Saturday 15 July 2017

நகர்ந்து கொண்டே இருங்கள்

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் ருசி இருக்கும் என்பது சினிமாவில் எழுதப்பட்ட வாழ்வியலைச் சொல்லும் பாடலின் வரி. வாழ்வின் ருசி மட்டுமல்ல வாழ்வும் கூட தேடல்களால் தான் சுவராசியமடைகிறது. தேடல்களோடு இருப்பவர்கள், ”இது என்ன வாழ்க்கை? செக்குமாட்டுத்தனமாய் இருக்கிறதுஎன்றெல்லாம் புலம்புவதில்லை. மாறாக, தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையைத் தேடலின் வழியாக சுவராசியப்படுத்திக் கொள்கிறார்கள். எப்பொழுது தேடலை நிறுத்துகிறீர்களோ அப்பொழுது உங்கள் வாழ்க்கை உங்களிடமிருந்து பறி போய் விடுகிறது.

கேள்விகளுக்கு விடை தேடும் மனம் இருந்தால் மட்டுமே தேடல்களுக்கானத் தேவைகள் இருக்கும். அதற்காகவேனும் எப்பொழுதும் எதையாவது உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொண்டே இருங்கள். ஆம். ”உங்களுக்கு நீங்களேஎன்பது இங்கு முக்கியம். இதில் மற்றவர்களை நுழைய அனுமதித்தால் விமர்சனம், அறிவுரை என ஏதோ ஒன்றின் பெயரில் அவர்கள் உங்களின் தேடல் முனைகளை முறித்து விடக் கூடும். எனவே இந்த விசயத்தில் உங்களுக்கு நீங்களே சுய தூண்டலைச் செய்து கொள்ளுங்கள்.

இன்று வாழ்வியலின் அடையாளங்களுள் ஒன்றாக இருக்கக்கூடிய கிரிடிட் கார்டை (CREDIT CARD) இப்படியான ஒரு தூண்டல் தான் கண்டறியச் செய்தது. அமெரிக்க அதிபராக இருந்த கென்னடியின் நிர்வாகத்தில் அமைச்சராகவும், உலக வங்கியின் தலைவராகவும் இருந்தவர் ராபர்ட் மக்னமாரா. ஒரு நாள் உணவகம் ஒன்றிற்குச் சாப்பிடச் சென்றார். பர்சை வீட்டில் இருந்து எடுத்து வர மறந்து போன விசயம் சாப்பிட்டு முடித்த பிறகே தெரிந்தது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய விற்பனர் என்பதற்காகச் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் வர முடியுமா? எப்படியோ பணத்தைச் செலுத்து விட்டு வீடு திரும்பியவர் காசும் இல்லாமல், கடனும் வாங்காமல் பொருள்களை வாங்க வழி ஏதும் உண்டா? என தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். அந்தக் கேள்வித் தூண்டல் இன்று அனைவரின் பணப்பையிலும் உறங்கும் கிரிடிட்கார்டாக உருமாறியதுஇப்படியான அகத் தூண்டல்கள் புதிய ஒன்றை உருவாக்க மட்டுமே நிகழ வேண்டும் என்பதில்லை. அடுத்த கட்டத்திற்கு உங்களை நகர்த்திச் சென்றாலே போதும்

சனியன்………விட்டா போதும் என தான் எதிர்கொள்ளும் விசயங்கள், பிரச்சனைகள், சங்கடங்கள் சார்ந்து உருவாக்கிக் கொள்ளும் தப்பித்தல் மனநிலையும், இப்போது செய்து கொண்டிருக்கின்ற வேலை நிலைத்தாலே போதும். வரும் வருவாய் சரியாக வந்து கொண்டிருந்தாலே போதும் என்ற பாதுகாப்பு உணர்வுடன் கூடிய திருப்தியும் ஏற்படும் போது தேடல்கள் தானாகவே நின்று போய் விடுகின்றன. உண்மையில் இந்த இடத்தில் தான் ஆபத்தும் ஆரம்பமாகிறது என்பதைப் பலரும் உணர்வதில்லை, இன்று நிறுவனங்களில் கொத்துக் கொத்தாக ஆட்குறைப்பு என்ற பெயரில் ஊழியர்களை வெளியேற்றும் போது இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களின் வாழ்க்கை தான் முதல் பலி ஆடுகளாகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இவர்கள் அனைவருமே ஒரு திறன் (SINGLE SKILLED) பெற்றவர்களாக மட்டுமே இருப்பது தெரியும். எந்த ஒரு நிறுவனமும் தன்னிடம் இருக்கும் ஊழியர்கள் பல் திறன் (MULTI SKILLED) கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றே நினைக்கும். அந்த நினைப்பிற்கு ஏற்ற நிலையில் இல்லாதவர்களை வாய்ப்பு வரும் போது அவைகள் தூக்கி எறிந்து விடுகின்றன. தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் கூட இந்த நிலை தான் இருக்கிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எண்ணெய், சோப்பு ஆகியவைகளைத் தயாரித்து விற்று வந்த தன் நிறுவனம் களத்தில் நிற்கும் போட்டி நிறுவனங்களைச் சமாளித்து ஜெயிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதற்கு இப்போது இருக்கு  நிலை சரியில்லை. என்ன செய்யலாம்என யோசித்தார் அசிம் பிரேம்ஜி. இந்தத் தேடல் அவருடைய நிறுவனத்தின் அடையாளத்தையே மாற்றியமைத்தது. அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியதன் அவசியம் கருதியவர் தன் நிறுவனத்தை அப்போது மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளோடும், வளர்ச்சிக்கான அம்சங்களோடும் இருந்த கணினித்துறைக்குள் காலடி எடுத்து வைக்கச் செய்தார். இன்று இத்துறையில் அசைக்க முடியாத நிலையில் இருக்கும் விப்ரோவின் ஆரம்பம் இப்படியான ஒரு தேடலிலேயே ஆரம்பமானது. இருக்கும் நிலையிலேயே இருப்பதற்குப் பெயர் வாழ்க்கையல்ல. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் தான் அதன் சுவராசியமே அடங்கி இருக்கிறது. அப்படியான ஒரு சுவராசியம் வேண்டுமானால் உங்களை சூழலுக்கேற்ப, சந்தர்ப்பங்களுக்கேற்ப திறன் மேம்பாடுகளின் வழி அப்டேட் (UPDATE )செய்து கொண்டே இருங்கள்.

உங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளப் பெரிதாக மெனக்கெட வேண்டிய அவசியங்கள் இல்லை. இன்றைய நிலையில் கற்றுக் கொள்வதற்கான, திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் கைக்கருகில் இருந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ள தயாராய் நாம் இல்லை என்பது தான் வருத்தமான விசயம். அதேபோல, சில நிறுவனங்களில் ஓவர்சீஸ் எனப்படும் பணி வாய்ப்புகள் வரும் போது அங்கு என்னால் செல்ல முடியாது. அந்தச் சூழல் எனக்கு ஒத்து வராது. அங்குள்ள சாப்பாடு என் உடல் நலனுக்குச் சரிபடாது என உப்புச் சப்பில்லாத காரணங்களைக் காட்டி அந்த வாய்ப்பை மறுக்க தன்னாலான எல்லாப் பிரயாத்தனங்களையும் செய்வார்கள். ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் கூடச் சில நேரங்களில் நம்மை மாற்றியமைக்கும் வாய்ப்புகள் ஒழிந்து கிடக்கலாம் என்பதை மறந்து விடக் கூடாது. அப்படிக் கிடைத்த வாய்ப்பு ஹோவர்ட் ஸ்கல்ஸை உலக வெற்றியாளராக்கியது

உயர் ரகக் காஃபி விதைகளை இறக்குமதி செய்து விற்று வந்த ஸ்டார் பக்ஸ் என்ற காஃபிக் கம்பெனியில் விற்பனைப் பிரதியாகச் சேர்ந்த ஹோவர்ட் தன் வேலை நிமித்தம் பல நாடுகளுக்கும் செல்ல வேண்டி இருந்தது, நம்மைப் போல காரணங்களைச் சொல்லிக் கொண்டு அத்தகைய வாய்ப்புகளைத் தட்டிக் கழிக்காமல் உடனே கிளம்பி விடுவார். செல்லும் நாடுகளில் எல்லாம் தான் வேலை செய்யும் தொழில் சார்ந்த விசயங்களைத் தேடிக் கொண்டே இருப்பார். புதிய, புதிய தகவல்களைச் சேகரிப்பதில் அதிக அக்கறை காட்டினார். அப்படி ஒரு முறை இத்தாலிக்குச் சென்றிருந்த போது அங்கு காஃபி விதையை அறைத்து காஃபி தயார் செய்து கொடுப்பதைக் கண்டார். இது நல்ல ஐடியாவா இருக்கே என நினைத்தவர் அமெரிக்காவில் இதை நாம் செய்யலாம் என தன் உயர் அதிகாரிகளிடம் சொன்னார். அவர்கள் அதெல்லாம் ஆகாத விசயம் என மறுத்து விட்டனர்.

தனக்கான வெற்றி வாய்ப்பு இதில் தான் ஆரம்பிக்கப் போகிறது என நினைத்த ஹோவர்ட் தன் வேலையை ராஜினாமா செய்து விடடு நிறுவனத்துக்குச் சொன்ன யோசனையைத் தானே செயல்படுத்தினார். விளைவு என்ன ஆச்சு தெரியுமா? அடுத்த இரண்டு ஆண்டுகளில் தான் முன்பு வேலை செய்த ஸ்டார் பாக்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்அதன் பெயரிலேயே உலகம் எங்கும் கிளைகளைத் திறந்தார். யாருக்குத் தெரியும்? உங்களுக்கும் கூட எங்காவது இப்படியான வாய்ப்புகள் ஒளிந்திருக்கலாம். அதனால் உங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் அதே நேரம் தொழில் சார்ந்து, அல்லது உங்களின் விருப்பம் சார்ந்து என எப்பொழுதும் எதையாவது தேடிக் கண்டடையும் மனநிலையிலேயே இருங்கள்.

நன்றி : அச்சாரம் மாத இதழ்

2 comments:

  1. உற்சாகம் தரும் உதாரணங்கள்... தொடருங்கள் தோழர்...

    ReplyDelete
  2. தன்னம்பிக்கை தரும் பதிவு. நன்றி.

    ReplyDelete