சுற்றுலா செல்வதற்கு ஒரு காலத்தில் சாத்தியமானதாக இருந்த கப்பல் பயணம் பொருளாதாரபலம், நேர விரய தவிர்ப்பு ஆகியவைகளால் ஆகாயவிமானங்களுக்கு மாறின. விமான பயணங்களின் மூலம் பார்க்க வேண்டிய இடங்களின் தூரங்கள் குறைந்தது போலவே அந்தப் பயணம் சார்ந்த நினைவுகளின் வாழ்நாளும் குறைந்து போயின. இந்த நிஜத்தை உணர்ந்த கப்பல் நிறுவனங்கள் தங்களுடைய உல்லாசக் கப்பல்கள் மூலம் ”க்ரூஸ்” எனப்படும் பயணங்களை அறிமுகம் செய்தன. இன்று பிரபலமான சுற்றுலா வகைகளுள் ஒன்றாக அது மாறிவிட்டது. விமான பயணச் சுற்றுலாக்கள் போல கப்பல் பயணச் சுற்றுலாக்கள் சட்டென அது சார்ந்த நினைவுகளை நீர்த்து போக வைப்பதில்லை. விரைவாக இன்னொரு மனநிலைக்கு நம்மை கடத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பசுமரத்தாணியாய் மனதில் உறைந்து அவ்வப்போது அலைகளாய் எழுந்து கொண்டே இருக்கும். கப்பலின் பிரமாண்டம் போலவே அதில் கிடைக்கும் பிரமாண்ட வசதிகள், பல நாட்டவரோடு குறிப்பிட்ட சில தினங்கள் கலந்து குழுவாக இன்னும் சொல்லப்போனால் நவநாகரீக வசதி கொண்ட கிராமத்தில் வாழ்தல் போன்ற உணர்வு (கப்பல் சிப்பந்திகள், கலைஞர்கள் தவிர இந்த பயணநாவல் பேசும் கப்பல் பயணத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த 3624 பிரயாணிகள் பயணம் செய்துள்ளனர்) ஆகியவைகள் அதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த காரணத்தை ஏற்க முகாந்திரம் கேட்பவர்களுக்கு அதற்கான எல்லா தரவுகளையும் தாராளமாய் அள்ளித் தருகிறது இந்த உல்லாசக் கப்பல் பயணம் நூல்.