Thursday, 5 December 2013

வேட்கை தணித்த தருணம்

பேறுகாலத்தில் பால் கட்டிக் கனத்த மார்பை
மென்மையாய் உதடு கூட்டி
கனமிறக்கும் குழந்தையைப்போல்
உன்னருகாமை அணையும் தருணமெல்லாம்

சிறுநீரால் நிரம்பி வழியும்
முட்டுச்சந்தை மூக்கைப்பிடித்து
கடந்து செல்பவனைப் போல்
கரைபுரண்டு மிரட்டி போகிறாய்.
கழட்ட வேண்டிய கர்வத்தை
கழட்டமுடியா காமமாக்கி
உரிமையின் உடை தரித்து
கட்டிலறையெங்கும் கறைப்படுத்தி வெளியேறுகிறாய்.

பரவாயில்லை.
சிலமணித்திவலையேனும்
உன்னோடு சிறகை உலர்த்திய
உரிமையில் கேட்கிறேன்.

ஒன்றை மட்டும் சொல்
என் வேதனையில்
உன் வேட்கை தணித்த தருணங்களில்
நீ விரும்பியதாவது கிடைத்ததா என்னிடம்.

நன்றி : யாவரும்.காம்