பட்டை தீட்டியும், மெருகேற்றியும் மதிப்புறு ஆபரணங்களாக மாற்றுவதற்கான திறமைகளைத் தேடி அலையாதே. அது உனக்குள்ளேயே இருக்கிறது. எப்பொழுதும் அதைக் கண்டறிவதற்கான விழிப்போடு இரு.
ஒவ்வொருவருக்குள்ளும் பல கதைகள் இருக்கிறது. யார் கதைகளுக்குப் பக்கங்கள் குறைவாக இருக்கிற்தோ அவருடைய வாழ்க்கையை ”வரம்” என சொல்லிக் கொண்டிருக்கிறோம். வரமின்றி எவர் வாழ்வுமில்லை!
பேசுவதற்குத் தயாராவதை விடக் கேட்பதற்கு தயாராகு.
முன்னோக்கி நகர்வதை விட எதை நோக்கி நகர்கிறாய்? என்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் உன் முன் இருக்கும் பிரச்சனைகளைக் கடந்து போவதற்கான வழிகளைக் கண்டறிய முடியும்.
மீன்களைக் குறிவைத்து மட்டுமே வலைகள் வீசப்படுகின்றன. அதில் தக்கைகளும், தனக்குப் பயன்படாதவைகளும் கிடைக்கின்றன என்பதற்காக மறுமுறை மீனவன் வலைகளை வீசாமல் இருப்பதில்லை.
உன்னாலான தேவைகள் குறையும் போது உன்னோடு பயணித்தவர்கள், உடனிருப்பவர்கள் அந்நியப்படும் போது அதை எதிர் கொள்வதற்கான தைரியம் அதன் பொருட்டு உனக்குள் எழும் மனப் போராட்டங்களை முறியடிப்பதில் தான் தொடங்குகிறது.
உன் வண்டியின் அச்சாணியைக் கழற்றி வைத்துக் கொண்டு நிச்சயம் உன்னால் முடியும் என்று நம்பிக்கை தர முயல்பவர்களிடமிருந்து எப்பொழுதும் விலகியே இரு.
சலனமற்று நகரும் நதியின் மீது எப்பொழுதும் கல்லெறிந்து கொண்டே இருப்பது மனித சுபாவம். அதற்காக நதிகள் சலசலத்து எவரையும் மிரள வைப்பதில்லை.
சுமையாய் இல்லை என்பதற்காக எல்லாவற்றையும் தூக்கித் திரிய வேண்டியதில்லை.
எல்லா நேரங்களிலும் உன் புரிதலைப் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் புரிதலை வார்த்தைகளை விடவும் மெளனம் இயல்பாய் உணர்த்தி விடும்.