Monday, 20 June 2016

வாசல்கள் திறந்திருக்கட்டும்!

உங்களுடைய பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு காண்பது ஒரு வகை எனில் உங்களைச் சுற்றியிருப்பவர்கள், உங்களைச் சார்ந்தவர்களிடமிருந்து தீர்வுகளைப் பெறுவது இன்னொரு வகை. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்? என்னை விட இவன் அறிவாளியா? என் படிப்பென்ன? இவன் படிப்பென்ன? இவனுக்கெல்லாம் இதைப் பத்தி சொல்ல என்ன அறுகதை இருக்கு? என்பன போன்ற அகங்கார கேள்விகளால் அத்தகைய தீர்வுகளை பல நேரங்களில் பெறாமலே போய்விடுகின்றோம். ஆனால் வெற்றியாளர்களும், அதற்கான முயற்சிகளில் இருப்பவர்களும் ஒரு போதும் அப்படி செய்வதில்லை. தன்னுடைய பிரச்சனைக்கான தீர்வுகளை மட்டுமே அவர்கள் பார்க்கின்றனர். அது யாரிடமிருந்து வருகிறது? யார் சொன்னார்கள்? என்றெல்லாம் பார்ப்பதில்லை.

இன்றைக்கு உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமான டயோட்டாவின் தொழிற்சாலை இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானங்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. போர் முடிந்தவுடன் கார் உற்பத்தியை தொடங்க உதிரிபாகங்கள் வாங்க அதிக முதலீடு செய்ய நிறுவனத்தால் முடியவில்லை. இதனால் கார் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று விழிபிதுங்கி நின்ற நிர்வாகம் ஊழியர்களிடமே அதற்கான யோசனையைக் கேட்டது.

உதிரிபாகங்களை நமக்கு சப்ளை செய்பவர்கள் தினமும் காலையில் தான் சப்ளை செய்கின்றனர். அதனால் அவைகளை முன் கூட்டியே வாங்கி இருப்பில் வைக்கத் தேவையில்லை. உற்பத்தி தொடங்கிய மூன்றாம் நாளில் கார் விற்பனைக்கு சென்று விடும். பணமும் உடனே கிடைத்துவிடும். அதனால் உதிரி பாகங்களை அதிகமாக கொள்முதல் செய்வதற்கு பதில் அன்றைய உற்பத்திக்கு தேவையானவைகளை மட்டும் வாங்கி கையிருப்பில் வைத்துக் கொண்டால் போதும். இன்று உலகம் முழுக்க உள்ள தொழில் நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும் JUST IN TIME என்ற இந்த வழிமுறையை டயோட்டா நிர்வாகத்திற்கு சொன்னது அங்கு வாசலில் பணிபுரிந்த வாட்ச்மேன்!

இன்னொரு சம்பவம் சொல்கிறேன். சில வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த கம்பெனியின் கிளீனிங் (HOUSE KEEPING) பிரிவில் ஒரு பிரச்சனை. எங்கள் கம்பெனி அரசு அலுவலகங்களில் துப்புரவு செய்யும் பணியை குத்தகைக்கு எடுத்திருந்தது. எட்டுமணிக்கு தொடங்கும் அலுவலகத்தில் துப்புரவு பணியை ஆறரை மணிக்கே தொடங்கிய போதும் எட்டு மணிக்குள் ஊழியர்களால் அங்கு வேலையை முழுமையாக செய்து முடிக்க முடியவில்லை. இதனால் கம்பெனிக்கு தொடர்ந்து கம்ப்ளைண்ட் வந்து கொண்டே இருந்தது. காரணங்கள் தேடியதில் ஒவ்வொரு டேபிளையும் துடைக்கின்ற ஒரு ஊழியர் அப்படி துடைத்தபின் அந்த துணியை அலசுவதற்காக வாஷ்பேசனுக்கு சென்று வருவதில் நிறைய நேரம் செலவாகிறது என்பது தெரிய வந்தது. பலவித வழிமுறைகள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், வேகமாக செயல்படுதல் என பலவித முயற்சிகளும் கையாளப்பட்ட போதும் அவைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. நிலைமையை சமாளிக்கவும், குத்தகையைத் தக்க வைக்கவும் கூடுதல் ஊழியர்களை அங்கு அனுப்ப வேண்டிய நிலை உருவானது. ஆனால் இதற்குக் கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும் என்பதில் உறுதியாக இருந்த எங்கள் மேலாளர்  அந்த மாதம் நடந்த ஊழியர் கூட்டத்தில் நிலைமையை சொல்லி கூடுதல் ஊழியர்களை அங்கு அனுப்பாமல் இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வழி இருந்தால் சொல்லலாம் என்ற அறிவிப்பை கொடுத்தார். 

கூட்டத்தில் இருந்து எழுந்த ஒரு ஊழியர், “சார்......நாம் வழக்கமாக டேபிள்களை துடைக்கப் பயன்படுத்தும் துணியை நான்காக மடித்து பயன்படுத்த முடியும். ஆனால் நம் ஊழியர்கள் அதை இரண்டாக மடித்துத் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் உள்ளும், புறமுமாக அதை நான்கு தடவை அதாவது நான்கு டேபிள்களை துடைக்க மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது. அதையே நான்காக மடித்துப் பயன்படுத்தும் போது உள்ளும், புறமுமாக எட்டு தடவை அதாவது எட்டு டேபிள்களை துடைக்கப் பயன்படுத்த முடியும். அதனால் அந்தத் துணியை ஒரு ஊழியர் அலசுவதற்காகச் செல்லும் நேரம் இரண்டு தடவையிலிருந்து ஒரு தடவையாக குறையும். இதன் காரணமாக நிறைய நேரவிரயம் குறைவதால் குறிப்பிட்ட ஊழியர்களைக் கொண்டே அந்த வேலையைச் செய்து முடிக்க முடியுமென்று சொன்னார். எங்கள் மேலாளர் மட்டுமல்ல கூடியிருந்த எல்லா ஊழியர்களிடையையும் ஒரே நாளில் அந்த ஊழியர் ஹீரோவாகிப் போனார். உடனடியாக இந்த யோசனையை நடைமுறைப்படுத்துங்கள் என மேலாளர் உத்தரவிட்டு அந்த ஊழியரை அங்கேயே கெளரவப்படுத்தினார். இந்த யோசனையை சொன்ன ஊழியர் பள்ளிப் படிப்பைக்கூட முழுதாய் முடிக்காதவர்!

மாருதி கார் நிறுவனத்தில் இதேபோல் ஒரு பிரச்சனை. உற்பத்தி செய்து கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கார்களை அங்கிருந்து வெளியே கொண்டுவரும்போது அடுக்கின் உயரத்தை விட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் குறைவாக இருந்தது. கார்களை உள்ளே ஏற்றும் போது வராத பிரச்சனை வெளியே எடுக்கும் போது வந்ததால் அங்கிருந்த அனைவரும் என்ன செய்வது என தடுமாறினர். அவரவர் தகுதி நிலைக்கேற்ப காரின் மேல்புறம் விழும் கீறல்களை பெயிண்ட் அடித்து மறைத்து விடலாம். வாயிலின் மேற்பகுதியை கொஞ்சம் இடித்து விடலாம் என யோசனை சொல்லிக் கொண்டிருக்க இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த கிடங்கின் காவலாளி அடுக்கில் உள்ள எல்லா கார்களின் காற்றையும் இறக்கி விடுங்கள். பிரச்சனை தீர்ந்து விடும் என்றார். இதைக்கேட்டு அங்கிருந்த மெத்தப்படித்தவர்கள் அசந்து போயினர். காவலாளியின் யோசனைப்படி கார்கள் கிடங்கிலிருந்து வெளியேற்றப்பட்டன.

பல வண்ண வடிவமைப்புகளில் வானைத்தொடும் கட்டிடங்களில் ஓடிக் கொண்டிருக்கும் மின் தூக்கிகள், கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான இயற்கை நறுமணப் பொருட்களை கண்ணாடி குப்பிக்குள் தேங்காய் எண்ணெயுடன் வைத்து விற்பனைக்கு வந்திருக்கும் கூந்தல் தைலங்கள் என எல்லாமே அந்தந்த நிறுவனங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களால் சொல்லப்பட்ட தீர்வுகளின் வழி உருவானவைகள் தான். அதனால் தான் இன்றும் வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் கடைநிலை ஊழியர் தொடங்கி உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் வரை FEED BACK என்ற பெயரில் மாதம் தோறும் ஆலோசனைகளைப் பெற்று தகுதியானவகளைச் செயல்படுத்தி வருகின்றன.

கில்லெட்டு, சோய்ச்சிரோ போல உங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நீங்களே தேடுங்கள். முடியவில்லையா? முடங்கிப் போகாதீர்கள். டயோட்டா நிர்வாகம் போல, மேலாளாரைப் போல தீர்வுகளை நாடிச் செல்லுங்கள். மாருதி நிர்வாகம் போல் மற்றவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருங்கள். உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் தானே உங்களை நோக்கி வர ஆரம்பிக்கும். கேட்க மறுப்பதால் பல நல்ல விசயங்களை இழந்து விடுகிறீர்கள். வாய்ப்புகளை தவற விட்டு விடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு எப்பொழுதும், தீர்வுகளில் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள் என்று கூறுகிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். செயல்பாட்டின் போது பிரச்சனைகள், தடைகள் வரும்போது அது யாரால் வந்தது? அதற்கு யார் காரணம்? என்பனவற்றையெல்லாம் கண்டறிந்து சம்பந்தபட்டவர்களைத் தண்டிக்கும் மனப்போக்கு கொள்ளாதீர்கள். அத்தகைய மனநிலை உங்களின் நோக்கத்தைச் சிதற வைத்துவிடும். மாறாக அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து கடந்து வருவதில் கவனம் செலுத்துங்கள். வெற்றி வசமாகும்.

நன்றி : பாக்யா வார இதழ்