Thursday 30 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 45

அத்தியாயம் - 45 

(ஜோடி)

எதிர்பாராத வகையில் இரவுராணி மலர் இருக்கும் தடாகத்தின் கரைக்கு கோவிந்தசாமி வந்து சேர்கிறான். நினைவிலும், இலட்சியத்திலும் இருந்த உறுதியில் நீலநகர வனத்துக்கு வந்த நோக்கத்தையே மறந்தும் போகிறான்.

தன் தோற்றம், ஆளுமை சார்ந்து தனக்கிருந்த நம்பிக்கை சாகரிகாவைக் கவர பயன்படும் என நினைக்கிறான். நினைப்பா? தப்புக் கணக்கா? என்பது போகப் போகத் தெரியும்! அந்த நினைப்பு தாய் மசாஜ் குறித்து ஆரம்பத்தில் அவன் கொண்டிருந்த குற்ற உணர்வை நற்செயலாக நினைக்க வைக்கிறது.

மாயத்தடாகத்தில் குளித்து எழுந்த கையோடு கண்ணில் பட்ட இரவுராணி மலரைப் பறித்து தன் எண்ணத்தை அதன் இதழ்களுக்குள் புதைக்கிறான். அதேநேரம், உடலோடும், இதழோடும் இதழ் பதித்து காதல் செய்து கொண்டிருக்கும் ஒரு ஜோடியையும் பார்க்கிறான். முத்தத்திற்கு தங்களை குத்தகைக்குக் கொடுத்திருந்த அந்த ஜோடியின் முத்த பரிமாறலில் தன்னை மறந்த நிலையில் அவர்களை நெருங்கிப் பார்த்த கோவிந்தசாமிக்கு அதிர்ச்சி.

அதுல்யாவைக் கண்டதும் தன் மூலம் குழந்தை பெற்றதாக வெண்பலகையில் எழுதியதற்காக அவள் மீது கோபம் கொள்கிறான். அவளோ உனக்கு இரண்டு கேட்கிற போது எனக்கு ஒன்னு இருக்கக் கூடாதா? என்பதாய் பதில் சொல்கிறாள். அவளுடன் இருந்த நரகேசரியோ உன் குழந்தைக்கு நான் இன்ஷியல் கொடுத்திருக்கிறேன் என்கிறான். சாகரிகாவைத் தவிர எந்தப் பெண்ணையும் தீண்டியதில்லை என கோவிந்தசாமி தீர்க்கமாய் சொன்ன போதும் அதெல்லாம் எடுபடவில்லை. பேச்சுவார்த்தை உக்கிரமடைந்த நிலையில் இரவுராணி மலரின் தன்மை குறித்து அதுல்யா கோவிந்தசாமிக்கு நினைவூட்டுகிறாள். வழக்கம் போல அவன் அழ ஆரம்பிக்கிறான்.

மனதைக் கவரும் சக்தி தாமரைக்கு இல்லாத போது கருப்பு காம்பில் பூத்த சிவப்பு மலரை சரணடைய வேண்டி இருக்கிறது. ஊடுபாவாய் ஓடும் ஊரறிந்த உண்மை!

No comments:

Post a Comment