Saturday 22 September 2012

சுயமிழந்த கண்மாய்கள்

வெட்கமின்றி நீரையெல்லாம்
அம்மணத்தால் அலசிக் கழுவும்
சாண் பிள்ளைகள்

அம்மாவின் சேலைத்துணியை
வலையாய் சுமந்து
கெரண்டைக்கால் நீரில்
தாவித் திரியும் கருவாச்சி தேவதைகள்

காற்று கூட
விதேசியாய் வேண்டாமென
கரையில் வந்துறங்கும்
தலைமுறை கண்டவர்கள்

இரை வரத்துக்காக
ஒரு காலூன்றி மறுகால் மடக்கி
தவம் கிடக்கும் வள்ளுவக் கொக்குகள்

புறம் சென்று பொழுது சாய
அகம் திரும்புகையில்
தன்னழகு காண
கரை இறங்கும் வாயில்லா ஜீவன்கள்

கரை மீது நின்று
கள்ளிக் குச்சியும்
கரகரத்த குரலுமாய்
வீடு வந்து சேர் - என
எச்சரிக்கும் அம்மாக்கள்

இப்படியான
தன் சுயத்தை
நகரம் நுகர்ந்த
நம்மைப் போலவே
புறம் தள்ளி கிடக்கிறது
நம்மூர் கண்மாய்களும்.

நன்றி ; திண்ணை