கி விட்டு போய்விடும்.

குருசேத்திரயுத்தகளத்தில் பீஷ்மரும், துரோணரும் அடுத்தடுத்து பாண்டவர்களால் வீழ்த்தப்பட்டனர். அவர்களையடுத்து கர்ணனை சேனாதிபதியாக்கிய துரியோதனன், ”கர்ணா! எனக்காக போரிடும் உனக்கு எல்லாம் தர நான் கடமை பட்டவன். என்ன வேண்டும் கேள்” என்றான்.

தனக்கும் ஒருநாள் அரச குலத்தில் பிறந்தவனை தேரோட்ட வைப்பேன் என சபதம் பூண்டிருந்த கர்ணன் இந்த சந்தர்பத்தை விட்டால் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என நினைத்து அந்த சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். உடனே துரியோதனனிடம் தனக்கு பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன் தேரோட்ட வேண்டும் எனக் கேட்டான். அதற்கு சல்லியன் மறுத்து பேசுவது ஒருபுறமிருக்க அந்த சமயத்தில் கர்ணனின் உதவி தேவை என்பதால் துரியோதனனே சல்லியனிடம் சமாதானம் பேசி தேரோட்ட அனுப்பி வைத்தான். இது சந்தர்ப்பவாதமில்லையா? இப்படி செய்தது முறையா? என்றெல்லாம் மண்டையை போட்டு உடைத்துக் கொள்ளாதீர்கள். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று. வாய்ப்பு இருக்கு என்றதும் அதை சிக்கென பிடித்துக் கொண்ட கர்ணனின் செயல் தான் இங்கு கவனிக்கப் படவேண்டியது. அந்த வாய்ப்பை தவறவிட்டிருந்தால் கர்ணனுக்கு வேறு சந்தர்ப்பம் வாய்த்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். கர்ணனைப் போலவே தனக்கு கிடைத்த வாய்ப்பை சிக்கென பிடித்துக் கொண்டவர் லூயி பாஸ்டர்!

வெறிநாய்கடி நோய்க்கு மருந்து கண்டுபிடித்து அதை முயலுக்கு கொடுத்து வெற்றி கண்ட லூயி பாஸ்டர் அதை மனிதர்களுக்கு எப்படி கொடுத்து பார்த்து சோதிப்பது என்று யோசனை செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் ஜோசப் மெய்ஸ்டர் என்ற ஒன்பது வயது சிறுவனுக்கு வெறிநாய் கடித்து அவன் சாகும் நிலையில் இருந்தான். இதைக் கேள்விபட்ட லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த மருந்தை அந்த சிறுவனுக்கு கொடுத்து சோதித்து பார்க்க அனுமதி கேட்டார். அந்த சிறுவனுக்கு ஏதாவது நிகழ்ந்தால் தனக்கு மரண தண்டனை தான் கிடைக்கும் என்பதை அறிந்திருந்த போதும் தான் கண்டுபிடித்த மருந்தை மனிதனுக்கு கொடுத்து சோதித்து பார்ப்பதற்கு இதை விட ஒரு நல்ல வாய்ப்பு வராது என நினைத்தார். வாழ்வா? சாவா? என்ற நிலையிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை லூயி பாஸ்டர் தவற விட விரும்பவில்லை. அந்த வாய்ப்பு தான் அவருக்கும், அவருடைய கண்டுபிடிப்புக்கும் உலகப்புகழைப் பெற்றுத் தந்தது.

சொந்த அனுபவம் ஒன்று சொல்கிறேன். அதிக சிக்கல் நிறைந்த இடத்தில் செய்ய வேண்டிய வேலை என்பதால் கூடுதல் வேலையாட்கள் தேவைப்படுவார்கள், வேலைக்குத் தேவையான மூலப் பொருட்கள் அதிகம் செலவாகும், வளர்ந்து வரும் நிறுவனம் என்பதால் பணப்பட்டுவாடா உடனே இருக்காது என அடுக்கப்பட்ட காரணங்களால் அந்த நிறுவனம் கொடுத்த வேலைக்கான ஒப்பந்தத்தை எடுக்காமல் சில பெரிய நிறுவனங்கள் ஒதுங்கி விட்டன. அந்த சமயத்தில் நான் பணிபுரியும் நிறுவனத்துக்கு அந்த வேலையை செய்ய முடியுமா? என கேட்டு கடிதம் வந்தது. அது சம்பந்தமாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் மற்ற நிறுவனங்கள் அந்த வேலையை எடுக்காததற்கு சொல்லப்பட்ட காரணங்களை போலவே பல காரணங்களை சம்பந்தப்பட்ட வேலை சார்ந்த எங்கள் நிறுவன நிர்வாகிகளும் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்ட எங்கள் பொதுமேலாளர் அந்த வேலையை நாம் செய்யலாம் என முடிவு செய்தார். வேலையை ஆரம்பித்த போது கலந்தாய்வில் நிர்வாகிகள் சுட்டிக் காட்டியிருந்ததை விடவும் அதிகமான சிக்கல்கள் இருந்த போதும், எதிர்பார்த்த அளவு இலாபம் இல்லாத போதும் அந்த வேலையை செய்து முடித்தோம். அதன்பின் சில மாதங்கள் கழித்து நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுமேலாளர் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லி இனிமேல் அங்கிருந்து தரப்படும் எல்லா வேலைகளிலும் நமக்கு தான் முன்னுரிமை. நாம் வேண்டாம் என சொன்னால் மட்டுமே அடுத்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரப்படும் என அவர்களின் சேர்மன் மீட்டிங்கில் முடிவு செய்திருக்கிறார்கள். அன்று நாம் அந்த வேலையை இலாபம் குறைவு என சொல்லி செய்து தந்திருக்காவிட்டால் நமக்கு இன்று இந்த முன்னுரிமை கிடைத்திருக்காது என்றார். இன்று நான் பணிபுரியும் நிறுவனத்தின் இலட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள வேலைகள் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டவைகள் தான்! தங்களுக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று இன்றும் மற்ற நிறுவனங்களின் மேலாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் எப்பொழுதும் விழிப்போடு இருங்கள்.

அப்போதைக்கு என்ன கிடைக்கும் என்று மட்டும் யோசிக்காமல் தொலைநோக்கு சிந்தனையோடு எதையும் அணுகுங்கள். அப்போது தான் உங்களுக்கான வாய்ப்புகளை பெறவும், உருவாக்கிக் கொள்ளவும் முடியும். வெற்றியை தொடர்ந்து தக்க வைப்பதற்கு இது மிகவும் அவசியம்.

நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால் எனக்கு அப்படியான ஒரு சூழலும் வரவில்லையே என்கிறீர்களா? கவலையை விடுங்கள். அதற்காக காத்திருங்கள். அந்த காத்திருக்கும் நேரத்தில் உங்களை வளப்படுத்திக் கொண்டே இருங்கள். உங்களின் இலக்கு சார்ந்த பயணத்திற்கு தேவையான அனுபவங்களைப் பெறுங்கள். அந்த அனுபவ சேகரிப்பு என்பது நீங்கள் எதில் வெற்றி காண, சாதிக்க விரும்புகிறீர்களோ அதில் இருக்க வேண்டியது முக்கியம். அப்பொழுது தான் அதை உங்களின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால் தான் வெற்றியாளர்களாக அடையாளப்படுத்தப் படுபவர்களின் ஆரம்ப காலம் அவர்கள் ஜெயித்த துறையிலேயே தொடங்கி இருக்கும்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு வரையிலும் ஏ.ஆர். ரகுமான் இசை சார்ந்த துறையான விளம்பர துறையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஓபராய் தன்னுடைய ஹோட்டல் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்புவதற்கு முன் சிம்லாவின் சிசிலி ஹோட்டலில் தன் பணியை செய்து கொண்டிருந்தார். நீங்களும் ஏ.ஆர். ரகுமானைப் போல. ஓபராயைப் போல அனுபவ அறிவை சேகரித்த படியே இருங்கள்.  பரந்து விரிந்த ஏரியில் காத்திருக்கும் கொக்கைப் போல பரந்து விரிந்த உலக வெளியில் நீங்களும் காத்திருங்கள். மேற்சொன்ன மூன்றின் வழி உங்களுக்கான வாய்ப்புகள் கடந்துபோகும் போது தவறாமல் கவ்விப்பிடித்து அனுபவ அறிவின் வழி முன்னேறுங்கள். அது உங்களின் வெற்றி வாசலை மட்டுமல்ல அதிலிருந்தே புதியதொரு வாய்ப்பிற்கான வாசலையும் திறக்க ஆரம்பிக்கும்.