Monday, 13 September 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 14

 அத்தியாயம்-14

 (நூற்றி இருபது வீரர்கள்)

பா.ரா.வோடு மீண்டும் சூனியனுக்கு பிணக்கு. ஆவேசத்தைக் கொட்டிவிட்டு அமைதிப்படும் சூனியன் போகிற போக்கில் ”எனது ஆனந்த தாண்டவத்தில் தரிசிப்பீர்கள்” என் சொல்லிச் செல்வதில் பின்னொரு விறுவிறுப்பு காத்திருப்பது தெரிகிறது.

கோவிந்தசாமி சுயமாக செயல்பட ஆரம்பித்து விட்டதை அவனுடைய நிழலுக்குச் சொல்லும் சூனியன் அவன் பதிந்திருந்த மூன்று புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி கவிதையை வாசித்துக் காட்டுகிறான். வாசிப்பவர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பேக் ஐ.டி.யை உருவாக்கி அதில் கவிதையை பதிவாக்கியிருப்பதிலும், கவிதையை ஜெய்ஸ்ரீராம் என முடித்திருப்பதிலும் கோவிந்தசாமி இன்னும் சங்கியாகவே நீடிக்கிறான்.

Sunday, 12 September 2021

உறுபசி – மானுட அவலத்தின் மிகுபசி!

சம்பத் என்கின்ற நண்பனின் இறப்பிற்குப் பிறகு அவனுடைய நண்பர்கள் தங்களின் நினைவடுக்குகளின் வழியே அவனை கண்டடையும் கதை உறுபசி நாவல். அவனுடைய வாழ்வின் ஊடாக தங்களுடைய இருப்பை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கின்றனர். இந்த ஒப்பீடு மெல்ல சம்பத்திடமிருந்து விலகி அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் அல்லது அவர்கள் மறைத்து வைத்திருக்கும் எண்ணங்களை அதன் கோர முகங்களோடு வெளிக் கொண்டு வருகிறது. அது அவர்களை விலகி, விலகி சேர வைக்கிறது. சம்பத் இறந்த பிறகு தங்களுக்குப் பரிச்சயமில்லாத கானல் காட்டிற்கு மூன்று நண்பர்களும் பயணம் மேற்கொள்வதில் நாவல் ஆரம்பிக்கிறது. சம்பத் தான் நாவலின் மையம். அவனின் இயல்பு, செயல்பாடு, காதல், கடவுள் மறுப்பு, காமம், வீழ்ச்சி, வாழ்வியலோடு பொருந்த இயலா நிலை ஆகியவைகள் அவனில் இருந்தே பல்வேறு பக்கங்களாய் கிளை விரிக்கிறது.

Sunday, 29 August 2021

காம்கேரின் “வாசக கெளரவம்”!

”காம்கேர்” நிறுவனர் காம்கேர்.புவனேஸ்வரி அவர்கள் முகநூலில் எழுதி வரும் பதிவு ”ஜம்முனு வாழ காம்கேரின் OTP". நம் அன்றாட செயல்பாடுகள், நம்மைச் சுற்றி, நம் வீட்டில் நிகழும் நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்ளவும், கண்டுணரவும் இல்லாது கடந்து விட்ட, கவனிக்கத் தவறிய விசயங்களை சுட்டியும், குட்டியும் அவர் எழுதும் பதிவுகளை அன்றாடம் வாசிக்க இயலாத போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து விடுவேன்.

பிள்ளைகளோடு செலவிடும் நேரங்களில் அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். ”பாடம்”, ”படிப்பினை”, ”அறிவுரை” என எல்லா தளங்களிலும் அந்த பதிவுகள் விசயதானங்களை வழங்கி இருக்கின்றன.
 
எனக்கு மட்டுமல்ல, அவருடைய பதிவுகளை வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அவ்வாறே  கிடைத்திருக்கின்றன என்பதற்கு அவரின் ”காம்கேரின்OTP” பதிவுகளுக்கு  வாசகர்களால் எழுதப்படும் பின்னூட்டங்களே சாட்சி!

Saturday, 28 August 2021

"படைப்பாளி" எனும் பேசுபொருள்!

"வாசிக்க வாங்குனவனுக ஆட்டயப் போட்டுட்டு போயிட்டானுகன்னு புலம்பாமல் முதன் முதலில் வந்த பதிப்பு நுல்கள் தற்போதைய விலையை விட குறைவாக இருக்கும். அவைகளைத் தேடிப் பார்த்து வேண்டிய நூல்களை வாங்கிக் கொள். பணம் நான் தருகிறேன்” என நண்பர் சொல்லியிருந்தார்.

"கரும்பு தின்னக்கூலியா?" என்றாலும், "ஏண்டா இந்த உறுதி மொழியைக் கொடுத்தோம்?" என அவன் நினைத்து விடவும் கூடாது என்பதால் பார்த்து விட்டு சொல்கிறேன் என சொல்லி வைத்திருந்தேன். பா.ரா. புத்தகங்களில் சிலவற்றை வாங்கிக் கொள்ளும் முடிவில் நேற்று வாரக் கடைசி என்பதால் நண்பரோடு வழக்கமாக புத்தகங்கள் வாங்கும் கடைக்கு சென்றிருந்தேன்.

நுழைந்ததும் முகப்பில் ”மாயவலை” வைத்திருந்தார்கள். அதைக் கையில் எடுத்ததும் அங்கிருந்த பையன், சார் ”பா.ரா. பார்க்குறீங்களா?” என்றான். அந்தக் கடையில் பலமுறை நான் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ஒருமுறை கூட புத்தகங்களின் ஆசிரியர் பெயர் சொல்லி இப்படி அந்தக் கடை ஊழியர்கள் கேட்டதில்லை. நேற்று கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. சரி என்றதும் ஒரு புத்தக அடுக்குக்கு அழைத்துச் சென்றான்.