Wednesday, 5 July 2017

தோல்வியிலிருந்து வெற்றி

தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தைமன்னிப்புஎன ஒரு திரைப்படத்தில் விஜயகாந்த் பேசும் வசனம் போல நம்மில் பலருக்கும் பிடிக்காத வார்த்தைதோல்வி”. அப்படியிருக்க எப்படி தோல்வியிலிருந்து வெற்றி பெற முடியும்? நீங்கள் விரும்பாத தோல்வியை உங்களுக்குப் பிடித்ததாக மாற்றிக் கொண்டால் முடியும். அப்படி மாற்றிக் கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமல்ல.

தோல்வியிலிருந்து பாடம் படியுங்கள். தோல்வியை அனுபவமாக மாற்றுங்கள் என்று எங்கும் பேசுவதைக் கேட்கிறோம். எழுதுவதை வாசிக்கிறோம். ஆனால் அதைக் கடைப்பிடிக்கிறோமா? இந்தக் கேள்விக்கு நம்மில் பலரிடமும் தீர்க்கமான பதில் இருப்பதில்லை, தீர்க்கமான பதில்களை வைத்திருப்பவர்கள் தோல்விகளைக் கண்டு துவள்வதில்லை. அதையேத் தன் அடுத்த முயற்சிக்கான ஆரம்பமாக மாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்கின்றனர். அதனால் தோல்வி என்று நீங்கள் நினைக்கும் நிலையை இறுதியாக்கி அங்கேயே முடங்கி விடாமல் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள். உடைந்து போய் விடாமல் அதிலிருந்து ஊட்டத்தைப் பெறுங்கள். அப்படி நகர்ந்தவர்களும், பெற்றவர்களும் மட்டுமே சாதித்திருக்கிறார்கள். வெற்றியாளராக தங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

தோல்விகள் நம்மை முடக்கிப் போட்டு விடுவதற்கு  அல்லது நாம் அதனால் முடங்கிப் போவதற்கு அவைகள் தரும் இழப்புகளில் நாம் செலுத்தும் கவனம் தான் காரணம் என்கின்றனர் உளவியலாளர்கள். எனவே தோல்விகளைச் சந்திக்கும் நேரங்களில் மட்டுமாவது அதன் வழி உருவான இழப்புகளில் கவனம் கொள்ளாதீர்கள் என்று ஆலோசனை சொல்கிறார்கள். எப்படி ஒரு வாகனத்தில் எரிபொருளின் இருப்புக் குறையக் குறைய அதன் செயல்படும் வேகமும் குறைகிறதோ அதுபோல உங்களின் மன உறுதி, நம்பிக்கை குறையக் குறைய இழப்புகளின் மீதான கவனம் அதிகமாகி அதுவே உங்களின் செயல்பாட்டை நிறுத்த ஆரம்பித்து விடும் என்கின்றனர். கேட்க நல்லாத் தான் இருக்கு. நடைமுறைக்குச் சாத்தியமா? எனக் கேட்கலாம். திடமான மன உறுதியும், என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் சாத்தியம்

உலகம் எங்கும் தன்னுடைய கிளையைப் பரப்பி பல நூறு தொழில் முனைவோர்களை உருவாக்கி வரும்நேச்சுரல்ஸ்நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.குமாரவேல் தன்னுடைய வெற்றியை இப்படியான தோல்வியிலிருந்தே அரம்பித்தார். தோல்வி மட்டுமே அடுத்து என்ன என்ற தேடலுக்கான வாசலைத் திறந்து விடுகிறது, தன்னுடைய தயாரிப்பான ராகா சீயக்காய் மூலம் நினைத்த இலக்கை திட்டமிட்ட காலத்திற்கு முந்தியே அடைந்து சாதித்துக் காட்டியதோடு மக்கள் மத்தியில் தன் நிறுவனப் பொருட்களுக்கான சந்தையைக் கையகப்படுத்திக் கோலோச்சி வந்த நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்ட பெரும் நஷ்டம் தன் அடையாளமாய் இருந்த ராகா சீயக்காயை இன்னொரு நிறுவனத்திற்கு விற்கும் நிலைமை அவருக்கு உருவானது. கடன் உள்ளிட்ட பலவித நெருக்கடிகள் இருந்த போதும் அவர் அசரவில்லை. ஓய்ந்து ஒடுங்கி விடவில்லை. அடுத்து என்ன? இதிலிருந்து எப்படி மீள்வது? என யோசித்தார்.

ஒரு தொழில் முனைவோராய் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாப்புகளைத் தேட ஆரம்பித்தார். அவரின் தேடல் பல வாய்ப்புகளை அடையாளம் காட்டியது. அதில் ஒன்றாய் முடித்திருத்தகம் தொழிலைத் தேர்வு செய்தார். இந்தத் தொழிலையா செய்யப் போகிறாய்? எனக் கேட்டவர்களுக்குப் பதில் சொல்வதை விடத் தன்னை நிலைநிறுத்திக் காட்ட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார். எல்லோரையும் போலச் சிந்தித்துச் செயல்படுபவனால் ஒரு நாளும் சிகரங்களை எட்ட முடியாது என்பதை அறிந்திருந்த குமாரவேல் காலம் காலமாக அந்தத் தொழிலில் இருக்கும் சில நடைமுறைகளை மாற்றி நவீன முறைத் தொழிலாக உருவாக்கினார். அறுபது இலட்சம் ரூபாய் கடனில் சென்னையில் நான்கு கிளைகளுடன் அவர் ஆரம்பித்த நிறுவனம் இன்று கோடிகளில் தன்னுடைய கிளைகளை உலகம் முழுக்க விரித்து நிற்கிறது. குமாரவேலின் வெற்றி நமக்குச் சொல்லும் பாடம் தோல்வியிலிருந்தும் வெற்றி பெற முடியும் என்பதே!

பெரிய தோல்விகளோ, இழப்புகளோ ஏற்படும் போது சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒதுங்கி விடாதீர்கள்என்கிறார் சிசரோ. அப்படி ஓய்வெடுக்கும் சமயங்களில்  தோல்விக்கான, உங்களின் முயற்சியைச்  சரியான நிலைக்குக் கொண்டு செலுத்த முடியாமல் போனதற்கானக் காரணங்களை ஆராயுங்கள். மிகப்பெரிய வெற்றிகள் அனைத்தும் தோல்வியிலிருந்தே ஆரம்பித்திருக்கின்றன என்பதால் காரணங்களைச் சொல்லிக் கைவிடுவதைவிட அந்தக் காரணங்களைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளின் வழி முன்னேறுங்கள். ”ஒரு தோல்வி ஏற்பட்டால் அடுத்தடுத்து முயற்சி செய்யாமல் இருப்பது தான் நமது பலவீனமே. இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம் தான் வெற்றிக்கு நிச்சயமானவைஎன்கிறார் எடிசன்.  

தோல்விகள் ஏற்படும் போது அதற்காக வெட்கப்படத் தேவையில்லை. கூனிக் குறுகி உட்கார வேண்டியதில்லை. மாறாக, அது கொடுத்திருக்கும் அனுபவத்திற்காக நன்றி சொல்லுங்கள். அனுபவமே மிகச் சிறந்த அசானாக வாழ்க்கையை வழி நடத்துகிறது. அது தோல்விகளின் வழியே கிடைக்கும் போது இன்னும் ஆக்கப்பூர்வமானதாகி விடுகிறது.

முகநூல், வாட்ஸ் அப், டிவிட்டர் எனச் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியில் நம்மைத் தொலைத்து விட்ட இந்தக் காலத்தில் ஒருவரின் வெற்றியை அவரே எதிர்பார்க்காத வகையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தோல்வியைத் தரையில் போட்டு மிதிப்பதும் சகஜமான விசயமாகி விட்டது. அப்படியான நிலையில் போகிற போக்கில் என்பதைப் போல உங்களின் தோல்விகளுக்காக நீட்டப்படும் உபதேசங்களை உதாசீனப்படுத்துங்கள். இன்னொரு முயற்சியில் இப்போதைய உங்களின் தோல்வியை நீங்கள் வெற்றியாக மாற்றிக் காட்டும் போது இவர்களே மீண்டும் வந்து புகழ் மாலைகளைச் சூட்டுவார்கள். இது மனித இயல்பு

நீராவிப்படகைக் கண்டுபிடித்த ராபர்ட் புல்டன் முதன் முதலில் அதைச் செயல்படுத்திக் காட்ட முயன்ற போது அது உடனே கிளம்ப வில்லை. வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்கள் இதெல்லாம் ஸ்டார் ஆகாது. ஆகாத வேலை இது. நம்முடைய நேரத்தை எல்லாம் இந்த ஆள் வீணாக்கி விட்டான் என்று வசைபாடினார்கள். அப்படி அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே திடீரென ஸ்டார்ட் ஆகி ஓடத் துவங்கியதும் அப்படிப் பேசியவர்களே அவருடைய கண்டுபிடிப்பைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார்கள். இப்படியான நிகழ்வு ராபர்ட் புல்டனுக்கு மட்டுமல்ல எல்லா வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதையிலும் இருக்கிறது. எனவே தோல்விகளையும், அது பற்றி மற்றவர்கள் சொல்லும் உபதேசங்களையும் புறந்தள்ளி வைத்து விட்டு அந்தத் தோல்வியிலிருந்தே உங்களின் வெற்றிக்கான பயணத்தை உற்சாகத்தோடு ஆரம்பியுங்கள்

நன்றி : அச்சாரம் மாத இதழ்

1 comment: