Friday, 11 January 2019

கொடி காத்த திருப்பூர் குமரன்!பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராக காந்தியடிகள் சத்யாகிரகப் போராட்டத்திற்கு விடுத்த அறைகூவல் நாடெங்கும் அனலாய் பரவிக் கொண்டிருந்தது. அதில் தன்னையும் இணைத்துக் கொள்ள திருப்பூர் நகரில் இயங்கி வந்த தேச பந்து வாலிபர் சங்கம் முடிவு செய்தது. அச்சங்க உறுப்பினர்கள் கூடி 10.01.1932 ஐ தாங்கள் சத்யாகிரகம் நடத்துவதற்கான தினமாகக்  குறித்தனர். அரசின் தடையை மீறி ஊர்வலம் செல்லவும் முடிவு செய்தனர்.

தேசபந்து வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் சத்யாகிரகிகளாக அறிவிக்கப்பட்டனர். பி. எஸ். சுந்தரம் தலைமையில் அவர்கள் அணிவகுத்துச் செல்வதெனமுடிவானது. திட்டமிட்டபடி அன்றைய தினம் காலை 6 மணிக்கு ”வந்தே மாதரம்”, ”மகாத்மா காந்திக்கு ஜே” என்ற கோஷத்தோடு அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து வந்த சத்யாகிரகிகள் திருப்பூர் நகர வீதிகளின் வழியே வலம் வந்தனர். நகரக் காவல் நிலையம் அருகில் அவர்கள் வந்ததும் வேங்கையின் பாய்ச்சலோடு முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் தடிகளோடு பாய்ந்து வந்தனர். முன்னெச்சரிக்கை ஏதும் கொடுக்காமல் கண்மூடித்தனமாகத் தாக்க ஆரம்பித்தனர். திடீரென, அவர்களின் கவனமும், தாக்குதலும் ஊர்வலத்தின் முதல் வரிசையில் மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடித்த படி நின்ற இளைஞன் மீது திரும்பியது.


காவலர்கள் சூழ்ந்து நின்று அந்த இளைஞனைத் தடியால் தாக்க ஆரம்பித்தனர். அவன் தலையில் விழுந்த முதல் அடியில் மண்டை ஓடு பிளந்தது. அடுத்த அடி மூளையைத் தாக்கியதில் மூளையின் செயல்பாடு நின்று போனது. நெடுமரமாய் வந்த இளைஞன் வேரற்ற மரமாய் சாய்ந்தான். உயிர் அவனை விட்டு விலகிக் கொண்டிருந்தது. அந்த நிலையிலும் தன்னுடைய வலக்கையில் ஏந்தி நின்ற கொடியைச் சாயாது பிடித்த படி இருந்தான். தன்னுயிர் தந்து தேசக் கொடியைத் தாங்கி நின்ற அந்த இளைஞன் தான் “திருப்பூர் குமரன்!

”குமரன்” என்கின்ற “குமாரசாமி” சென்னிமலையில் நாச்சி முத்து – கருப்பாயி அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாய் பிறந்தார். குடும்பத்தில் இருந்த வறுமையால் பத்து வயதிலேயே குலத் தொழிலான நெசவுத் தொழிலைப் பெற்றோர்கள் அவருக்கு கற்றுக்  கொடுத்தனர். நெசவுத்தொழில் மூலம் குடும்பமே வருவாய் ஈட்டியும் வறுமை அவர்களை விட்டு விலகவில்லை. போதாக்குறைக்கு, நெய்து கொடுத்த துணிகளுக்கு கடை உரிமையாளர்கள் ஊதியம் தராது ஏமாற்றி வந்தனர்.

இதனால், மனவருத்தமடைந்த குமரன் திருப்பூருக்கு வேலை தேடிப் புறப்பட்டார். கணக்கராய் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். வேலை, வருவாய் என சாமானியனாய் வாழ விரும்பாத குமரன் திருப்பூரில் செயல்பட்டு வந்த தேசபந்து வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். வேலை நேரம் போக மீதி நேரம் அச்சங்கத்திற்குச் சென்று நாட்டு அரசியல் பேசிய பிறகே வீடு திரும்புவார். சில நாட்களில் அவர்களின் பேச்சு நள்ளிரவு வரை கூட நீடிக்கும். சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக அன்னிய ஆடை பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு காந்தியடிகள் அழைப்பு விடுத்தார். திருப்பூரிலும் அதன் தாக்கம் தீவிரமாய் இருந்தது. ஆனால், திருப்பூர் “கதர் நகரமாக” இருந்ததால் அங்கு அப்போராட்டம் சாத்தியமில்லாது போனது. என்ன செய்யலாம்? என குமரன் யோசித்தார். அக்காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாட்டாசுகள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. திருப்பூரிலும் அதன் விற்பனை அமோகமாய் இருந்தது.  அந்நியப் பொருளான சீனப்பாட்டாசுகளை எதிர்த்து பட்டாசுக்கடை மறியலைச் செய்யலாமே? என நினைத்தவர் உடனடியாகக் களத்தில் இறங்கினார்.

தன் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவரின் ஐந்து வயது மகனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு பட்டாசுக்கடைக்கு முன் வந்து நின்றார். விற்பனைக்கு எதிர்ப்புக் குரலாய், வாங்க வருபவர்களுக்குத் தடைக் கல்லாய் கடை முன் நின்ற குமரன் மீது கடைக்காரர் பட்டாசுக் கட்டு ஒன்றை தீ வைத்து வீசினார். அது வெடித்துச் சிதறியதில் குமரனின் உடலெங்கும் தீக்காயம் ஏற்பட்டது. ”காயமே இது பொய்யடா” என்ற வாக்கிற்கேற்ப அதுபற்றி கவலைப்படாமல் தன்னுடைய எதிர்ப்பு குரலைக் கொடுத்தபடியே இருந்தார். பட்டாசுக்கடை எதிர்ப்பு காலையில் என்றால் மாலையில் கள்ளுக்கடை மறியலுக்குச் சென்றார். கள்ளுக்கடைக்காரரோ கல் மொத்தையை குமாரசாமி தலையில் உடைத்து கள் அபிஷேகம் செய்து விட்டார். இதற்கெல்லாம் அஞ்சாது குமரன் தன் போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்.

குமரனின் போராட்ட வேகம் மெல்ல, மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் அவரது குடும்பத்தினர் கலக்கமடைந்தனர். அச்சமயத்தில் காந்தியடிகள் அறிவித்திருந்த சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொள்ள இருப்பதாய் குமரன் சொல்ல குடும்பமே பொங்கி எழுந்தது. அவரின் முடிவை ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர். உடன்பிறந்தவர்களையும்,. தாயையும், இளம் மனைவியையும் விட்டு விட்டு சிறைக்குப் போகப் போகிறாயா? என குடும்பமும், உறவுகளும் கடிந்து கொண்டது. உனக்குப் பின் உன் குடும்பத்தை யார் கவனிப்பார்கள்? என சுற்றத்தார்கள் தடுத்தனர். எந்தக் கடிவாளமும் குமரனைக் கட்டுப்படுத்தவில்லை. 

”தேசமே மூச்சு; சுயராஜ்யமே சுவாசம்” என களம் புக முடிவு செய்தார். சத்யாகிரகியாய் 10.01.1932 ல் மூவர்ணக் கொடியை ஏந்தி முன் வரிசையில் வந்தவரை காவல்துறை தடியால் தாக்கிச் சாய்த்தது. மரணத்தின் விளிம்பில் நின்றவரின் உயிர் மறுநாள் அதாவது 11.01.1932 ல் “சுயராஜ்யம்” என்ற இறுதிச் சொல்லோடு பிரிந்தது.. 11.01.1932 ல் அவர் உயிர் பிரிந்தது. ஒரு குடும்பத்தின் சொத்தாய் மட்டும் இருந்த குமரன் இந்த தேசத்தின் சொத்தாய் மாறிப்போனார்.

இன்று (11.01.2019) திருப்பூர் குமரனின் நினைவுநாள்.


No comments:

Post a Comment