Saturday, 2 November 2019

நட்பாட்டம்

உங்க மகள் லவ் மேரேஜ் செய்துக்கிட்டாஎன்று வந்த அலைபேசி தகவலால் ராமசாமி தவிப்போடு உட்கார்ந்திருந்தார். அவரின் மகள் சென்னையில் தங்கி தேசிய வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தாள். அவளின் அலைபேசி அணைத்து வைக்கப் பட்டிருந்ததால்  காலையில் தகவல் வந்த அலைபேசிக்கு பலமுறை முயற்சித்துப் பார்த்தார். சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. நாளை காலை ட்ரெயினை பிடித்தால் பேருந்தில் செல்வதை விட சீக்கிரமாக சென்னைக்குச் சென்று விட முடியும் என்பதால் உடனடியாக அவர் கிளம்பவில்லை. அவரின் மனைவி பெருங்குரலெடுத்துப் புலம்பியதில்  தெருவுக்கே விசயம் தெரிந்து போனது. சிலர் இவர்கள் வீட்டு வாசல் வரை வந்து எட்டிப் பார்த்தனர். பலர் அவரவர் வீட்டு வாசலில் கூடி நின்று ராமசாமியின் வீட்டுக் கதையை பேசிக் கொண்டிருந்தனர்.

ராமசாமியை ஜாக்சன் ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார். ஜாக்சன் ராமசாமியின் எதிர்வீட்டுக்காரர். நடைப்பயிற்சியில் தொடங்கிய அவர்களின் நட்பு பின்னர் குடும்ப நட்பாய் மலர்ந்திருந்தது. ராமசாமியும், அவர் மனைவியும் சென்னை சென்ற பின்பும் கூட தெரு அவர்கள் வீட்டுக் கதையை விடவில்லை. பூச்சூடி அலங்காரம் செய்து உலாவ விட்டுக் கொண்டிருந்தது. இதெல்லாம் ராமசாமி சென்னையில் இருந்து திரும்பும் வரை தான்! அதன்பின் மொத்த சூழலுமே மாறிப் போனது.

சென்னையிலிருந்து திரும்பிய ராமசாமி நேராக ஜாக்சன் வீட்டிற்குச் சென்றார். ”உன் மகன் தான் என் பொண்ணு மனசைக் கெடுத்து அவளை கல்யாணம் பண்ணியிருக்கான். அந்த நாய்க்கு எங்க வீட்டுப் பொண்னு கேட்குதோ?. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே எனக்கு ஆறுதல் சொல்லி இருக்க. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?” என  அவர் சட்டையைப் பிடித்து பாய பதிலுக்கு ஜாக்சனும் பாய்ந்தார்

என் பையன் உன் பொண்ணை கல்யாணம் செய்திருக்கானா?” எனக் கேட்டபடியே தன் மகனின் அலைபேசிக்கு அழைத்தார். சுவிட்ச் ஆஃப் என வந்தது. அவனின் அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய பிறகே ராமசாமி சொன்னது உண்மை என அவருக்குத் தெரிந்தது. இருந்தும் என்ன செய்ய? கொட்டிய வார்த்தைகளில் நல்ல உறவு நசுங்கிப் போனது. தனி மனித வெறுப்பு மத வெறுப்புணர்வாக மாற ஆரம்பித்தது. இருவரின் மனதிலும் பழிவாங்கும் உணர்ச்சிகளே மேலெழுந்து நின்றன. தங்களின் குடும்பப் பிரச்சனையை மானப்பிரச்சனையாகவும்மதப் பிரச்சனையாகவும் கருதினர்

தன் மகளை மதம் மாற்றிவிட்டார்என  இராமசாமி சொல்லப் போக மத அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அவரோடு கைகோர்த்தனர். பதிலுக்கு, ஜாக்சனுடன் அவர் மதத்தைச் சேர்ந்தவர்கள் கைகோர்க்க வாய்சண்டை கைசண்டையானதில் போலீஸ் ஸ்டேஷன் வரை போய் திரும்பி இருந்தனர்.

 
சென்னையில் திருமணம் செய்து கொண்ட அவர்களின் பிள்ளைகளோ சந்தோசமாய் குடும்பம் நடத்த ஆரம்பித்திருந்தனர். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு என்பதால் அலைபேசி அழைப்புகளையும் தவிர்த்திருந்தனர். சில தினங்களுக்குப் பின் தம்பதியாய் வந்திருந்தவர்களை அக்கம், பக்கம் வீட்டார்கள் புதிதாய் பார்த்தனர். தெருமுனையில் கடை வைத்திருக்கும் இராமு தாத்தா, “என்னப்பா இப்படி செஞ்சிட்டீங்க. உங்களுக்காக உங்க அப்பனுக போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் போயிட்டானுக. நீங்க வந்திருக்கிறது தெரிஞ்சா என்ன செய்வானுகன்னு தெரியலையேஎன்றார்.

அந்த வார்த்தைகளில் இருந்தே தங்கள் வீடுகளின் மனநிலையை அவர்கள் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில் தனியாகச் செல்வது சரியாக இருக்காது என நினைத்த இருவரும் இராமு தாத்தாவிடம், “ நீங்களும் வீடு வரைக்கும் எங்க கூட வாங்க. தனியா போக பயமா இருக்குஎன்றனர்.

பயப்படுறவங்க எதுக்கு கல்யாணம் கட்டிக்கிட்டீங்கஎன்று கடிந்து கொண்டவர்  கடையைச் சாத்திவிட்டு அவர்களோடு கிளம்பினார். இருவரின் வீடும் அவர்களை உள் வாங்க அனுமதிக்கவில்லை. ஓடுகாலிகளுக்கு எங்க வீட்டுல இடமில்லை என எகிறிக் குதித்தனர்

இராமசாமியிடமும், ஜாக்சனிடமும் இராமு தாத்தா உரிமையோடு ஏதேதோ சொல்லிப் பார்த்தார். வாழைமரமாய் வாழ வேண்டிய பிள்ளைகளை ரோட்டுல நிக்க வச்சு சண்டை போடுறது நல்லாயில்லை. அவளை மட்டுமாவது கூட்டிட்டுப் போ. மத்ததை பொறவு பேசிக்கலாம் என அவர் சொன்னதை ராமசாமி காதில் போட்டுக் கொள்ளவில்லை.  

சமாதான முயற்சி எதுவும் பலிக்காததால் இருவரையும் தன் வீட்டிற்கே இராமு தாத்தா அழைத்து வந்தார். இன்னைக்கு இராத்திரிக்கு இங்கே தங்குங்க. நாளைக்கு உங்க அப்பனுகளிடம் பேசிப் பார்க்கிறேன் எனச் சொல்லி விட்டு முற்றத்தில் உறங்கப் போய்விட்டார்.

இருள் கவிழ்ந்து கிடந்த அதிகாலை நேரத்தில் இராமு தாத்தா இரயிலடிக்குச் சென்றார். ராமசாமியும், ஜாக்சனும் அங்கு தான் நடைப்பயிற்சிக்குச் செல்வது வழக்கம். இராமு தாத்தாவைக் கண்ட இராமசாமியின் முகம் இறுகியது. ”என்னைய அசிங்கப்படுத்திட்டு ஓடுனவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வராதீக. அந்த சிலுவைப் பயலையும், அவன் மவனையும் தொலைச்சிக் கட்டாம விடமாட்டேன். என் மனசு கொதிக்குதுஎன்றார்.

அவங்களை தொலைச்சுக் கட்டிட்டு உன் மகளை என்ன பண்ணப் போற? பெத்த பிள்ளையோட புருசனை இல்லாம ஆக்குவேன்னு சொல்றதுக்கு உனக்கு எப்படி மனசு வருது?” என்று கோபம் காட்டிய இராமு தாத்தா பின் சமாதானமானவராய் முதல்ல உட்காரு. நிதானமா இருக்கப் பழகு. நீயும், அந்தப் பயலும் மதம் பார்த்தாடா பழகுனீங்க. பிள்ளைகள் காதலிச்சு கட்டிக்கிடுச்சுகங்கிறதுக்காக கோவத்துல பழிவாங்க மதத்தைத்  தூக்கினீங்க. இப்ப அது உங்களை விடாம பிடிச்சிக்கிடுச்சு. அடிச்சு நாறிக்கிட்டு கிடக்கீங்க. உசந்த பதவியில இருக்குற உனக்கு இதெல்லாம் நான் சொல்லித் தெரியனுமா? என்றார்.

நம்ம மதத்துல எவனையாவது கூட்டிக்கிட்டு போயிருந்தாக் கூட சமாதானம் ஆகிருப்பேன். ஆனால், அந்த சிலுவைக்காரனைப் பிடிச்சிக்கிட்டு போயிட்டாளேஎன ராமசாமி சொன்னதைக் கேட்டு இராமு தாத்தா பலமாய் சிரித்தார்.

அப்படிச் செஞ்சிருந்தாலும் நீ ஒத்துக்க மாட்டே. நம்ம சாதிக்காரனா இல்லையேன்னு முரண்டு பிடிச்சிக்கிட்டு நிப்பே. இது மனித சுபாவம். இப்ப உன் மனசு பூரா உன் கெளரவம் போச்சேங்கிற நினைப்பு மட்டுமே இருக்கு. அது தான் உன் கோவத்துக்கு காரணம். இரண்டு பேரும் மதம் மாறாம அவங்க, அவங்க மதத்துல தான் இப்ப வரைக்கும் இருக்காங்க. பதிவு திருமணம் செஞ்சிருக்காங்க.  ஆனா அதுகளைப் பெத்த நீங்க மதத்தை சொல்லிக்கிட்டு உங்களையே கூறு போட்டுட்டீங்களேப்பா என்றார்

உனக்கிட்ட பேசுற ,மாதிரி அவங்கிட்டப் பேச முடியாது. பேசினாலும் இப்ப இருக்குற நிலையில் நான் அவன் மதத்துக்காரன் இல்லைங்கிற நினைப்பு தான் அவனுக்கு வரும். அதான் உனக்கிட்ட பேசனும்னு தோனுச்சு. அந்தப் பிள்ளைகளை என் வீட்டுல தான் தங்க வச்சிருக்கேன். அதுகளை உன் வீட்டுக்குக் கூப்பிடு. உன் வீட்டுக்குள்ள வந்துட்டா அதைப் பார்த்துட்டு அவனும் கூப்பிட ஆரம்பிச் சிடுவான்

கை நிறையா சம்பாதிக்கிற பிள்ளைக உங்களையெல்லாம் வேண்டாம்ன்னு தூக்கிப் போட்டுட்டுப் போக எம்பூட்டு நேரமாகும்? அப்படிப் போனா அதோட வலி என்னன்னு இப்பத் தெரியாது. மனசும், உடம்பும் சுண்டிப் போகும் போது தான் அதோட வலி தெரியும். பிள்ளை இருந்தும் இல்லாதவனா வாழுற துயரத்தை அனுபவிக்கிறவன் சொல்றேன். சுயமா நிக்கிற வக்கிருந்தும் அப்பனும், ஆத்தாளும், கூடப் பொறந்த பொறப்பும் வேனும்னு வாசலுக்கு வந்திருக்கிற பிள்ளைகளை உங்க பிடிவாதத்தால தூக்கி வீசிடாதீங்க. வறட்டுக் கெளரவத்திற்காக வேரும், வேரடி மண்னுமா வளர்ந்து நிக்கிற பிள்ளைகளை வெறுக்க வச்சிடாதிங்க. அப்புறம் உன் இஷ்டம் என்றபடி இராமுதாத்தா எழுந்து நடக்க ஆரம்பித்தார்.

இராமசாமி நடைப்பயிற்சியைத் தொடங்காமல் அந்தத் திண்டிலேயே உட்கார்ந்திருந்தார். ”கைபேசி ஒலிக்கத் தொடங்கியது. இன்னைக்கு மதியமா அங்கே வந்துறோம். அந்த சிலுவைப் பயல ஒரு வழி பண்ணிடலாம்என அழைத்தவர் சொன்ன வார்த்தைகள் முழுமையடைவதற்கு முன்பாகவே இணைப்பைத் துண்டித்தார்.  “பிள்ளை இருந்தும் இல்லாதவனா வாழனுமா?” என்ற இராமு தாத்தாவின் வார்த்தைகள் அவரை சுழற்றியடித்த படியே இருந்தது. நேற்று வரை எகிறிக் குத்தித்து விட்டு இன்று சமாதானமாகி விட்டேன் என்று சொன்னால் தன்னை எவன் மதிப்பான்? காறித்துப்ப மாட்டானா? முன் செல்ல விட்டு பின் நகைக்க மாட்டானா? தனக்குத் தலைப்பாகை இட்டவனெல்லாம் தன் தலையை பகடைக்காயாக்கி உருட்டமாட்டானா? என அடுக்கடுக்காய் அவருக்குள் பிறந்த கேள்விகள் திரும்ப திரும்ப அவர் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது

சட்டென எழுந்தவர் வழக்கத்திற்கு மாறாக இரயில் நிலைய நடைமேடைக்குக் கீழ் இறங்கி நடக்க ஆரம்பித்தார். இரயில் நிலையத்தின் மங்கலான வெளிச்சத்தில் நடக்கத் தொடங்கியவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன் காதுகளை எட்டுகின்ற புகைவண்டியின் ஓசையில் அவர் சிநேகிதன் ஜாக்சனின் குரலும் கலந்திருப்பது!

 
நன்றி : வாதினி தீபாவளி மலர்

No comments:

Post a Comment