Tuesday 21 October 2014

புரிதலில் இருந்த தெளிவு!

மகனுக்கும், மகளுக்கும் நடந்த சண்டையில் அவளின் உதட்டில் குத்தி இரத்தம் வரவைத்து விட்டான் என்ற குற்றச்சாட்டோடு மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.

வழக்கம் போல ஆலமரம் இல்லா நாட்டாமையாய் பஞ்சாயத்தை நடத்துவதற்காக மகளை அழைத்து விசாரித்தேன்.

கழுத்தில் அணியும் பாசியில் தொடங்கி பள்ளிப் பேருந்தில் அமர்ந்து வரும் இருக்கை வரைக்கும் தனக்கும், தன் தம்பிக்கும் இருந்து வரும் பிரச்சனைகளை சொல்லி முடித்தாள்.

மகனை அழைத்தேன். அதெல்லாம் ஒன்னுமில்லை டாடி. அதுதான் என்னைய அடிச்சிக்கிட்டும், எனக்கிட்ட சேட்டை பண்ணிக்கிட்டும் இருக்கு. சேட்டை செஞ்சா அடிக்காம என்ன பன்னுவாங்களாம்? என சொல்லி முடித்தான்.

சேட்டை செஞ்சா அடிக்கனும் என்கின்ற தப்பான எண்ணம் எப்படி அவனுக்குள் வந்தது என்ற நினைப்பு ஒருபுறமிருந்தாலும், அவன் எண்ணப்படியே சொல்லிப் பார்ப்போமே என நினைத்துக்கொண்டு அக்காவை வேறு யாராவது அடிச்சா நீ திருப்பி அடிக்கலாம். நீயே அக்காவை அடிச்சா எப்படிடா? என்றேன்.

அப்படியெல்லாம் செய்ய முடியாது என்றவனிடம், ஏன்? என்றேன்.

நான் போய் அடிச்சு அந்த பையன் அவனுடைய அம்மாக்கிட்ட சொல்லி அவங்க நம்ம கூட சண்டைக்கு வந்தா என்ன செய்யிறது? அதுனால அப்படி எல்லாம் செய்ய முடியாது என்றான்.

இந்த தெளிவும். புரிதலும் இருந்தால் போதும். ஆயிரம் சண்டைகள் போட்டாலும் அசராமல் சமாதானம் செய்து வைக்கலாம் என நினைத்துக் கொண்டேன். குழந்தைகளின் இந்த மனநிலை வளர்ந்தவர்களுக்கும் வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நினைக்க மட்டும் தான் முடிகிறது!