Wednesday 24 November 2021

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

இரா. எட்வின் அவர்களின் நண்பராக முகநூலில் இணைந்த பின் அவருடைய பதிவுகளை நேரம்வாய்க்கும் போதெல்லாம் வாசிப்பதுண்டு. குழந்தைகளுக்கும், சமூகத்திற்குமான அக்கறையும், உள்ள நிறை நெகிழ்வும் எப்பொழுதும் நிரம்பி நிற்கும். இத்தொகுப்பில் இருக்கும்தெய்வங்களுக்குக் கற்றுத் தருபவன்என்ற கட்டுரையை அவருடைய முகநூல் பதிவில் வாசித்த பின் ஏனோ அந்த தலைப்பும், அதன் சாரமும் மனதுக்கு நெருக்கமானதாகிப் ,போனது. இத்தொகுப்பில் இருக்கும் கட்டுரைகளில் சில அவரின் முகநூல் பக்கங்களில் முன்பே வாசித்தவை என்ற போதும் மீள்வாசிப்பின் போதும் மாறா மனநிலையையே தருகிறது.

எட்வின் அவர்கள் ஆசிரியப் பணியில் இருப்பதால் கல்வி குறித்தும், மாணவர்கள் குறித்தும் அதிகம் இத்தொகுப்பில் எழுதி இருக்கிறார். தன் படைப்பின் வழி அவர் முன் வைக்கும் கேள்விகளும், எழுப்பும் சந்தேகங்களும், சொல்லும் ஆலோசனைகளும் அந்தந்த தளங்களில் விவாதத்தைக் கிளப்பக் கூடியவைகளாகவும், விவாதிக்க வேண்டியவைகளாகவும் இருப்பதை மறுக்கவோ, மறுதலிக்கவோ முடியாது.

பிரம்புகளைத் தூக்கி வீசுங்கள் (இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேளையில் மகனின் வகுப்பு ஆசிரியை அவனை டிரம் ஸ்டிக்கில் அடித்ததால் ஏற்பட்டிருக்கும் காயம் பற்றி மனைவி சொன்னாள்), குழந்தைகளை அன்பால் அரவணையுங்கள், அவர்களின் உலகம் அலாதியானது, அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கிறது என குழந்தைகள் குறித்த விளிப்பைத் தருகிறார். அதேநேரம், அவர்களின் கண்திறக்கும் கல்வியை இன்று எங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறோமென்றும், அந்தக் கல்வியை மறுக்கக் காரணமானவர்களைகல்வித் திருடர்கள்என்றும் காட்டமாகச் சாடுகிறார்.

பெயரில் இருக்கிறதுகட்டுரையில் பெயருக்குப் பின் இருக்கும் சாதி, மத அரசியல் பற்றியும், ”இவனுக்கு அப்போது மனு என்று பேர்கட்டுரையில் பிராமண ஆதிக்க மனப்பான்மை தாழ்ந்த குலத்திற்கு மறுத்த கல்வி, ஆலயவழிபாடு குறித்தும், ”நமக்கு இல்லை கடவுள் கவலைகட்டுரையில் ஆத்திகத்தை நாத்திகம் வீழ்த்துவதற்கான அடிப்படை விழிப்புணர்வு இன்மையையும் எளிமையாய் அறியத் தருகிறார்.

மனசு பெருத்த மாமனிதர்என்ற தலைப்பில் காமராஜருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். உணர்ச்சி மேலிட எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ”செய்தவர்களைக் கொண்டாடும் அளவிற்கு அதை செய்யக் காரணமாக இருந்தவர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லைஎன்ற உணமையை போகிற போக்கில் வாழைப்பழ ஊசியாய் நம்முள் ஏற்றிப் போகிறார்.

பாரதி - பாரதிதாசன் சந்திப்பு, நெ.து, சுந்தர வடிவேலுவின் மொழிப்பற்று, திப்புவின் மரணம் ஆகிய கட்டுரைகள் வழியாக எட்வின் தரும் தகவல்கள் அவைகள் குறித்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் எடுத்த நூல்களை அதன் ஆசிரியர் பெயரோடு அடையாளமும் படுத்துகிறார்.

ஒரு பிணம் இரண்டு பாடை”, ”நதி பயணப்படும் பாதை”, ”ஒரு முகநூல்ஆகிய கட்டுரைகளில் சமூகம் சார்ந்த அவலத்தின் மீதேறி தனக்குள் எழுந்த கேள்விகளை நம் முன் நீட்டுகிறார். அதற்கான பதில்கள் கண்டடைய வேண்டியதாகவே இருக்கிறது.

எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் தகவலைப் பெற முடிகின்ற தொகுப்பின் சில கட்டுரைகளை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே என்ற எண்ணம் எழுகிறது. வறட்டு வார்த்தைகளால் கட்டுரைகளை கட்டமைக்காமல், சிக்கலற்ற மொழியில், தான் உணர்ந்ததை, தன்னுள் எழுந்ததை நம்மில் பதிக்கும் சூட்சும லாவகத்தில், இழுக்கப்பட்ட நேர்கோடாய் கட்டுரைகளாக்கி இருக்கிறார். காலத்தின் தேவை, சமூகத்தின் பயன், குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவைகளைக் கண்டடைவதும், கடைந்தேற செய்ய வேண்டிய விசயங்களில் கவனம் கொள்வதும் அவரவர் கடமையாகிறது.


 

No comments:

Post a Comment