- இந்தியாவின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹானால் அவர் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டது.
- இராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்கிற்குச் சொந்தமான தோட்டமாக இருந்த இந்த இடம் பண்டமாற்று முறை மூலம் வேறு இடங்கள் கொடுத்துப் பெறப்பட்டது.
- பாரசீக, முகலாயக் கட்டடக் கலை மரபுகளை உள்ளடக்கி தைமூர் சமாதி, ஹிமாயூன் சமாதி, டெல்லி ஜும்மா மசூதி ஆகிய கட்டியங்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு தாஜ்மகாலுக்கான வரைபடம் உருவாக்கப்பட்டது.
- வெனிஸ் நகரச் சிற்பி “வெரொனியோ”, துருக்கி நாட்டு கட்டிடக் கலைஞர் “உஸ்தாத் இஷாகான்”, லாகூரைச் சேர்ந்த “உஸ்தாத் அகமது” ஆகியோருடன் ஷாஜஹானும் இணைந்து வடிவமைத்த வடிவமைப்பு தாஜ்மகால்!
- தாஜ்மகாலைக் கட்டும் பணி 1631 – ல் தொடங்கியது.
- தாஜ்மகாலின் கட்டிட வேலைகளுக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தவர் - ”முகம்மது ஹனீஸ்”. வர்ண வேலைகளுக்குப் பொறுப்பு வகித்தவர் -”சத்தார்கான்”.
- நிலத்திலிருந்து 22 அடி உயரத்தில் 186 அடி சதுரமான பரப்பில் அமைந்துள்ள தாஜ்மகாலின் எல்லாப் பக்கங்களும் சமச்சீரான வடிவம் கொண்டவை.
- வெங்காய வடிவினாலான பெரிய சலவைக் கல் குவிமாடம் 35 மீ உயரம் உடையது. அதன் உச்சியில் பாரசீகம், இந்து அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தாமரை வடிவ அமைப்பின் மீது கலசம் அமைந்துள்ளது. இக்கலசத்தின் மேல் இஸ்லாம் மத அடையாளத்தைக் குறிக்கும் வகையில் பிறை ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இக்கலசம் 1800 ஆம் ஆண்டு வரை தங்கத்தால் ஆனதாக இருந்ததாகவும், பின்னர் வெண்கலத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
- அடித்தளத்தின் மீது நான்கு மூலைகளிலும் அமைந்திருக்கும் “மினார்”கள் ஒவ்வொன்றும் 400 மீ உயரம் உடையவைகள்,
- தாஜ்மகாலின் உட்பகுதி 30 விதமான நிறங்களைக் கொண்ட கற்களால் ஆன கலைவேலைப்பாடுகளைக் கொண்டது.
- தாஜ்மகாலில் இடம் பெற்றிருக்கும் ஒரே கையெழுத்துக்குச் சொந்தக்காரர் – பாரசீகக் கவி அமானாத் கான்!
- தாஜ்மகாலின் கட்டுமானப் பணிகளுக்காக சன்ன ரக மக்ரானா சலவைக் கற்கள் இராஜஸ்தானிலிருந்தும், கரும்பச்சை ஸ்படிகக் கற்கள் சீனாவிலிருந்தும், நீல நிறக் கற்கள் திபெத்திலிருந்தும், மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் நீல நிறக் கற்கள் ஆப்கானிஸ்தானிலிருந்தும், பச்சை நிற ஸ்படிகக் கற்கள் மற்றும் நீல நிறம் கலந்த வண்ணக் கற்கள் எகிப்திலிருந்தும், சிவப்பு நிறக் கற்கள் ஏமனிலிருந்தும், ஸ்ஃபையர் என்றழைக்கப்படும் கற்கள் இலங்கையிலிருந்தும், பவழங்கள் அரேபியாவிலிருந்தும், பச்சை வண்ணக் கனிமங்கள் இரஷ்யாவிலிருந்தும், வெள்ளைக் கிளிஞ்சல்கள், முத்துச் சிற்பிகள் போன்றவை இந்தியப் பெருங்கடலில் இருந்தும் பெறப்பட்டன.
- 22,000 தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான யானைகள், பல நூறு நிபுணர்கள் உழைப்பில் உருவான தாஜ்மகாலைக் கட்ட 17 ஆண்டுகள் ஆனது. அன்றைய மதிப்பில் இதன் கட்டுமான செலவு - 4 கோடி!தாஜ்மகாலைச் சுற்றிலும் 300 மீ நீளம், 300 மீ அகலத்தில் முகலாயப் பூங்கா அமைந்துள்ளது, ஆரம்ப காலத்தில் பலவிதப் பூஞ்செடிகள், பழமரங்களுடன் இருந்த இப்பூங்காவை ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் புல் தரைகளைக் கொண்டதாக மாற்றியமைத்தனர்.
- இந்திய வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு தாஜ்மகாலைப் பராமரித்து பாதுகாக்கத் தனிச்சட்டம் கொண்டு வந்தார். அவர் எகிப்தின் கெய்ரோ நகரில் இருந்து வாங்கிக் கொடுத்த அழகான தொங்கு பித்தளை விளக்கு இன்றும் தாஜ்மகாலில் தொங்கிக் கொண்டுள்ளது.
- மாசுக்களில் இருந்தும், அமில மழையின் பாதிப்பில் இருந்தும் தாஜ்மகாலைக் காக்க 1996 ம் ஆண்டு இந்திய உச்ச நீதி மன்றம் அதைச் சுற்றிலும் 10,400 ச.கி.மீ பரப்பளவில் இருக்கும் எல்லா தொழிற்சாலைகளும் நிலக்கரிக்குப் பதில் எரிவாயுவை மட்டும் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
- 1983 ம் ஆண்டு யுனெஸ்கோவால் உலகக் கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்ட தாஜ்மகாலைக் காண ஆன்டொன்றுக்கு சராசரியாக இருபது முதல் நாற்பது இலட்சம் பேர் வருகின்றனர்.
- தாஜ்மகாலைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேராசிரியர் ஓக் என்பவரால் எழுதப்பட்ட புத்தகம் இந்தியாவில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியால் தடை செய்யப்பட்டது.
- தாஜ்மகாலின் கட்டிடப் பணியைச் செய்தவர்கள் இதே போன்று வேறு ஒரு கட்டிடத்தை உருவாக்கமலிருப்பதற்காக அவர்களின் கைகள் வெட்டப்பட்டதாகவும், முதன்மைக் கட்டிடக் கலைஞர் சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டதாகவும் செவி வழிச் செய்தி உண்டு.