Showing posts with label சுதந்திர வீரர். Show all posts
Showing posts with label சுதந்திர வீரர். Show all posts

Friday, 11 January 2019

கொடி காத்த திருப்பூர் குமரன்!

பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராக காந்தியடிகள் சத்யாகிரகப் போராட்டத்திற்கு விடுத்த அறைகூவல் நாடெங்கும் அனலாய் பரவிக் கொண்டிருந்தது. அதில் தன்னையும் இணைத்துக் கொள்ள திருப்பூர் நகரில் இயங்கி வந்த தேச பந்து வாலிபர் சங்கம் முடிவு செய்தது. அச்சங்க உறுப்பினர்கள் கூடி 10.01.1932 தாங்கள் சத்யாகிரகம் நடத்துவதற்கான தினமாகக்  குறித்தனர். அரசின் தடையை மீறி ஊர்வலம் செல்லவும் முடிவு செய்தனர்.

தேசபந்து வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் சத்யாகிரகிகளாக அறிவிக்கப்பட்டனர். பி. எஸ். சுந்தரம் தலைமையில் அவர்கள் அணிவகுத்துச் செல்வதெனமுடிவானது. திட்டமிட்டபடி அன்றைய தினம் காலை 6 மணிக்குவந்தே மாதரம்”, ”மகாத்மா காந்திக்கு ஜேஎன்ற கோஷத்தோடு அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து வந்த சத்யாகிரகிகள் திருப்பூர் நகர வீதிகளின் வழியே வலம் வந்தனர். நகரக் காவல் நிலையம் அருகில் அவர்கள் வந்ததும் வேங்கையின் பாய்ச்சலோடு முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் தடிகளோடு பாய்ந்து வந்தனர். முன்னெச்சரிக்கை ஏதும் கொடுக்காமல் கண்மூடித்தனமாகத் தாக்க ஆரம்பித்தனர். திடீரென, அவர்களின் கவனமும், தாக்குதலும் ஊர்வலத்தின் முதல் வரிசையில் மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடித்த படி நின்ற இளைஞன் மீது திரும்பியது.