Showing posts with label பதிவுகள்.காம். Show all posts
Showing posts with label பதிவுகள்.காம். Show all posts

Thursday, 15 August 2013

உருமாறும் வசவுகள்

பத்தாண்டாகியும்
பாலூட்ட வக்கத்தவளென
சபித்தவர்களின் வசவுகள்
மலராப் பூக்களாய்
மலர்ந்த மலர்களாய்
உவந்த வார்த்தைகளாய்
உறை நீங்கா வாழ்த்துகளாய்
வருடந்தோறும் உருமாறி
முகம் பார்க்க வந்துவிடுகிறது
எவ்வித குற்றவுணர்வுமின்றி
என் திருமண தினத்தில்.

நன்றி : பதிவுகள்

Monday, 1 April 2013

கிணற்றுத்தவளை


சுவாசித்தலுக்கான தகவமைப்பு பெற்றிருந்தும்
வாழ்தலின் சூத்திரத்தை
பிழையாய் கற்று
தடாகத்தின் தடம் தப்பி
கிணற்றடிக்கு வந்திருந்த தவளையிடம்
எப்படியிருக்கிறாய்? என்றேன்.
எந்த போராட்டமுமின்றி
சமர்த்தாய் இருப்பதாய் சொல்லி
அகம் குதித்த தவளை
தன்னையே பலியாக்கிக் கொண்டது
தன்னைப் போலவே
சமர்த்தாய் அங்கிருந்த பாம்பிடம்!

நன்றி : பதிவுகள்

Thursday, 17 January 2013

தனி ஆவர்த்தனம்

காதலைச் சொல்ல
தைரியமற்றவனின்
கவிதையாய்

காமத்தை வடிக்க
தெரியாதவனின்
ஓவியமாய்

ஏமாற்றத்தை ஏற்க
திராணியற்றவனின்
ஒப்பாரியாய்

ஏமாறியதை மறைக்க
முடியாதவனின்
ஏக்கமாய்

தனக்குத்தானே
ரசிக்கத் தெரியாதவனின்
முழு நிர்வாணமாய்

கழிப்பறைகள் எங்கும்
தனி ஆவர்த்தனம் செய்கின்றன
கரிக்குச்சிகள்.

நன்றி : பதிவுகள்

Saturday, 1 December 2012

அகப்படாத வித்தை

காலாரக் கிளம்பி
கருக்கல் மறைவில்
வயிற்றுக்கொரு கையறு பாடி
கையும், காலும்
அழம்பியே பழக்கப்பட்ட தாத்தாவிற்கு....

வருடம் போயும்
பிடிபடவில்லை
பத்துக்கு நாலு கழிப்பறையில்
பக்குவமாய் வயிறு கழுவி
புறம் வருதல்.

நன்றி : பதிவுகள்