Saturday, 23 August 2014

புதியன கற்றல் நிகழும் விதம்!

மகனிடம் அவனின் மிஸ்இந்த புத்தகத்தை மாடிக்கு போய் சிக்ஸ்த் கிளாஸ் மிஸ்ஸிடம் கொடுத்து விட்டு வா என்று சொல்லி இருக்கிறார்கள். மாடிக்கு போனவனுக்கு சிக்ஸ்த் கிளாஸ் எங்கிருக்கு? என தெரியவில்லை. கதவில் பார்த்தால் 6 என எந்த எண்ணும் எழுதவில்லை. யோசித்தவன் நேராக மூன்றாவது படிக்கும் தன் அக்காவின் வகுப்புக்குச் சென்றிருக்கிறான்.

தம்பியை பார்த்ததும் வகுப்பு ஆசிரியையிடம் அனுமதி கேட்டு வெளியில் வந்தவளிடம் விபரம் கூறி இருக்கிறான். அவள் அவனை அழைத்துக்கொண்டு போய் “VI” என குறிக்கப்பட்டிருந்த வகுப்பைக் காட்டி இது தான் சிக்ஸ்த் கிளாஸ் என சொல்லி இருக்கிறாள். கூடவே அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அழைத்து போய் ”V”  க்கு பக்கத்தில் இரண்டு கோடு போட்டிருந்தால் அதுசெவன்த் என்றும். மூன்று கோடு போட்டிருந்தால் அதுஎயித் என்றும் சொல்லி கொடுத்து விட்டு அவனை அனுப்பி வைத்து விட்டாள்

Tuesday, 19 August 2014

துன்பத்திற்கு காரணம் ஆசையா?!

காதுக்கு மாட்டும் வளையம் தொடங்கி தோளில் மாட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் போகும் பேக் வரை தனக்கு வாங்கித் தர வேண்டிய பொருட்களையும், அவைகள் சார்ந்து அவள் கொண்டிருந்த விருப்பங்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த மகளிடம் சில நெறிபடுத்தல்களை சொன்ன பின் மேதாவித்தனமாய் என்னை நினைத்துக் கொண்டு, நீ இதையெல்லாம் விரும்புவதற்கு ஆசை தான் காரணம்! அதுனாலதான் ஆசையே துன்பத்திற்கு காரணம்னு புத்தர் சொல்லி இருக்காருன்னு சொன்னேன்.

"நான் நல்லா படிக்கனும். அப்படி வரனும், இப்படி இருக்கனும்னு நீங்க ஆசைபடுறதா எப்பவும் சொல்றீங்களே" அது உங்களுக்கு துன்பமா? என்றாள்.

எனக்கு வந்த சோதனையான்னு நினைச்சுக்கிட்டு, "அது வேற, இது வேற" என்றேன்.

Sunday, 17 August 2014

என் கேள்வியும், சாருவின் பதிலும்

அந்திமழை.காம் இதழில் வெளிவந்தஅறம் பொருள் இன்பம்என்ற பகுதியில் வெளியான என் கேள்வியும், சாருவின் பதிலும்

காமத்தால் மேவிய வழி நிகழ்வைச் சொல்லுதல்,  புனைவின் வழி நிகழ்வைச் சொல்லுதல், நிகழ்வை அப்படியே தேர்ந்த வார்த்தைகளில் சொல்லுதல், எந்தப் புனைவும் தேர்ந்தெடுத்தலுமின்றி அப்படியே நிகழ்வை அதன் போக்கில் பாசாங்கில்லாமல் சொல்லுதல் -  இதில் இலக்கியம் என்பதற்கான வரையறை என்ன? காரணம், இவைகள் அனைத்தும் இலக்கியத்தின் கீழ் தான் வகைபடுத்தப்பட்டு வருகின்றன. புதிதாய் இலக்கிய வாசிப்புத் தளத்திற்குள் நுழையும் என் போன்ற முதல் தலைமுறை வாசகனாய் முன்னோக்கி வருபவர்கள்  எதை அதற்கான வரையறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்?

மு.கோபி சரபோஜி / இராமநாதபுரம்

Saturday, 16 August 2014

குழந்தைகளை நேசித்தாலே போதும்!

சுதந்திரதினம் என்பதால் அரைநாள் தான் கிளாஸ். அதுலயும் ஒன்னவர் ஃபங்சனுக்கு போயிடும். இரண்டு நோட்டும், ஸ்நாக்சும் தான் கொண்டு போகனும். அதுனால என் ஸ்கூல் பேக்குக்கு பதிலா மம்மி கிட்ட இருக்கிற பேக்கை கொண்டு போகவா? என மகள் கேட்டாள்.

குடும்ப நண்பர் மூலம் கிஃப்டாக வந்த வேலைப்பாடுள்ள அந்த பேக்கை வீணாக்கி விடுவாளோ என்ற எண்ணத்தில் நான் வேண்டாம் என்றேன். அவளும் பலவாறு பேசிப் பார்த்தாள். நானும் பிடிகொடுக்காமல் மறுத்து விட்டேன்.

இரவில் உறங்குவதற்கு முன் தன் அம்மாவிடம் பேசிப்பார்த்தவள் எந்த பேக்கை நாளைக்கு நான் எடுத்துட்டு போறதுன்னு முடிவு பண்ணிவையுங்க என சொல்லி விட்டு உறங்க போய்விட்டாள்.