Tuesday 20 June 2017

மூளைதனமும் – தொலைநோக்கும்!


சில வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த நிறுவனம் நடத்திய மேம்பாட்டுத் திறன் சார்ந்த பயிலரங்கில் ஊழியர்களிடம் சில கேள்விகள் அடங்கிய தாள்கள் தரப்பட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் தனித்தனியாகப் பதில்கள் பெறப்பட்டன. அதில் ஒரு கேள்வி. வாழ்வில் முன்னேற என்ன தேவை? மூளைதனமா? மூலதனமா? நான் உள்பட பலரும் எழுதிக் கொடுத்திருந்த பதில் என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பதில்கள் பெறப்பட்ட பின் பயிலரங்கை நடத்தியவர் மூலதனம் மட்டும் இருந்தால் வழ்க்கையை வெற்றி பெற்று விட முடியும் என நினைக்கிறீர்களா? என்ற போது கோரசாய் ஏன் முடியாது? என்று கேட்டோம். அப்படியானால் உங்கள் ஊரில் அல்லது உங்கள் உறவினர்களில், உங்களுக்குத் தெரிந்தவர்களில் பணக்காரர்களாக இருப்பவர்களில் எத்தனை பேர் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள்? என்று அவர் திருப்பிக் கேட்ட போது எங்களிடம் பதில் இல்லை.

அன்று வரை பணம் இருந்தால் போதும் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். செல்வச் செழிப்புகளோடு இருப்பவர்களே வாழ்க்கையில் வெல்கிறார்கள் என எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டு தான் இருந்தேன். உண்மையில் அது தவறான கருத்து. அப்படியான ஒன்றைத் தொடர்ந்து நாம் கேட்டுக் கேட்டு பழகி விட்டதால் அது நம் உள் மனங்களில் பதிந்து அது தான் நிஜம் என நம்ப வைத்துக் கொண்டிருக்கிறது. அம்பானியைவும், டாட்டாவையும், வாரன் பெப்பட்டையும், பில்கேட்சையும் வெறும் பணக்காரர்களாக மட்டுமே பார்த்து வருகிறோமேயொழிய அவர்களை நாம் ஒரு தொழில் விற்ப்பனர்களாக பார்க்கப் பழகவில்லை. முதலீடுகள் மட்டும் அவர்களை வெற்றியாளர்களாக மாற்றவில்லை. அவர்கள் தங்களின் மூளையை முதலாய் உருமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது தான் அவர்களை வெற்றியாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மூளைதனம் இல்லாததால் தான் நம் ஊர் பணக்காரர்கள் அஞ்சுக்கும், பத்துக்கும் வட்டித் தொழில் செய்து அமைந்தக்கரையில் வீடு வாங்க முடியுமா? என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்

முதலீடு என்பதெல்லாம் இன்று ஒரு பெரிய விசயமே இல்லை என்றாகி விட்டது. உங்களிடம் ஒரு நல்ல யோசனை இருக்கிறதென்றால் அதைச் செயல்படுத்தித் தர பலரும் காத்திருக்கிறார்கள். வங்கிகள் வாசல்களைத் திறந்து வைத்திருக்கின்றன, அரசாங்கம் மானியம் தரக் காத்திருக்கிறது. இத்தனை வாய்ப்புகளையும் நீங்கள் பெற வேண்டுமானால் உங்களிடம் ஒரு நல்ல ஐடியா இருக்க வேண்டும். அந்த ஐடியா தான்மூளை தனம்”. அதை அடைவதற்கான வழிமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி இருந்து விட்டால் மற்ற எல்லாமே ஒரு பிரச்சனையாக இருக்காது. அப்படியான ஒரு ஐடியாவையும், அதை அடைவதற்கான ஒரு சிறந்த வழிமுறையையும் வைத்திருந்ததாலயே நாற்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி நான்கைந்து மாவட்டங்களுக்குள் செய்து வந்த தொழிலை கெவின்கேர் என்ற பிசினஸ் சாம்ராஜ்ஜியமாக சி.கே.ரெங்கநாதனால் மாற்ற முடிந்தது.

எல்லோரும் செய்வதையே நீங்கள் செய்யாதீர்கள். எல்லோரும் சிந்திப்பதையே நீங்களும் சிந்திக்காதீர்கள். எல்லோரும் சொல்லுவதையே நீங்களும் சொல்லாதீர்கள். நீங்கள் செய்வது, சிந்திப்பது, சொல்வது எல்லாமே பொத்தாம் பொதுவாய் இருக்கக் கூடாது. வித்தியாசம் வேண்டும். அட……என ஆச்சர்யத்தோடு உங்களைக் கவனிக்கச் செய்ய வேண்டும். மற்றவர்களைத் தன்னை நோக்கித் திருப்புகிறவன் தரணி ஆள்கிறான் என்ற அரசியல் முழக்கம் சத்திய வார்த்தை என்பதை நினைவில் வையுங்கள். அரசியல்வாதிகள் தங்களுடைய நாவன்மையால் நாட்டை ஆள்வதைப் போல வித்தியாசமான செயல்களால் உங்கள் துறையில் நீங்களும் வெற்றியாளராக உருவாகித் தரணி ஆள முடியும்.

வால்மார்ட் முதன் முதலில் சிறியதாக ஒரு கடையைத் திறந்த போது வியாபாரம் செய்ய வேண்டும் என்று மட்டும் நினைக்கவில்லை. இதன் மூலம் ஒரு பெரிய வர்த்தக நிற்வனத்தையே அமைக்க வேண்டும். அதற்கான ஆரம்பமே இந்தக் கடை என நினைத்தார். ”நீங்கள் எந்தப் பொருளையும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்என அதுவரை யாரும் செய்திறாத புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதனால் பலரின் கவனிப்பும் அவர் கடையை நோக்கித் திரும்பியது. வியாபாரத்தை வழக்கமாக எல்லோரும் செய்வதைப் போலச் செய்யாமல் தொலை நோக்குச் சிந்தனையோடு அவர் அறிவித்த அந்த திட்டம் வால்மார்ட்டை இன்றளவும் உலகின் நம்பர் ஒன் சில்லறை வர்த்தக நிறுவனமாக வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் அதிக வியாபாரம் இல்லாத போது தான் வழங்கும் உணவின் தரத்திலும், வாடிக்கையாளர் சேவையிலும் காட்டிய அக்கறை இன்று சரவணபவனை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தது. சிறு விளம்பரங்கள் தானே என்று நினைக்காமல் அதில் காட்டிய அக்கறையும், தனித்தன்மையும் இன்று உலகின் மிகச் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராக .ஆர்.ரகுமானை பார்க்க வைத்தது. மூளைதனத்தோடு கூடிய ஈடுபாடும், அக்கறையும் நிறைந்த ஒரு தொலைநோக்குச் சிந்தனை மட்டுமே இவர்களை உச்சத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தது.

அப்படியானால் மூலதனம் தேவையில்லையா? வெறும் கையால் முழம் போட முடியுமா? என நீங்கள் கேட்கலாம். மூலதனம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது தேவை என்பதாலயே உலகக் கோடீஸ்வரர்கள் என பட்டியலிடப்பட்டவர்களும் கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் மூலதனம் மட்டும் வைத்திருப்பதில் பயனில்லை. மூளைதனமில்லாத மூலதனம் மட்டும் வைத்திருந்தால் என்ன நடக்கும்? இந்த சூஃபிக் கதையை வாசியுங்கள்.

ஒரு பெரியவரிடம் 17 ஒட்டகங்கள் இருந்தன. அவர் தன்னுடைய கடைசிக் காலத்தில் தன் ஒட்டகங்களில் பாதியை முதல் மகனுக்கும், மூன்றில் ஒரு பங்கை இரண்டாவது மகனுக்கும், ஒன்பதில் ஒரு பங்கை மூன்றாவது மகனுக்கும் கொடுக்க வேண்டும்  என உயில் எழுதி வைத்து விட்டு இறந்து போய் விட்டார். உயிலைப் படித்துப் பார்த்த மகன்களுக்கு அதிர்ச்சி. அதெப்படி 17 ஒட்டகங்களைப் பாதியாகப் பிரிக்க முடியும்? என யோசித்தவர்கள் பலரிடமும் யோசனை கேட்டனர். வாய்ப்பே இல்லை, ஒட்டகங்களைக் கொன்றால் மட்டுமே உயிலில் இருப்பது மாதிரி பகிர முடியும் எனச் சொல்லி விட்டனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு முதியவர் ஒட்டகங்களைக் கொல்லாமலே நான் பிரித்துத் தருகிறேன் எனச் சொல்லி விட்டு தன்னிடமிருந்த ஒரு ஒட்டகத்தை அந்த ஒட்டகங்களோடு சேர்த்து முதல் மகனுக்கு 9 ஒட்டகத்தையும், இரண்டாம் மகனுக்கு 6 ஒட்டகத்தையும், மூன்றாம் மகனுக்கு 2 ஒட்டகத்தையும் கொடுத்து விட்டு தன்னுடைய ஒரு ஒட்டகத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டார் இந்தக் கதையில் வரும் மகன்கள் மூலதனம் மட்டும் வைத்திருந்தார்கள். இருந்தும் என்ன பயன்? முதியவர் வடிவில் வந்த மூளைதனம் இணைந்த போது தானே அந்த மூலதனத்தைப் பயனுள்ளதாக்க்கிக் கொள்ள முடிந்தது.

சந்தர்ப்பம் வரவில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை, நிதி இல்லை எனக் காரணங்கள் சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பதில் உங்களிடம் காரியம் சாதிப்பதற்கான வித்தை என்ன இருக்கிறது? என்பதை முதலில் கண்டறியுங்கள். உங்களை வெற்றியாளராக்கும் மந்திரச்சாவி உங்களுக்குள் தான் இருக்கிறது. அதைக் கண்டு பிடித்து விட்டால் போதும். மூலதனம் இல்லாமலும் முழம் போட முடியும்

நன்றி : அச்சாரம் மாத இதழ்

2 comments:

  1. மூலதனம் இல்லாமல்....ரசித்தேன். அருமையான தன்னம்பிக்கைப் பதிவு.

    ReplyDelete