[தினமணி கலாரசிகனில் "தமிழகப் பாளையங்களின் வரலாறு” நூலுக்கான அறிமுகமும் - விமர்சனமும்]
தமிழக வரலாற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது பாளையக்காரர்களின் வரலாறு. அவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களைப் போல அரசர்கள் அல்லர். நாயக்கர்களையும், மராட்டிய சரபோஜிகளையும் போல மன்னர்கள் அல்லர். மத வெறியால் நாடு பிடித்த நவாபுகளும் அல்லர். ஜமீந்தார்களை விட சற்று மேலான ஆளுமை உள்ள குறுநிலக்கிழார்கள். அவ்வளவே.
கிருஷ்ண தேவராயரின் விஜயநகரப் பேரரசால் உருவாக்கப்பட்டவர்கள் தான் பாளையக்காரர்கள். “பாலாறா” என்கிற தெலுங்கு சொல்லில் இருந்து “பாளையம்” என்கிற பெயர் உருவானது. “பாலாறா” என்றால் ராணுவ முகாம் என்று பொருள். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். நாயக்கர் ஆட்சிக்கு முன்பே தமிழ்கத்தில் பாளையங்கள் சிற்றரசர்களுக்கு உரிய அதிகாரத்துடன் இருந்தன என்றும் சிலர் கூறுகிறார்கள்.
“ஈரோடு மாவட்ட வரலாறு” நூலில் இடம் பெற்றுள்ள அம்மைய நாயக்கனூர் ஜமீந்தார் வம்சாவளி ஆவணப்பதிவு தரும் செய்தி இது – “தளவாய் அரியநாத முதலியார் அவர்களும், விசுவநாத நாயக்கரும் இருவருமாக மதுராபுரிக்கு வந்து பாண்டியன் முன்னர் போர் புரிந்த கோட்டையைச் சுற்றி விசாலமாய் 72 கொத்தளங்களைக் கோட்டை போட்டு 72 கொத்தளத்துக்கும் 72 பாளையக்காரர்களையும் நேர்முகம் செய்கிறது”.