Tuesday, 7 May 2013

வாங்கி வந்த வரம்

அடைக்கலமாய் வந்த 
பறவை
தூக்கி வந்த
நாய்க்குட்டி
சேகரித்து வைத்த
பழம்பொருட்கள்
நண்பர்கள் அளித்த
புத்தகங்கள்

வாங்கி வந்த வரத்தை
ஒரு நாளேனும்
தனதாக்கிக் கொள்ள
போராடிக் கொண்டே இருக்கிறாள்
வாக்கப்பட்டு வந்த அவன் மனைவி
முப்பது வருடமாய்.

நன்றி : கணையாழி

Friday, 12 April 2013

எங்கள் வாழ்வு

அதிகாரபலம், ஆணவபலம்
படைபலம்கொண்டு
வீரர்களை புதைத்து விட்டோம் என
புழங்காகிதம் அடைகிறாய்.

முள்வேலிக்குள் வைத்துவிட்டோம்
முன்னிருந்த வேகம் போய்விடும்
நம் சிங்கமயிர் தப்பிவிடும் என
சிந்தை குளிர்கிறாய்.

எல்லை கடந்தவர்கள் எழமாட்டார்கள் 
அகதிகளானவர்கள் ஆர்ப்பரித்து
வரமாட்டார்கள் என நினைக்கிறாய்.

இதுவன்றி
வேறு என்ன செய்யமுடியும் உன்னால்?

பதுங்கி ,பதுங்கி தான் புலி
பாய்ச்சலுக்கு தயாராகும்.
குமுறி, குமுறி தான் மலை
எரிமலையாய் பிளக்கும்.

காலச்சக்கரம் மெல்ல சுழன்று
ஓர் புள்ளிக்கு வரும் தினமொன்றில்
தண்ணீரால் பிரிந்த நாங்கள்
உள்ளோடும் செந்நீரால் இணைவோம்.

இழந்தவைகளை நினைத்து
இருப்பை விட்டுவிடாமல்
இன்னொரு மீட்டெடுப்பில்
இருப்பை உறுதி செய்ய வருவோம்.

தோண்டி வைத்து கொள்ளுங்கள்
புதிய குழியை……
எங்களின் புதிய பாய்ச்சலில்
உங்களை நீங்களே புதைத்துகொள்ள!

உங்களுக்கு வேண்டுமானால்
மரணம் முடிவாகலாம்
எங்களுக்கு அதுதான்
வாழ்வு!....... வாழ்க்கை!

நன்றி : லங்காஸ்ரீ

Monday, 1 April 2013

கிணற்றுத்தவளை


சுவாசித்தலுக்கான தகவமைப்பு பெற்றிருந்தும்
வாழ்தலின் சூத்திரத்தை
பிழையாய் கற்று
தடாகத்தின் தடம் தப்பி
கிணற்றடிக்கு வந்திருந்த தவளையிடம்
எப்படியிருக்கிறாய்? என்றேன்.
எந்த போராட்டமுமின்றி
சமர்த்தாய் இருப்பதாய் சொல்லி
அகம் குதித்த தவளை
தன்னையே பலியாக்கிக் கொண்டது
தன்னைப் போலவே
சமர்த்தாய் அங்கிருந்த பாம்பிடம்!

நன்றி : பதிவுகள்